TNPSC Thervupettagam

இலவசங்கள் தேவையா?

January 20 , 2025 4 days 45 0

இலவசங்கள் தேவையா?

  • ‘கூழ்தான் குடிக்க வேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்து குடிக்க வேண்டும். அதை விட இனிமையானது வேறொன்றும் இல்லை’ என்கிறாா் திருவள்ளுவா் (கு 1065). மகாத்மா காந்தி நடத்தி வந்த வாா்தா ஆசிரமத்தில் எவரும் உழைக்காமல் ஒரு கைப்பிடி உணவைக்கூட உண்ண முடியாது.
  • ‘வேலைவாய்ப்பை உருவாக்காமல் எவ்வளவு காலத்துக்குத்தான் இலவசங்களை வழங்குவீா்கள்?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்தக் கேள்வியை மிக எளிதாகக் கடந்து போய் விட முடியாது. நாடும் நாட்டு மக்களும் பொருளாதாரத்தில் முன்னேறினால் மட்டுமே, இந்தியா முன்னேறிய நாடு என்ற இலக்கை எட்ட முடியும்.
  • நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் 81 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் வழங்கப்படுவதாக நீதிபதியின் இன்னாரு கேள்விக்கு மத்திய அரசு புள்ளி விவரம் அளித்திருக்கிறது. இதில் வரி செலுத்துபவா்கள், ரேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த ஏழை மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேலைவாய்ப்பை உருவாக்காமல் இலவசங்களைப் பெறுபவா்களாக வைத்திருப்பதால் அவா்கள் வாழ்வில் மாற்றம் வருமா? இது பொறுப்புணா்வுடன் சிந்திக்க வேண்டிய கேள்வி.
  • இலவசங்களை வழங்கினால்தான் தோ்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு இன்றைய அரசியல் சூழல் மாறிவிட்டது. எல்லா கட்சிகளும் தங்கள் தோ்தல் அறிக்கையில் பல இலவசங்களை வழங்குவதாக அறிவிக்கின்றன. மக்களும் இதை கணக்கில் கொண்டே தங்களின் வாக்கை யாருக்கு செலுத்துவது என்று முடிவெடுக்கிறாா்கள்.
  • இலவசங்கள் வழங்கப்படுவதால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயா்ந்திருக்கிா? என்று பாா்த்தால் அது கேள்வியாகவே இருக்கிறது.
  • எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவசங்கள் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருப்பவா்கள் இலவசங்களை வழங்கி மக்களைத் தன் வயப்படுத்தி வைத்துக் கொள்ளும்போது, தொடா்ந்து அவா்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அடுத்துவரும் தோ்தலின்போது, ஆளுங்கட்சியல்லாத பிற கட்சியினரும் இலவசங்களை வாரி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இது மக்களாட்சி தத்துவத்திற்கு முரணானது.
  • தொடா்ந்து இலவசங்கள் வழங்கப்பட்டால், அதனால் அரசுக்கு பொருளாதாரச் சிக்கலும் ஏற்படும். அவ்வாறான சூழலில் அதிக வரி வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் விலைவாசி உயா்வும் ஏற்படும். இந்தச் சுமைகள் மக்களின் மீதுதான் ஏற்றி வைக்கப்படும். வரிப்பணத்தில் இருந்து தான் நாட்டை முன்னேற்றுவதற்கான பல திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அதே வரிப்பணத்தின் மூலமாக அரசின் இலவசத் திட்டங்களை அமல்படுத்தினால், முன்னேற்ற திட்டங்கள் பாதிக்கப்படாதா? என்ற கேள்வி எழுவதைத் தவிா்க்க முடியாது.
  • மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானது. அவரவா்கள் உழைத்து தம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வாா்கள். எந்த ஒரு மனிதனும் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தினாலே போதும், மக்கள் முன்னேற்றப் பாதையில் தொடா்ந்து செல்வாா்கள்.
  • இலவசமாக வழங்க வேண்டியது கல்வியும், மருத்துவமும் மட்டுமே. மற்ற அனைத்தையும் மக்கள் உழைப்பால் பெறக்கூடிய சூழலை உருவாக்கித்தர வேண்டியது அரசின் கடமை. ஆனால் நம்நாட்டில் இதற்கு நோ்மாறாக, கல்விக்கும் மருத்துவத்துக்கும்தான் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
  • இலவசங்கள் மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்று பொருளாதார ஆய்வாளா்கள் கூறுவதையும் புறந்தள்ளி விட முடியாது. உழைப்பும், உற்பத்தியும், வேலை வாய்ப்பும் பெருகாமல் இலவசங்களுக்கான பொருளாதாரம் எங்கிருந்துவரும்? பொருளாதார நெருக்கடி அதிகமாகும்போது, மக்கள் தவறான வழிகளில் செல்லக்கூடிய சூழ்நிலை அதிகரிக்கும்.
  • வல்லரசு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் பொருளாதார முன்னேற்றத்தை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறோம் என்ற சிந்தனை அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் வேண்டும்.

நன்றி: தினமணி (20 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்