TNPSC Thervupettagam

இலங்கையின் எளிய இலக்கா இந்திய மீனவர்கள்?

August 15 , 2024 105 days 80 0

இலங்கையின் எளிய இலக்கா இந்திய மீனவர்கள்?

  • இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல்கள் முடிவின்றித் தொடர்கின்றன. ஜூலை 31 அன்று, சர்வதேச எல்லையை மீறி மீன்பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதல் இதற்குச் சமீபத்திய உதாரணம்.
  • இந்தத் தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்து, மீனவர்கள் நால்வர் கடலில் விழுந்தனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் மீட்கப்பட்டு இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னொருவர் இன்னும் மீட்கப்படவில்லை.
  • சில நாள்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் 32 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட தகவலின்படி 2010-2020க்கு இடைப்பட்ட காலத்தில், தமிழக மீனவர்கள் 3,470 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்ததைக் கண்டித்து, தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மீனவத் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, நவாஸ் கனி, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினருடன் டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரிக்கைவிடுத்தனர்.
  • டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மீனவர்கள் போராட்டமும் நடத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தச் சூழலில்தான் மீனவர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் அதிர்ச்சியும் நம்பிக்கையின்மையும் அடைந்துள்ளனர்.
  • 2024 ஜூன் 15இலிருந்து இதுவரை 109 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் 52 பேர் விடுவிக்கப்பட்டனர். 12 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். 45 பேர் நீதிமன்றக் காவலில் இருப்பதாக மீனவப் பிரதிநிதிகளில் ஒருவரான சேசு ராஜா கூறுகிறார். மீனவர்கள் பிரச்சினையில் கச்சத்தீவு ஒப்பந்தமும் ஒரு முக்கியக் காரணிதான்.
  • இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1976ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் கடல் எல்லைகளை வரையறுக்க மேற்கொண்ட ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்கு இருந்த மீன்பிடி உரிமைகள் மறுக்கப்பட்டன.
  • நாடாளுமன்றம் செயல்பாட்டில் இருந்த காலக்கட்டத்திலேயே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது குறித்து விவாதிக்காமல், நெருக்கடி நிலையின்போது இந்த எல்லை வரையறை ஒப்பந்தத்தை மேற்கொண்டது காங்கிரஸ் ஆட்சியின் மாபெரும் தவறாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
  • இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 368க்குப் பாதகமானதாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது. கூடவே, சர்வதேசக் கடல் எல்லைகளை வகுக்கும் ஐ.நா.வின் 1958 ஜெனீவா ஒப்பந்தத்தையும் மீறிய செயல்பாடு இது. இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைகள் சரி சமமாகப் பிரிக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறது ஐ.நா. ஒப்பந்தம். ஆனால், தலைமன்னாரிலிருந்து 18 கடல் மைல் தொலைவிலும் ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு உள்ளது.
  • கச்சத்தீவு மீட்பு ஒருபக்கம் இருந்தாலும், நட்புறவுள்ள ஒரு நாடு நம் குடிமக்களுடன் விரோத மனப்பான்மையுடன் நடந்துகொள்வதைக் கண்டிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழக மீனவர்களின் பாதுகாப்பிலும் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்