TNPSC Thervupettagam

இலக்கை நோக்கிய முனைப்பு

November 17 , 2022 632 days 367 0
  • எகிப்தின் ஷரம்-எல்-ஷேக் நகரில் கூடிய 27-ஆவது பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில், உலக வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான நீண்டகால செயல்திட்டத்தை இந்தியா முன்வைத்திருக்கிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை சாத்தியப்படுத்தும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது இந்தியாவின் உறுதிமொழி.
  • இந்த உறுதிமொழியை இந்தியா எவ்வாறு நிறைவேற்றப்போகிறது என்பதற்கான தெளிவான வியூகங்களையும், இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இம்மாநாட்டில் நவம்பர் 14 அன்று வெளியிட்டிருக்கிறார். இதற்கு முந்தைய மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளின் தொடர்ச்சியாக இது அமைந்திருக்கிறது.
  • 2021 நவம்பரில் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் கூடிய 26-ஆவது பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 2070-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியம் அளவாக்குவது (நெட் ஜீரோ) அல்லது அதன் தாக்கத்தை இயன்றவரை குறைப்பது என்ற திட்டத்தை முன்வைத்திருந்தார். உலகின் ஆற்றல் மூலமான சூரியசக்தியை அதிக அளவில் பயன்படுத்துவதன் வாயிலாக, புதைபடிவ எரிபொருள்களின் தேவையைக் குறைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
  • காலநிலை மாற்றத்தால் நிகழும் பருவம் தவறிய மழைப்பொழிவு, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களும், கடல் மட்டம் உயருதல், துருவப்பகுதிகளில் பனிப்பாளங்கள் உருகுதல் போன்ற சமநிலையற்ற நிகழ்வுகளும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. புவி வெப்பமயமாதலைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தை இந்நிகழ்வுகள் உருவாக்கியிருக்கின்றன.
  • இதுதொடர்பாக பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 2015-இல் கூடிய 21-ஆவது பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் உருவான ஐ.நா. பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் 195 நாடுகள் கையொப்பமிட்டன. புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் உயரக் கூடாது என்பதும், அதற்கு பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதே தீர்வு என்பதும் பாரீஸ் ஒப்பந்தத்தின் அடிப்படைகள்.
  • இதனை உலக நாடுகள் எவ்வாறு நிறைவேற்ற உள்ளன என்பது தொடர்பான தேசிய இலக்குகளை 2022-க்குள் அறிவிக்க வேண்டும் என்று பாரீஸ் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. அதன்படி இதுவரை இந்தியா உள்பட 57 நாடுகள், தங்கள் தேசிய அளவிலான தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை (என்டிசி) வெளியிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, எகிப்தில் இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் கொள்கை விளக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை உத்தேசித்து கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திவரும் பல்வேறு செயல்திட்டங்களின் தொடர்ச்சியாகவும், சென்ற ஆண்டு உச்சிமாநாட்டில் இந்தியா அளித்த உறுதிமொழியின் விரிவாக்கமாகவும் அமைச்சரின் அறிவிப்பு அமைந்திருக்கிறது. உலக கார்பன் வெளிப்பாட்டில் இந்தியாவின் பங்களிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான, குறைந்தபட்ச கார்பன் உமிழ்வுக்கான நீண்டகால வியூகத் திட்டம் (எல்டி-எல்இடிஎஸ்) இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் கிடைக்கும் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு, சுயசார்பு, எரிபொருள் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இவை திட்டமிடப்பட உள்ளன.
  • தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகன எரிபொருள்களில் 10 % எத்தனால் கலக்கப்படுகிறது. கரும்புக் கழிவுப்பாகிலிருந்தும் தானியக் கழிவுகளிலிருந்தும் உற்பத்தி செய்யப்படும் எத்தனால் இயற்கைக்கு உகந்த நண்பனாகும். 2025-க்குள் இதன் கலப்பு அளவை 20 % ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு அண்மைக்காலமாக இந்திய அரசு அதிக கவனம் கொடுத்து வருகிறது. மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கப்படும் சலுகைகள் வாயிலாக மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
  • அதேபோல, தனிப்பட்ட போக்குவரத்து சாதனங்களை அதிகமானோர் பயன்படுத்துவதால் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் குறைக்க, பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிவித்திருப்பது நல்ல அம்சம். 2021-இல் தொடங்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் மிஷன் திட்டம், எரிபொருள் சார்பில் புதிய மாற்றங்களுக்கு வித்திடுவதாகும். உலக அளவில் இந்தியாவை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கம்.
  • தொழிற்சாலைகளில் உருவாகும் கரியமில வாயுவில் 15 % வாயுவை உறிஞ்சக்கூடியதாக இந்தியாவின் வனப்பகுதி 2016-இல் இருந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2030-க்குள் இந்த அளவை தினசரி 300 கோடி டன்னாக உயர்த்தும் வகையில் வனப்பரப்பளவை அதிகரிப்பது என என்டிசி இலக்கு நிர்ணயித்திருக்கிறது. நாட்டின் மின்னுற்பத்தியில் புதைபடிவ எரிபொருள்களின் தேவையை பாதியாகக் குறைப்பதன் வாயிலாக 2030-க்குள் கார்பன் உமிழ்வை 45 % குறைப்பது, அதற்கேற்றவாறு அணுசக்திப் பயன்பாட்டை மும்மடங்காக்குதல் ஆகியவை இந்தியாவின் திட்ட இலக்குகளாக உள்ளன.
  • புவி வெப்பமயமாதலைத் தடுக்க வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தேவையான நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, கடனுதவிகளை வழங்குவது அவசியம் என்பதையும் இந்தியா சுட்டிக்காட்டியிருக்கிறது. இன்றைய புவி வெப்பமயமாதலுக்கு மூலகாரணமே வளர்ந்த நாடுகளின் அதீத கார்பன் உமிழ்வுதான் என்பதால், அந்த நாடுகள் பிராயச்சித்தமாக இந்த உதவிகளைச் செய்தாக வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு நியாயமானது; கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டியதும்கூட.

நன்றி: தினமணி (17 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்