TNPSC Thervupettagam

இலக்கிய மாமணி விருது: க.பூரணச்சந்திரன்

March 3 , 2024 142 days 175 0
  • பேராசிரியர் க.பூரணச்சந்திரன் (1949) தமிழ்ப் புலமைத்துவ உலகில் அரிய பணிகள் பலவற்றைச் செய்த ஆளுமை ஆவார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய புலமைத்துறை சார்ந்த செயல்பாடுகள் என்பவை பல பரிமாணங்களைக் கொண்டவை. தமிழில் இலக்கியக் கோட்பாட்டு உருவாக்கம், தமிழியல் தொடர்பான ஆய்வுகள், பல்துறை சார்ந்த மொழியாக்கங்கள் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்புகள் விதந்து போற்றத்தக்கவை.
  • தமிழில் சிறுபத்திரிகை இயக்கம் என்பது 1970களில் புதிய பரிமாணம் பெற்றது. பல்வேறு துறைகள் சார்ந்து, வெகுசனப் பண்பாட்டுக்கு மாற்றான புதிய எழுத்துமுறைகள் உருவாயின. அந்த வகையில் திருச்சி நகரத்தை முதன்மையாகக் கொண்டு சிறு பத்திரிகைக் குழு ஒன்று செயல்பட்டது. ‘திருச்சி வாசகர் அரங்கம்’, ‘திருச்சி சினி ஃபோரம்’, ‘திருச்சி நாடக சங்கம்’ என்ற பெயர்களில் இயங்கிய இக்குழுவில் பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட், அம்ஷன்குமார், கோபால் இராஜாராம், வெளி ரங்கராஜன்,எஸ்.சாமிநாதன், ராஜன்குறை ஆகியோர் செயல்பட்டனர்.
  • இந்தக் குழுவோடு தன்னை இணைத்துக்கொண்டு சிறுபத்திரிகை மரபில் செயல்பட்டவர்தான் க.பூரணச்சந்திரன். ஆங்கில மொழியிலும் புலமைத்துவம் உடையவர் பூரணச்சந்திரன். அவர் தமிழில் மாற்று மரபில் செயல்பட, திருச்சியில் இயங்கிய சிறு இயக்கங்கள் அடிப்படையாக அமைந்தன.அந்தத் தொடர்புகளே அவர் நவீனச் செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
  • 1980களில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அவருக்குத் திட்ட ஆய்வுப் பணிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாயின. இதில் ‘தமிழ்த் திறனாய்வு வரலாறு’, ‘தமிழ் வழிபட்ட இலக்கியக் கோட்பாடுகள்’, ‘தமிழகச் சுற்றுச்சூழல்’, ‘ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சூழல்கள்’ ஆகிய பல்வேறு திட்ட ஆய்வுப் பணிகளை நிகழ்த்தினார். இதன் தொடர்ச்சியாகவே இலக்கியத் திறனாய்வு நூல்களையும் இலக்கியக் கோட்பாட்டு நூல்களையும் உருவாக்கத் தொடங்கினார்.
  • இவ்வகையில் தொடர்பியல் துறை சார்ந்த கோட்பாட்டு நூல்களை எழுதினார். இதன் தொடர்ச்சியாகக் கவிதைக் கோட்பாடுகள், தொல்காப்பியம் சார்ந்த கோட்பாடுகள், பல்வேறு ஒப்பாய்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆறு நூல்களை இவர் உருவாக்கியுள்ளார். இவை இவரது தனித்த பங்களிப்புகள். இதன் மூலம் தமிழ்ச் சூழலில் தொடர்பியல் துறை சார்ந்த கோட்பாட்டு உருவாக்கத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளார். அதைப் போல தமிழ் ஒப்பிலக்கிய ஆய்வுகளுக்கான அடிப்படைகள் குறித்தும் இவரது பங்களிப்பு முக்கியமானது.
  • ‘கவிதையியல் - வாசிப்பும் விமரிசனமும்’ என்ற இவரது நூல், கவிதை குறித்த புரிதல்களுக்கு அடிப்படையான கையேடு. கவிதை பற்றிய விவரணைகள், கவிதை அனுபவம், கவிதைகளை வாசிக்கும் முறை, கவிதைகளில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு கூறுகளை எப்படியெல்லாம் புரிந்துகொள்வது என்ற கூறுகளை அந்த நூல் சிறப்பாகவே வெளிப்படுத்துகிறது.
  • பொருள்கோள் என்பது ஓர் இலக்கிய உத்தி. இத்தன்மை தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக்கும் முறைமைகளை நவீனக் கோட்பாட்டு முறைகளோடு இணைத்தும் பூரணச்சந்திரன் ஆய்வுசெய்திருக்கிறார். இதன் மூலம் தமிழில் ‘பொருள்கோள்’ என்னும் இலக்கிய மரபு தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை தொடரும் மரபைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • பேராசிரியர் தனிநாயகம் அவர்களின் ‘நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்’ என்ற இவரது மொழியாக்க நூல், தமிழின் செவ்விலக்கியக் கவிதை மரபைப் புரிந்துகொள்ள உதவும் அடிப்படையான நூல்.உலக இலக்கிய மரபுகளோடு தமிழ்ச் செவ்விலக்கிய மரபை ஒப்பாய்வு செய்து பேராசிரியர் தனிநாயகம் எழுதிய இந்நூலை மொழியாக்கம் செய்ததன் மூலம் தமிழ்ச் செவ்விலக்கியக் கவிதை மரபைத் தமிழ் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பூரணச்சந்திரன் உருவாக்கியுள்ளார்.
