TNPSC Thervupettagam

இலங்கை வந்துள்ள சீனாவின் உளவுக் கப்பல்

August 18 , 2022 721 days 395 0
  • இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது சீனாவின் உளவுக் கப்பலான "யுவான் வாங்-5'. "சர்வதேச விதிமுறைகளுக்குட்பட்டே தங்கள் நாட்டு கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் இக்கப்பலால் எந்த நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படாது' எனவும் சீன வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
  • இந்தியப் பெருங்கடலில் அந்நிய ராணுவ கப்பல்கள் பயணிப்பதை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அப்படியிருக்கும்போது, முழுக்க முழுக்க வர்த்தகத் துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு "யுவான் வாங்-5' கப்பல் வந்திருப்பதை சந்தேகக் கண்கொண்டே பார்க்க வேண்டியிருக்கிறது.
  • பொதுவாக ஆராய்ச்சிக் கப்பல் எனக் கூறப்பட்டாலும் யுவான் வாங் ஓர் உளவுக் கப்பல்தான். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் விவரங்கள், கடற்படைத் தளங்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றைக்கூட இக்கப்பலால் பெற முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் அக்கப்பல் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும், ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை அக்கப்பல் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்தக் கப்பல் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதியே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதாக இருந்தது. ஆனால், இந்தியாவும் அமெரிக்காவும் ஆட்சேபித்ததையடுத்து, உளவுக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவை இலங்கை அரசு கேட்டுக்கொண்டது.
  • சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து சீன உளவுக் கப்பலின் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதிலிருந்து இந்தியாவின் ஒப்புதலை இலங்கை பெற்றிருக்கக் கூடும் என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது.
  • சீன உளவுக் கப்பல் விவகாரத்தை இலங்கை அரசு முறையின்றி கையாண்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட, சீனாவிடம் வாங்கிய கடன்தான் காரணம். இலங்கையின் மொத்த கடன் மதிப்பில் சீனாவின் பங்கு மட்டும் சுமார் 20 % எனக் கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானப் பணிக்காக வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் அதன் 70 % பங்கை "சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட்' நிறுவனத்துக்கு அளித்துள்ளது இலங்கை. மேலும், அத்துறைமுகத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கும் சீன நிறுவனத்துக்கு இலங்கை வழங்கியுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. உள்நாட்டில் அப்போது எழுந்த கடும் எதிர்ப்பை ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை.
  • அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பல் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தாலும், முழுக்க முழுக்க சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கை அரசின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 22-ஆம் தேதி வரை இக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் எனவும், எந்தவிதமான அறிவியல் ஆய்வையும் நடத்தக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தரப்பில் கூறப்படுகிறது.
  • ஆனால், இந்தக் கப்பலின் வருகை மூலம் சீனா - இலங்கை இடையேயான விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத் துறைகள் மேம்படும் என கப்பலின் கேப்டன் கூறியதாக அம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிலிருந்து சீனாவின் நோக்கமும் இலங்கையின் தர்மசங்கடமும் வெளிப்படுகின்றன.
  • இலங்கையில் கடந்த பிப்ரவரியில் பொருளாதார நெருக்கடி தலையெடுத்தபோது, முதல் நாடாக அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உதவிகளை வழங்கியது இந்தியாதான். கரோனா, அந்நிய செலாவணி பற்றாக்குறை போன்றவை காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்கும் முயற்சியிலும் இலங்கைக்கு இந்தியா உதவிகளை அளித்து வருகிறது.
  • 2020-இல் ராஜபட்ச சகோதரர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின், நீண்டநாள் கூட்டாளியான இந்தியாவைப் புறந்தள்ளி சீனாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினர். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல், இலங்கை மக்களுக்கு இந்தியா என்றும் துணை இருக்கும் என்கிற கொள்கையின் உறுதிப்பாட்டுடன் பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்தியா ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறது.
  • இப்போது சீனாவின் உளவுக் கப்பல் வருகையால் இந்தியாவுக்கு நேரடியாக எந்த ஆபத்தும் நேர்ந்துவிடப் போவதில்லை. ஆனால், இலங்கையின் இப்போதைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான சீனாவின் உளவுக் கப்பலை அனுமதித்திருக்கக் கூடாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட்டதன் பின்விளைவை அனுபவிக்கிறது இலங்கை.

நன்றி: தினமணி (18 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்