TNPSC Thervupettagam

இலாகா இல்லாத அமைச்சர்

June 21 , 2023 571 days 313 0
  • தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவர் பொறுப்பு வகித்துவந்த மின்சாரம், மரபுசாரா ஆற்றல் வளர்ச்சி இலாகா, நிதி-மனிதவள மேம்பாடு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த இன்னொரு துறையான மதுவிலக்கு-ஆயத் தீர்வை, வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் எஸ்.முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு இல்லை.. உரிமைகள் உண்டு:

  • எந்த அமைச்சகத்துக்கும் தலைமை வகிக்காமல் எந்தத் துறைக்கும் பொறுப்பேற்காமல் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரே இலாகா இல்லாத அமைச்சர் ஆவார். அமைச்சருக்கான ஊதியம், அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பது, வாக்களிப்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் சலுகைகளும் இலாகா இல்லாத அமைச்சருக்கும் உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 166இன் உட்கூறு 3, ‘மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகள், அமைச்சர்களின் துறை ஒதுக்கீடு ஆகியவற்றின் வசதிக்காக ஆளுநர் விதிகளை உருவாக்கலாம்’ என்கிறது. இந்த உட்கூறின் அடிப்படையிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எந்த இலாகாவும் இல்லாமல் அமைச்சராகத் தொடர அனுமதிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை:

  • இந்தியாவில் மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் இலாகா இல்லாத அமைச்சர்களாகப் பலர் இருந்துள்ளனர். 1950இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் ராஜாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்டார்; பிறகு, உள்துறை அமைச்சரானார். 1956இல் இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்ட வி.கே.கிருஷ்ண மேனன், 1957இல் பாதுகாப்பு அமைச்சரானார். 1962இல் இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரி பின்னர் நிதி அமைச்சர்ஆக்கப்பட்டார். 1964இல் லால் பகதூர் சாஸ்திரிஇலாகா இல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்டு நேருவின் மறைவுக்குப் பின் பிரதமரானார்.
  • பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த திமுகவின் முரசொலி மாறன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 2003இல் இலாகா இல்லாத அமைச்சராக்கப்பட்டார். அதே ஆண்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரித் துறையை மம்தா பானர்ஜி ஏற்க மறுத்ததால் அவரும் இலாகா இல்லாத அமைச்சராக்கப்பட்டார். பின்னர் அந்த இலாகாவை ஏற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், இன்றைய பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் இலாகா இல்லாத அமைச்சராக்கப்பட்டார்.
  • தெலங்கானா தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி எந்த அமைச்சகத்தையும் அவர் ஏற்க மறுத்தார். பின்னர், தொழிலாளர் நலம்-வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தை ஏற்றுக் கொண்டார். இராக் நாட்டுக்கு உணவைக் கொடுத்து அவர்களிடமிருந்து எண்ணெயை வாங்கிக் கொள்ளும் திட்டத்தில் முறைகேடாகப் பயன்பெற்றவர்கள் என ஐ.நா-வால் நியமிக்கப் பட்ட வோல்கர் கமிட்டியால் (Volcker Committee) பட்டியலிடப்பட்டவர்களில் ஐ.மு.கூ. அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நட்வர் சிங்கின் பெயரும் இடம்பெற்றது. இதையடுத்து, 2005இல் நட்வர் சிங் இலாகா இல்லாத அமைச்சர் ஆக்கப்பட்டார்.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், நிதி-பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சராக்கப்பட்ட அருண் ஜேட்லி, மருத்துவச் சிகிச்சை காரணமாகச் சிறிது காலம் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1984-85இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது அவர் கவனித்துவந்த இலாகாக்களுக்கு அமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன் பொறுப்பேற்றுக்கொண்டார். 2016 அக்டோபரில் ஜெ.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கவனித்துவந்த இலாகாக்கள் அனைத்துக்கும் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஜெயலலிதா, இலாகா இல்லாத முதலமைச்சராகத் தொடர்ந்தார்.
  • ஊழல் வழக்கும் அமைச்சர் பதவியும்: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி, அமைச்சராகத் தொடர்வதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
  • குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கான தகுதியை இழக்கிறார்.அப்போது அவர் அமைச்சராகவும் தொடர முடியாது. இத்தகைய தகுதி இழப்புக்கு முன்பு, ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருப்பவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதற்குச் சட்டரீதியான நிர்ப்பந்தம் எதுவும் இல்லை.

நீதிமன்றத்தின் முயற்சிகள்:

  • அதே நேரம், 2014இல் அன்றைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு, ஊழல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள் அமைச்சர்களாக ஆக்கப்படக் கூடாது என்று கூறியிருந்தது. ஆனால், இதற்கான சட்டம் எதையும் முன்வைக்கவில்லை. பிரதமர்களும் முதலமைச்சர்களும் அமைச்சர்கள் நியமனத்தில் அரசமைப்பு சார்ந்த பொறுப்புணர்வுடனும் தார்மிக அடிப்படையிலும் நடந்து கொள்ள வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை நீதிபதிகள் வலியுறுத்தியிருந்தனர்.
  • 2016இல் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் மீதான ஊழல் வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருப்பதற்குப் பதிலாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் அந்த உறுப்பினரைத் தகுதி இழக்கச் செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க அரசமைப்பு அமர்வுக்குப் பரிந்துரைத்தது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வதைத் தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் எடுத்த இந்த முயற்சிகள் கவனத்துக்குரியவை.

நன்றி: தி இந்து (21  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்