  • பெரிதும் பாராட்டிக் கொண்டாட வேண்டிய பூரணச்சந்திரனின் சாதனை என்பது அவரது மொழியாக்கப் பணிகளே. அடையாளம், எதிர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகிய பதிப்பகங்களுக்காக இவர் செய்துள்ள மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. ‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு’ எனும் வெண்டி டோனிகர் அவர்களின் சுமார் 900 பக்க அளவிலான நூலை இவர் மொழியாக்கம் செய்து எதிர்வெளியீடு வெளியிட்டுள்ளது.
  •  சமஸ்கிருதப் பின்புலத்தில் உள்ள பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்து மதம் குறித்து வெண்டி டோனிகர் செய்துள்ள ஆய்வு என்பது ஒரு மாற்றுப் பார்வையைக் கொடுக்க வல்லதாகும். இந்தியச் சமூகத்தில் செயல்படும் இந்து மதம் குறித்த புரிதலுக்கு இந்நூல் அடிப்படையாக அமைகிறது.
  • இந்த நுலைத் தமிழ் வாசகர்களுக்கு மொழியாக்கம் செய்த பூரணச்சந்திரனின் பணி பாராட்டத்தக்கது. நியூசெஞ்சுரி புக் ஹவுஸுக்காகலூயி அல்தூசா எழுதிய நூலை ‘மார்க்சுக்கு ஆதரவாக’ என்னும் தலைப்பில் பூரணச்சந்திரன் மொழியாக்கம் செய்துள்ளார். இதைப் போலவே தாரிக் அலி அவர்கள் எழுதிய ‘லெனின் சந்தித்த நெருக்கடிகள்’ எனும் நூலும் குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் மார்க்சிய செவ்விலக்கிய நூல்கள்மொழியாக்கப் பணியில் பூரணச்சந்திரனின்பணி என்பது பெரிதும் பேசவேண்டியது.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மிகச் சுருக்கமான அறிமுகம்’ எனும் ஆங்கில நூல்களை அடையாளம் பதிப்பகம், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. இவ்வரிசையில் மிக அதிகமான நூல்களை மொழியாக்கம் செய்தவர் பூரணச்சந்திரன்தான்.
  • இசை, உலகமயமாக்கல், சமூகவியல், இறையியல், பயங்கரவாதம், நீட்சே என்று ஆறுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் மொழியாக்கம் செய்துள்ளார். இதைப் போலவே ‘தொடக்க நிலையினருக்கு’ என்னும் தலைப்பில் வெளிவரும் கோட்பாட்டு நூல்களும் முக்கியமானவை. இதில் ‘பின்நவீனத்துவம்’ போன்ற சில நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார் பேராசிரியர்.
  • தெலுங்குக் கவிஞர் வரவர ராவ் அவரது, ‘சிறைப்பட்ட கற்பனை’ என்ற தலைப்பில் சிறையிலிருந்து அவர் எழுதிய கடிதங்கள் மிக முக்கியமானவை. அதனை, எதிர் வெளியீடுகளாக பூரணச்சந்திரன் மொழியாக்கம் செய்துள்ளார். இதற்குப் புகழ்வாய்ந்த அறிஞர் கூகிவா தியாங்கோ எழுதியுள்ள முன்னுரை குறிப்பிடத்தக்கது.
  • தமிழ்ச் சிறுபத்திரிகை மரபில் உருவான தமிழாசிரியரான பூரணச்சந்திரன், ஆங்கிலப் புலமை மூலம் விரிவான வாசிப்புக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர். இருமொழிப் புலமையுடன் செயல்படும் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்த வகையில் தமிழில் புதிய கோட்பாட்டு வரையறைகள், குறிப்பாகத் தொடர்பியல் துறை சார்ந்த கோட்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
  • வளர்ச்சி பெற்றிருக்கும் இன்றைய ஊடகத்துறையில், இவரது கோட்பாட்டு ஆய்வுகள் பயன்தரத்தக்கவை. இவர் செய்திருக்கும் மொழியாக்கங்கள் மூலம், இலக்கியம், அரசியல், வரலாறு, வெகுசன அறிவியல் ஆகிய துறைகள் குறித்த புலமைத்துவ அறிவைப் பெறமுடிகிறது.
  • தொடர்ந்து கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக புலமைத்துவச் செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழும் க.பூரணச்சந்திரனுக்கு தமிழக அரசு செய்துள்ள அங்கீகாரமாக இவ்விருதைக் கருதலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்