- இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கரோனா காலத்தில் வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு எனக் கடும் நெருக்கடியில் இருந்த மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்த இத்திட்டம் நீட்டிக்கப்படுவது வரவேற்கத் தக்கது. அதேவேளையில், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு நடுவே பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டது சரியா என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம், 2020இல் கரோனா பொதுமுடக்கக் காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதன்படி தனிநபர்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கியது. 2013இல் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், இந்தியாவின் மக்கள்தொகையில் 67 சதவீதத்தினர் மானியத்துடன் கூடிய உணவு தானியங்களைப் பெறுவதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்குகிறது. இச்சட்டத்தின்படி தற்போது 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் சுமார் 81.35 கோடிப் பயனாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகம் வாயிலாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மாதம் 2.04 லட்சம் டன் அரிசியை இலவசமாக வழங்குகிறது.
- இரண்டு பிரிவு அட்டைதாரர்களுக்குக் கோதுமையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாதம், 8,500 டன் கோதுமையை இலவசமாகத் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது. கரோனா காலப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பெரும்பாலான மக்கள் முழுமையாக மீளவில்லை என்பதை மத்தியப் புள்ளியியல்-திட்ட அமலாக்கத் துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோரப்பட்ட பணிகள் 2022இல் இதே காலகட்டத்தில் கோரப்பட்ட பணிகளைவிட 9.5% அதிகம்.
- இது கரானோ பாதிப்புக்கு முந்தைய ஆண்டுகளைவிடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகள் கிராமப்புறப் பொருளாதாரத்தின் நிலை உண்மையில் சிறப்பாக இல்லை என்பதையே காட்டுகின்றன. மேலும் 2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கிராமப்புற உணவுப் பணவீக்கம் சராசரியாக 6.6% என்பதும் கவனத்துக்குரியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடத் தற்போது உணவுப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தத் தரவுகள் அனைத்தும் கிராமப்புறங்களில் தொடரும் உண்மை நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன.
- இந்நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள இத்திட்டம் மூலம் பொருளாதாரரீதியில் பின்தங்கிய 80 கோடிப் பேர் பயன்பெறுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஐந்து மாநிலத் தேர்தல் நேரத்தில் இலவச ரேஷன் திட்டம் நீட்டிக்கப்படும் அறிவிப்பைப் பிரதமர் மோடி வெளியிட்டதையும், அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பின்னரே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது. அரசியல் மாச்சரியங்களைத் தாண்டி, மக்கள் நலனின் அடிப்படையில் பார்த்தால் இத்திட்டம் நீட்டிக்கப்படுவது வரவேற்கத்தக்கதுதான். அதேவேளையில், கொள்கைரீதியில் இலவசங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் பாஜக அரசு, பொருளாதாரரீதியில் பின்தங்கியிருக்கும் மக்களைக் கைதூக்கிவிட காத்திரமான திட்டங்களை வகுக்க வேண்டியதும் அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 11 - 2023)