TNPSC Thervupettagam

இலங்கை அதிபர் திசாநாயக்க கூட்டணியின் சரித்திர வெற்றி... தமிழர்களுக்கு சாதகமா, பாதகமா?

November 16 , 2024 8 days 24 0

இலங்கை அதிபர் திசாநாயக்க கூட்டணியின் சரித்திர வெற்றி... தமிழர்களுக்கு சாதகமா, பாதகமா?

  • இலங்கை அரசியல் களம் கொண்டாட்ட களமாக மாறியுள்ளது. காரணம், அந்நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ஆளும் என்பிபி கூட்டணி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
  • ஒரு பக்கம் உள்நாட்டில் கொண்டாட்டங்கள் களை கட்டி வரும் சூழலில், அங்கே வாழும் தமிழர்கள், இங்கே அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் பிரமுகர்களின் எண்ணங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. இலங்கை அதிபர் திசாநாயக்க கூட்டணியின் சரித்திர வெற்றி... தமிழர்களுக்கு சாதகமா, பாதகமா என்று அலசினால் இதன் நிமித்தமாக சில புரிதல்களை எட்டலாம்.

யார் இந்த அனுர குமார திசாநாயக்க?

  • இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 1968-ல் அனுர குமார திசாநாயக்க பிறந்தார். 1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)-யில் இணைந்தார்.
  • தனது 20-வது வயதில் தொடங்கி அரசியல் வாழ்க்கையில் தன்னை விறுவிறுவென்று வலுவான இடத்தில் நிலைநிறுத்திக் கொண்ட திசாநாயக்க தீவிர இடதுசாரி கொள்கை உடையவர். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனற சிங்கள பெரும்பான்மைவாதம் தான் ஆரம்ப காலத்தில் இருந்தே அவரது நிலைப்பாடாக இருந்துள்ளது. இதனால் அவர் அதிபராகியிருப்பது அதுவும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் அதிபராகியிருப்பது அங்குள்ள தமிழர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்வாதாரங்களுக்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும், கலாச்சார அடையாளங்களுக்காகவும் போராட வேண்டியிருக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.
  • யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திசாநாயக்கவின் பிரச்சாரம் போதும் அவரது அரசியல் நிலைப்பாட்டை பட்டவர்த்தமாக எடுத்துரைத்தார். இலங்கை தமிழர்களின் கலாச்சார, வரலாற்று தலைமையகமாக அறியப்படும் யாழ்ப்பானத்தில் அவர் பேசுககையில், “நான் இங்கே இன்று இங்குள்ள தமிழர்களின் வாக்குகளைக் கோரவோ, கூட்டாட்சியை முன்வைக்கவோ, பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணவோ வரவில்லை. மாறாக, இலங்கையின் அடையாளத்தை அதன் மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திலும் உறுதிப்படுத்த வந்துள்ளேன். தமிழர்கள் சிங்கள பெரும்பான்மைவாதத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார். சிங்கள பவுத்த தேசியவாதக் கொள்கை அவருடைய பேச்சுகளில் எதிரொலிக்கத் தவறியதில்லை.
  • இலங்கையில் இனப் பிரச்சினைகள் மூள்வதற்குப் பெரும் தூண்டுதலாக அமைந்தவற்றில் ‘சிங்களம் மட்டுமே 1956’ சட்டம் அறியப்படுகிறது. அந்தச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது போலவே திசாநாயக்கவின் உரை இருந்ததாக அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.
  • ஜூலை 29, 1987 என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான நாள். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேயுடன் கொழும்பு நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அதில் வாக்குறுதி அளித்திருந்தது.
  • ஆனால், இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டபோது, தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்றும், 13-ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்தியவர் திசாநாயக்க. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவரும் கூட.
  • 13-வது சட்டத் திருத்தம் முழு அளவிலான உள்நாட்டுப் போராக உருவாகிய இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சியாகக் கருதப்பட்டது. மாகாண கவுன்சில்களின் உருவாக்கத்துக்கு வழிவகுத்த 13-வது சட்டத் திருத்தமானது சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களும் சுயாட்சி மேற்கொள்ளும் வகையில் அதிகாரப்பகிர்வு கிடைப்பதை உறுதிப்படுத்தும் என நம்பப்பப்பட்டது. ஆனால், 1990-ல் அமைதிப் படை திரும்பப் பெறப்பட்டபோது அனுர குமாரவின் ஜேவிபி கட்சி 13-வது சட்டத் திருத்த நகல்களை எரித்துக் கொண்டாடியது.
  • 13-வது சட்டத் திருத்தம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டை திசநாயக்க எப்போதுமே வெளிப்படையாக எதிர்த்தவர், எதிர்ப்பவர் தான் என்பது அவரது பழைய போராட்டங்கள், அண்மைய பிரச்சாரக் குரல்களும் உறுதிப்படுத்துகின்றன.

’தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்..’

  • இந்நிலையில்தான், இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட ஜேவிபி கட்சியினுடைய குரலாக, தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வந்தவர்தான் இன்றைய அதிபர் அநுர குமார திசாநாயக்க.
  • இதற்கு முந்தைய அதிபர்கள் தமிழர்களுக்கு எதிராக கொடும் குற்றங்களை செய்திருந்தாலும், அவர்களைவிட சிங்கள வெறிபிடித்தவர்தான் இன்றைய அதிபர். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், கொடிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர அவர் முற்படுவார். சிங்கள அரசோடு மிகுந்த அக்கறையோடு உறவு கொண்டுள்ள இந்திய மோடி அரசு, இனிமேலாவது ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்கள ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எப்போது வேண்டுமானாலும்..

  • இந்தத் தேர்தலில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் என்பிபி கட்சிக்கு ஆதரவு கிடைத்துள்ளது மிக முக்கியமான புள்ளி. இலங்கை தேர்தல் பிரச்சாரங்களில் என்பிபி கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு கொடுத்த அதீத முக்கியத்துவம் இப்போதைக்கு இனவாத பிரச்சினைகளைவிட வாழ்வாதாரப் பிரச்சினைகளே முக்கியம் என கிழக்கு, வடக்கு மாகாணங்கள் வாழ் தமிழர்கள், முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் முடிவெடுக்க உந்தியிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். எனவே, இந்த வரலாற்று வெற்றிக்குப் பின்னால் எப்போது வேண்டுமானால் வெடிக்கும் உரிமைக் குரல்கள் இருப்பதை உணர வேண்டும் என்கின்றனர்.

என்ன செய்யலாம் திசாநாயக்க?

  • இடதுசாரிக் கட்சி என்கிற நிலையில் சீனாவுடனே உறவைப் பேணக்கூடும் என்கிற பேச்சு நிலவினாலும், அதிபர் என்கிற முறையில் இந்தியாவுடன் சுமுகமான உறவையே எதிர்காலத்தில் அனுரகுமார மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
  • இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் எப்போதுமே இந்தியாவை தங்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கக் கூடிய சக்தியாக நம்புகின்றனர். சிங்கள பெரும்பான்மைவாத கொள்கை பற்றாளர் பெரும்பான்மை பலத்தோடு இலங்கை அதிபராக அமர்ந்திருப்பது அங்குள்ள தமிழர்களை மட்டுமல்லாது, இங்கே தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களில் இருப்போரையும் கலங்கச் செய்துள்ளது. கேள்விக்குறியாகவே உள்ள அவர்களின் தாயகம் திரும்பும் கனவு அதைவிட மோசமான நிலைக்குச் செல்லுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
  • புதிய அதிபர் தனது கடுமையான நிலைப்பாட்டைத் தாண்டி, தங்களை கண்ணியத்துடன் நடத்துவார், தங்களின் உரிமைகளை மதித்து, பல தசாப்தங்களாக தாங்கள் அனுபவித்த அனைத்து இன்னல்களுக்கும் தீர்வாக நீதி வழங்குவார் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.
  • ஒரு சாதாரண குடும்பத்தில், கிராமத்துப் பின்னணியில் பிறந்து இடதுசாரிக் கட்சியின் இடம்பிடித்து பலமான குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் அதிபராகியுள்ள திசநாயக்கவுக்கு இன்னொரு வரலாறு படைக்கவும் வாய்ப்புள்ளது.
  • இலங்கையின் முந்தைய அதிபர்கள் பலரும் முன்னெடுக்காத தமிழர்களுடனான மனம் திறந்த பேச்சுவார்த்தையை தொடங்கலாம். பொது வாக்கெடுப்பு போன்ற சாத்தியக்கூறுகளை பரிசீலிக்கலாம். தனது கெடுபிடிகளை தளர்த்துவதால் அனுர குமர தமிழர்களின் நம்பிக்கையையும், இந்தியாவுடனான வலுவான உறவையும் கட்டமைக்கலாம். தள்ளாடிக்கொண்டிருந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீட்பதில் இந்தியா கணிசமான உதவியை நல்கியதை திசநாயக்க மறந்துவிடக் கூடாது. பொருளாதார சீர்திருத்தத்தோடு, இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பதும் அவர் முன் இருக்கும் சவால்தான்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்