TNPSC Thervupettagam

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான்

February 10 , 2023 549 days 267 0
  • கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. இலங்கையைப் போன்றே, பாகிஸ்தானும் திவால் நிலையை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
  • கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை பெய்த அடைமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பயிர் சாகுபடி சுமார் 80 % வரை பாதிக்கப்பட்டது. பலூசிஸ்தான் மாகாணத்தின் பல நகரங்களில் கோதுமைக்காக மக்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கோதுமை ஏற்றி வரும் லாரி என்று தெரிந்தால் அதை மக்கள் துரத்திக் கொண்டு ஓடுவது அந்த நாட்டின் பல பகுதிகளில் இயல்பாகிவிட்டது.
  • கோதுமை மட்டுமன்றி இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஒரு கிலோ சர்க்கரை ரூ.155-க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.280-க்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.800-க்கும் விற்கப்படுகிறது.
  • பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரே நாளில் ரூ.35 உயர்த்தி நிதியமைச்சர் இஷாக் டார் அறிவித்தார். இதையடுத்து, அந்த நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.249.80-ஆகவும், டீசல் விலை ரூ.262.80-ஆகவும் உள்ளது. எரிபொருளுக்காக வாகனங்கள் பல கி.மீ. தொலைவு வரிசையில் நிற்கின்றன. பல மாகாணங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. "இந்த விலை உயர்வு பகுதி அளவானதுதான். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக பிப்ரவரி மாத மத்தியில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படும்' என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சமையல் எரிவாயு, உருளைகள் (சிலிண்டர்) தட்டுப்பாடும் உச்சத்தில் உள்ளது.
  • மின்சாரத் துறையின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக கிடுகிடுவென அதிகரித்துள்ளதால், பாகிஸ்தான் மக்கள் மின்சாரப் பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார். மின்சாரப் பயன்பாட்டை குறைக்க சந்தைகளை இரவு 8.30 மணிக்குள்ளும், திருமண மண்டபங்கள், உணவகங்களை இரவு 10 மணிக்குள்ளும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்டவர்களைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
  • அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருள்கள், மூலப் பொருள்கள், மருந்துகள் போன்றவற்றை வெளியே கொண்டுவர முடியாமல் துறைமுகங்களில் சரக்குப் பெட்டகங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
  • கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி, அந்நியச் செலாவணி 3.08 கோடி பில்லியன் டாலர் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதை வைத்து அடுத்த 3 வாரங்களை மட்டுமே சமாளிக்க முடியும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இறக்குமதியையே நம்பி உள்ள அந் நாட்டுக்கு இது கடும் சவாலாக உருவெடுத்துள்ளது.
  • 2021-22 நிதியாண்டில் பாகிஸ்தானின் கடன் தொகை 59 ஆயிரம் பில்லியன் டாலர் ஆகும். இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 89 % என்பதில் இருந்தே இதன் தீவிரத்தை உணர முடியும். சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இதற்கு முன்னர் 2019-இல் 6 பில்லியன் டாலர் கடன் பெற்றுள்ள நிலையில், மீண்டும் கடன் பெறும் முயற்சியில் இறங்கியது. ஆனால், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கடும் நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதிப்பதால் இழுபறி நீடிக்கிறது.
  • பொருளாதார மூச்சுத் திணறலில் இருந்து தப்பிக்க சீனாவிடமும், ஐக்கிய அரபு அமீரகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது. ரூ.2.50 லட்சம் கோடி கடன் தருமாறு சவூதி அரேபியாவிடம் பாகிஸ்தான் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • தவறான ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார மேலாண்மைதான் பாகிஸ்தானின் இன்றைய நிலைக்குக் காரணம். இந்திய எதிர்ப்பை வைத்தே காலத்தை ஓட்டலாம் என்று கருதும் அரசியல்வாதிகள், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையையும் பெரிய அளவில் மேற்கொள்ளாததன் விளைவுதான் இது.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019-இல் ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதியை அந்நாடு நிறுத்தியதும் மற்றொரு காரணம். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பலவீனப்பட்ட நிலையில் இருக்கிறது அந்த நாடு.
  • பாகிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அங்கு போட்டி அரசு அமைக்க சில பயங்கரவாத குழுக்கள் முயன்றுவருகின்றன. போட்டி அரசு அமைப்பதாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.
  • இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நமது அண்டை நாடுகள் பொருளாதார ரீதியாக வலுவிழப்பது நமக்கு நல்லதல்ல. அகதிகள் ஊடுருவல், அதனால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் போன்ற பல சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
  • அந்நிய உதவியை அளவுக்கு அதிகமாக நம்பினால் கடனில் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை. ராணுவத்துக்கு செலவிடும் நிதியைக் குறைத்து ஆக்கபூர்வ வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சில ஆண்டுகளுக்குப் பிறகாவது பாகிஸ்தான் மீள முடியும். ஆனால், அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள்கூட தென்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியதாகும்.

நன்றி: தினமணி (10 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்