TNPSC Thervupettagam

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்த தலையங்கம்

April 3 , 2022 856 days 449 0
  • கடல் வளமும், இயற்கை வளமும் மிகுந்த இலங்கைத் தீவு, அந்நாட்டு ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் தற்போது கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாடு, உலகப் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி திவால் நிலையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
  • நிலக்கரி வாங்க நிதி இல்லாததால் அங்கு தினசரி அதிகபட்சம் 10 மணிநேர மின்வெட்டு தொடர்கதையாகி விட்டது. அந்நிய செலாவணி இருப்புக் குறைவால் எரிபொருள் இறக்குமதி குறைந்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பற்றாக்குறையுடன், அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் விலை உயர்வாலும் தட்டுப்பாட்டாலும், பெரும்பாலான குடும்பங்கள் இருவேளை உணவு முறைக்கு மாறும் அளவிற்கு அந்நாட்டு மக்கள் அல்லாடுகின்றனர்.
  • அதுமட்டுமல்ல, உலக நாடுகளிடம் வாங்கிய பல பில்லியன் டாலர் கடன் சுமையால் இலங்கை தள்ளாடுகிறது. கடனைத் திருப்பித் தர முடியாமலும், அன்றாடச் செலவுகளுக்கு மீண்டும் அந்நியக் கடனை வாங்க வேண்டிய நிலையிலும் அந்நாடு தத்தளிக்கிறது.
  • பிப்ரவரி 2022 நிலவரப்படி இலங்கை வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனின் அளவு 51 பில்லியன் டாலர் (இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.14.3 லட்சம் கோடி). இதில் உடனடியாக திருப்பிக் கொடுத்தாக வேண்டிய கடனின் மதிப்பு 7 பில்லியன் டாலர். ஆனால் அந்நிய செலாவணிக் கையிருப்பு 2 பில்லியன் டாலர் மட்டுமே இருக்கிறது. அதுவும் அன்றாட இறக்குமதிக்கு அளிக்கவே போதவில்லை.
  • இந்த நிலை திடீரென ஏற்பட்டு விடவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கை பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டது. கடந்த இரண்டாண்டு கால கரோனா பொதுமுடக்கம் இந்த வீழ்ச்சியை மேலும் விரைவுபடுத்திவிட்டது.
  • 2019-இல் அதிபர் கோத்தபய ராஜபட்ச மேற்கொண்ட சில முக்கிய முடிவுகளே இன்றைய நிலைக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். முதலாவதாக, நாட்டின் வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்த அதிபர், 15% வரியை 8% ஆகக் குறைத்தார். இதனால் அரசின் வரி வருவாய் குறையத் தொடங்கியது. அதேசமயம், அரசுத் துறையில் ஒரு லட்சம் புதிய வேலைகளை அவர் உருவாக்கினார். அதனால் அரசின் செலவினம் அதிகரித்தது.
  • போதிய ஆய்வின்றி இயற்கை விவசாயத்தை அரசு நடைமுறைப்படுத்தியதால், இலங்கைக்கே உரித்தான தேயிலை, மிளகு, ஏலம், காய்கறி உற்பத்தியில் சுமார் 30% சரிவு ஏற்பட்டது. அதேசமயம், நாட்டின் ஜி.டி.பி.யில் 10% பங்களிக்கும் சுற்றுலாத் துறையும் கரோனா நோய்த்தொற்றால் கடும் வீழ்ச்சி அடைந்தது. 2019-இல் 7.5 பில்லியன் டாலராக இருந்த சுற்றுலா வருவாய், 2021-இல் 2.8 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்த நிலையிலும், கடந்த நிதியாண்டில் ராணுவத்துக்கு 1.62 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • கரோனா தொற்றுப் பரவலால் விவசாய விளைபொருள், ஆயத்த ஆடை ஏற்றுமதியும் சரிவு கண்ட நிலையில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 2021-இல் 6 பில்லியன் டாலராக அதிகரித்தது. அதேபோல, நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2020-இல் 5% ஆக இருந்தது, 2022-இல் 15% ஆக அதிகரித்தது.
  • இந்த பொருளாதாரச் சரிவால், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 280.42 (மார்ச் நிலவரம்) ஆக வீழ்ந்தது. இது நாட்டின் பொருளாதார நிலையை மேலும் பாதித்தது. 2021 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 1.5% ஆக இருந்தது.
  • இவையெல்லாம் போதாதென்று, ஹம்பன் தோட்டா துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களில் அளவுக்கு மீறி முதலீடு செய்தது இலங்கை அரசு. இதில் ஊழல் முறைகேடு குறித்த புகார்களும் உண்டு. இந்த முதலீடுகளுக்கு சீனாவின் கடனுதவியை இலங்கை சார்ந்திருந்தது. அந்நாட்டுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாததால், பல அரசு சொத்துகளை சீனாவுக்கு குத்தகைக்கு விடும் நிலை தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
  • இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனா 10% பங்கு வகிக்கிறது; அந்நாடு கந்துவட்டிக்காரர் போலவே உலகிலுள்ள ஏழை நாடுகளை கடன் வலையில் வீழ்த்தி வருகிறது.
  • இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டின் ஜி.டி.பி.யைக் கருத்தில் கொள்ளாமல், அதிக அளவிலான கரன்சி நோட்டுகளை அச்சிட்டது இலங்கை அரசு. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி இலங்கை ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. நாட்டின் உற்பத்தி - வருவாயைக் கணக்கில் கொள்ளாமல் செயற்கையாக கரன்சியைப் பெருக்கியதன் விளைவாக, நாட்டில் பணவீக்கம் அதிகரித்தது. 2022 பிப்ரவரி நிலவரப்படி இலங்கையின் பணவீக்கம் 17.5% ஆக இருந்தது. இதுவே உச்சபட்ச விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது.
  • கடந்த ஒரு மாதமாக நடைபெறும் உக்ரைன் - ரஷிய போரால், கோதுமை, சமையல் எண்ணெய்க்கு அந்நாடுகளைப் பெருமளவில் சார்ந்திருக்கும் இலங்கை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை இறக்குமதியைச் சார்ந்திருக்கக் கூடாது என்ற அடிப்படை உண்மையை அந்நாடு இப்போது உணர்ந்திருக்கிறது. வெளிநாட்டுக் கடன்களையே இலங்கை நம்பி இருப்பது அந்நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

நன்றி: தினமணி (03 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்