TNPSC Thervupettagam
October 14 , 2020 1558 days 773 0
  • கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது என்கிற முனைப்பில் உலகம் மிகப் பெரிய சவாலை சந்தித்து வருகிறது.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம், ஆரவாரமும் பரபரப்பும் இல்லாத வாழ்க்கைதான் காற்று மாசு பிரச்னைக்கானத் தீர்வு.
  • வாகனங்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேறும் கரியமில வாயு முற்றிலுமாக அகன்றபோது வாயு மண்டலம் சுத்தமானதை அனுபவபூர்வமாக உணர்ந்தோம்.
  • கொள்ளை நோய்த்தொற்றால், ஐரோப்பாவில் மோட்டார் வாகனங்களின் விற்பனை சரிந்ததும், மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்ததும் ஒரு மிகப் பெரிய திருப்பம். அதற்குக் காரணம், சுற்றுச்சூழல் குறித்த புரிதலல்ல. மின்சார வாகனங்களின் விலை, பெட்ரோல் - டீசல் வாகனங்களின் விலைக்கு சமமாகக் குறைந்ததுதான்.
  • ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் காற்று மாசின் அளவைக் குறைப்பதற்காக மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க முற்பட்டதைத் தொடர்ந்து, இப்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
  • டீசல் என்ஜின் கண்டுபிடிப்பதற்கு முன்பே மின்சார வாகனங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்பது பலருக்கும் தெரியாது.
  • 1842-இல் ராபர்ட் டேவிட்சன் என்கிற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், ஜிங் அமில பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ரயில் என்ஜினை அறிமுகப்படுத்தினார். நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கு, மின்சார என்ஜினால் வரவேற்பு குறைந்துவிடும் என்பதால் எதிர்ப்புக் கிளம்பியது.
  • வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுமோ என்கிற அச்சம் ஒரு காரணம். பேட்டரி மூலம் அதிக தூரம் இயங்க முடியாது என்பது இன்னொரு காரணம். 1880-இல் ரயில் பாதைகளில் மின்சாரம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது என்றாலும்கூட, அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

மின்சார மோட்டார் வாகனங்கள்

  • மின்சார மோட்டார் வாகனங்களின் வரலாறும் அதேபோலத்தான். 1881 நவம்பர் மாதம் குஸ்தேவ் டிரெளவே என்கிற பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர், மின்சாரத்தின் மூலம் இயங்கும் மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை பாரீஸில் அறிமுகப்படுத்தினார்.
  • பேட்டரி மூலம் அதிக தூரம் பயணிக்க முடியாது என்பதால், மின்சார வாகன முயற்சி வரவேற்பை இழந்தது. இதற்குள் பெட்ரோல் - டீசலால் இயங்கும் வாகனங்கள் 20-ஆம் நூற்றாண்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிட்டன.
  • இப்போது பேட்டரி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமும், மின்னூட்டம் செய்வதற்கான வசதிகளும் அதிகரித்திருக்கும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
  • இப்போதைய நிலையில், மின்னூட்டம் செய்யப்பட்ட பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்கள் 300 கி.மீ. வரை பயணிக்க முடியும். 170 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். உலகம் முழுவதும் மின்சார வாகனப் பயன்பாட்டுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது.
  • உலகிலுள்ள வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் அடுத்த 15 - 20 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு விடை கொடுத்து, முழுவதுமாக மின்சார வாகனங்களுக்கு மாறும் திட்டத்தை அறிவித்திருக்கின்றன.
  • 2025-இல் நார்வேயும், 2030-இல் ஜெர்மனியும், 2035-இல் பிரிட்டனும், 2040-இல் பிரான்ஸும் பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு விடை கொடுப்பதற்கான இலக்கை நிர்ணயித்திருக்கின்றன.
  • இந்தியாவும்கூட 2030-க்குப் பிறகு பெட்ரோல் - டீசல் வாகனங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
  • இந்திய அரசு இலக்கு நிர்ணயித்தது மட்டுமல்லாமல், மின்சார வாகனங்களின் தயாரிப்பையும், விற்பனையையும் ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவித்திருக்கிறது.
  • மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்காக பெற்ற கடனுக்கான வட்டியில், ரூ.1.5 லட்சம் வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • அதுமட்டுமல்லாமல், பல மானியங்கள், விதிவிலக்குகள், வரி விலக்குகள் போன்றவை மாநில அரசுகளாலும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • பேட்டரிகளுக்கு மின்னூட்டம் செய்வது மிகப் பெரிய சவால். அதனால், மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 62 நகரங்களில் 2,636 மின்னூட்ட நிலையங்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
  • தெலங்கானா அரசு கட்டடம் கட்டும் விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிதாக எழுப்பப்படும் எல்லா கட்டடங்களிலும் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்ய வழிகோலும் கட்டமைப்பை கட்டாயமாக்கி இருக்கிறது.
  • தில்லி அரசு சமீபத்தில் மின்சார வாகனங்களுக்கான கொள்கையை அறிவித்திருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், மின்சார ரிக்ஷாக்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை வாங்கினால் ரூ.30,000 மானியமும் மின்சார மகிழுந்துகளை வாங்கினால் ரூ.1.5 லட்சம் மானியமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
  • அதேபோல குடியிருப்புகளிலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களிலும் மின்னூட்ட வசதியை உருவாக்குவதற்கு 100% மானியம் வழங்க உத்தேசித்திருக்கிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று மனித இனத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும்கூட, வாகனப் புகையிலிருந்து நாம் விடுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது. வாகனங்கள் மின்சாரமயமாவது வரவேற்கப்பட வேண்டிய முடிவு. அதே நேரத்தில், மின் உற்பத்தியை அதிகரிக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது..

நன்றி: தினமணி (14-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்