TNPSC Thervupettagam

இலவசக் கட்டாயக் கல்வி: இன்றைய முக்கியத் தேவை

July 4 , 2024 191 days 238 0
  • ஆறு முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் அனைவரும் இலவசக் கட்டாயக் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என 2009 ஆகஸ்ட் 26இல் மத்திய அரசால் சட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்போது மாநிலமாக இருந்த ஜம்மு & காஷ்மீர் தவிர்த்து, அனைத்து மாநிலங்களிலும் மத்திய ஆட்சிப் பகுதிகளிலும் 2010 ஏப்ரல் முதல் நாள் இச்சட்டம் நடைமுறைக்கு வருவதை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றி அறிவித்தார். வேறு சட்டங்களுக்கு இப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கல்விக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அது. ஆனால், அதற்கான பலன் நமக்குக் கிடைத்ததா?

கவனிக்க வேண்டிய பிரச்சினைகள்:

  • கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், ஆறு முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் அனைவரும் இலவசக் கட்டாயக் கல்வி பெறுவது நிறைவேறாத கனவாகவே உள்ளது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளும் நிர்வாக முறைகளும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அளவுக்குப் பெரிதாக மேம்படவில்லை. நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதிக்கு மேல் உள்ள பாமர ஏழைகளின் பிள்ளைகள் மட்டுமே இலவசக் கல்வியை நம்பியுள்ளனர். அதிகாரமற்றவர்களின் பிள்ளைகள் மட்டுமே படிப்பதால், அரசுப் பள்ளிகளின் குறைகள் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளன.
  • இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தனியார் கட்டணப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகரித்துள்ளதைத் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) தரவுகள் மூலம் அறிய முடிகிறது. 2007-08இல் 19.3%ஆக இருந்த தனியார் பள்ளி சேர்க்கை 2017-18இல் 36.3%ஆக உயர்ந்துள்ளது. 2020இல் தனியார் பள்ளிச் சேர்க்கை 45.12%ஆக உயர்ந்துள்ளதை யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனம் (UIS) தெரிவித்துள்ளது. ஆக, பெரிதாகப் பேசப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை உறுதிசெய்யப் பயன்படாத சட்டமாக அமைந்துவிட்டது.
  • நாட்டின் குழந்தைகள் அனைவருக்கும் சமதரத்திலான கல்வி வாய்ப்புகளைக் கட்டணம் இல்லாமல் கிடைக்கச் செய்வதே முதன்மையான ஜனநாயகக் கடமை. ஆனால், நாட்டின் விடுதலைக்குப் பிறகு 60 ஆண்டு காலம் கடந்து நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தினால், குழந்தைகள் பெற்ற நன்மைகள் பெரிதாக ஒன்றுமில்லை. பள்ளிகளை நடத்துவதிலும் கல்வி வழங்குவதிலும் கல்வித் தரத்திலும் ஏழை இந்தியா – பணக்கார இந்தியா என்ற பாகுபாடு வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. கல்வி வணிக நலன்களுக்காக குழந்தைகளின் மாண்புகளும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இருக்கின்ற சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதால் அனைத்துக் கல்விக் கேடுகளுக்கும் முடிவுகட்ட முடியாது. கல்விக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்றும் வகையில், புதிய கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

செய்ய வேண்டியவை:

  • பள்ளி முன்பருவக் கல்வி முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை அனைத்து வயதுக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை உறுதிசெய்வது புதிய கல்வி உரிமைச் சட்டத்தின் முதன்மையான குறிக்கோளாக அமைய வேண்டும். இந்தியக் கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்து, அதிகாரப் பகிர்வளிப்பது கல்வித் துறையில் சாத்தியமாக வேண்டும். கலைத்திட்டம், பாடத்திட்டம், ஆசிரியர் கல்வி, கற்பித்தல் முறை ஆகியவற்றை வடிவமைப்பது மாநிலங்களின் தனி உரிமைகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். குழந்தைகள் விரும்பும் இந்திய மொழிகளையும் உலக மொழிகளையும் கற்பதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். அதேவேளை, பள்ளிக் கல்வி முழுமையாகக் குழந்தைகளின் தாய்மொழி வழியில் அமைய வேண்டும்.
  • நாட்டில் புலம்பெயர் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இக்குழந்தைகளின் தாய்மொழிக் கல்வி உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அருகமைப் பள்ளி முறையும் (Neighbourhood School System), பொதுப்பள்ளி முறையும் (Common School System) முன்னேறிய நாடுகளால் நூறாண்டு காலமாகப் பின்பற்றப்படுகின்றன. ஜனநாயக நெறியிலான இப்பள்ளி முறைகள் 1986 வரையிலான நமது நாட்டின் கல்விக் கொள்கைகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இம்முறைகளைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த புதிய சட்டம் வழிவகுக்க வேண்டும்.
  • பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மத்திய - மாநில, உள்ளாட்சி அரசுகளின் – அதிகார அமைப்புகளின் முதன்மையான கடமையாக, பொறுப்பாகச் சட்டத்தில் வரையறுக்கப்பட வேண்டும். நாட்டில் ஓராசிரியர் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள் செயல்பட்டுவரும் அவல நிலை ஒழிக்கப்பட்டு வகுப்புக்கு ஓர் ஆசிரியர், பாடத்துக்கு ஓர் ஆசிரியர், முழு நேரத் தலைமை ஆசிரியர் கொண்ட பள்ளிகளாக அனைத்துப் பள்ளிகளும் மாற்றப்பட வேண்டும். தனியார் கட்டணப் பள்ளிகள் அனைத்தும் இலவசக் கல்வி வழங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றப்பட்டு, கட்டணக் கல்வி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.
  • பிள்ளைகளுக்கு மன அழுத்தம் தராத மதிப்பீட்டு முறைகள் அமைய வேண்டும். அரசமைப்பு விழுமியங்கள், குறிக்கோள்கள், மனித உரிமைகள் ஆகியவற்றைப் பயிற்றுவிப்பது கல்வியின் முதன்மையான நோக்கமாக அறிவிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற ஆசிரியர் கல்வி மேம்பாடு, பணித்தர மேம்பாட்டுக்கான மாற்றங்களைக் கல்வி உரிமைச் சட்டம் பரிந்துரைக்க வேண்டும்.
  • வறுமை, அறியாமை, சமத்துவமின்மை போன்ற துயரங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்கக் கல்வியைத் தவிர வேறு வழிமுறை இல்லை. அதனால்தான் கல்வியைக் குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று உலக நாடுகளும் நாமும் ஏற்றுக்கொண்டுள்ளோம். பாகுபாடுகள் ஏதும் இல்லாத, தரமான, சமமான கல்வியைக் கட்டணம் இல்லாமல் தாய்மொழி வழியில் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து, புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும் மதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் சட்டப்படியான கடமையும் பொறுப்பும் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது. குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும் தற்போதுள்ள கல்விக் கேடுகளை ஒழிக்கவும் புதிய கல்வி உரிமைச் சட்டத்தை விரைவில் வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதே சரியான தீர்வாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்