TNPSC Thervupettagam

இளசுகளை ஈர்க்கும் பிக்கிள் பால்!

October 18 , 2024 38 days 100 0

இளசுகளை ஈர்க்கும் பிக்கிள் பால்!

  • கரோனாவுக்குப் பிறகு உலகளவில் வேகமாக வளர்ந்துவரும் விளையாட்டுகளில் ஒன்று, ‘பிக்கிள் பால்’ விளையாட்டு. இது தற்போது சென்னையிலும் தமிழ்நாட்டின் வேறு சில பகுதிகளிலும் பிரபலமாகி வருகிறது. பார்ப்பதற்கு டென்னிஸா, பாட்மிண்டனா எனக் குழம்பும் வகையில் இருந்தாலும், சில மாற்றங்களுடன் தனித்துவமாக இருக்கிறது இந்த ‘பிக்கிள் பால்’. இந்த விளையாட்டை உலக அளவில் இளைஞர்கள் அதிகம் விளையாடுகிறார்கள்.

வரலாற்றில் ‘பிக்கிள் பால்’

  • டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவைதான் ‘பிக்கிள் பால்’. இந்த விளையாட்டை உள், வெளி அரங்குகளில் விளையாடலாம். பாட்மிண்டன் விளையாடத் தேவையான ‘நெட்’ போன்ற அமைப்பு, ‘பேடல்ஸ்’ எனப்படும் பேட், எடை குறைவான ‘பிளாஸ்டிக்’ பந்து (ஓட்டைகளோடு) இருந்தால் போதும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டுக்கான பொருள்கள் தயார். பாட்மிண்டன், டென்னிஸ் விளையாட்டுகளைப் போலவே ஒற்றையர், இரட்டையர் எனப் பிரிந்து விளையாடலாம்.
  • 1965 இல் அமெரிக்காவின் பெயின்பிரிட்ஜ் தீவுப் பகுதியைச் சேர்ந்த மூவரால் ‘பிக்கிள் பால்’ அறிமுகமானது. ஜோயல் பிட்சார்ட், பில் பெல், பார்னி மெக்கல்லம் ஆகிய மூவர் தங்களது குழந்தைகள் பொழுதுபோக்க வேண்டுமென்பதற்காக ‘பிக்கிள் பால்’ விளையாட்டை அறிமுகப்படுத்தினர். நாளடைவில் அமெரிக்காவின் மூலைகளுக்குச் சென்ற ‘பிக்கிள் பால்’, இளையோர் மட்டுமன்றி எல்லா வயதினரையும் கவர்ந்தது. தோராயமாக 48 லட்சம் அமெரிக்கர்கள் பிக்கிள் பால் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

இந்தியாவில் ‘பிக்கிள் பால்’

  • கரோனாவுக்குப் பிறகு இந்தியா போன்று பல நாடுகளிலும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டுப் பரவத் தொடங்கியது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை என ஒவ்வொரு பெருநகரிலும் ‘பிக்கிள் பால்' தடம் பதித்துவந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை நகரங்களில் ‘பிக்கிள் பால்’ விளையாட்டுக்கெனத் தனி அரங்குகள் அமைத்து விளையாடத் தொடங்கிவிட்டார்கள், ‘பிக்கிள் பால்’ ஆர்வலர்கள்.
  • இந்த விளையாட்டை ஆடவர், மகளிர், பெரியவர்கள், சிறார்கள் என எல்லா வயதினரும் விளையாடலாம். அந்த வகையில் இதைக் குடும்ப விளையாட்டு என்று வர்ணிக்கிறார்கள். இதுவே இந்த விளையாட்டு பிரபலமாவதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, மற்ற ராக்கெட் விளையாட்டுகளைப் போல ‘பிக்கிள் பால்’ விளையாட முறையான பயிற்சித் தேவையில்லை. ஓரிரு நாள்கள் தொடர்ந்து விளையாடினாலே ‘பிக்கிள் பால்’ விளையாட்டுக்கான நுணுக்கம் தெரிந்துவிடும். ஆக, இந்த விளையாட்டை விளையாடுவது எளிது, பாதுகாப்பானது!

‘ஃபிட்னெஸ்’ ஆர்வலர்:

  • ‘பிக்கிள் பால்’ விளையாட்டு என்பது நல்ல பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் ‘ஃபிட்னெஸ்’ஸில் ஆர்வமிருப்பவருக்கு ஏதுவான விளையாட்டும்கூட. பாட்மிண்டன் எப்படி முழு உடல் உழைப்பை வெளிப்படுத்தும் ஒரு விளையாட்டோ, அதைப் போலவே ‘பிக்கிள் பால்’ இருப்பதால் ‘ஃபிட்’டாக இருக்க விரும்புவர்கள் ‘பிக்கிள் பால்’ பேட்டைக் கையில் எடுக்கிறார்கள்.
  • சர்வதேச அளவில் ‘பிக்கிள் பால்' விளையாட்டுக்கென அமைப்பு இயங்கி வருகிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டுக்கென அமைப்புகள் உள்ளன. அவ்வப்போது வெவ்வேறு பிரிவுகளின்கீழ் போட்டிகளும் நடத்தப் படுகின்றன. சர்வதேச அளவில் ‘பிக்கிள் பால்' விளையாட்டுப் போட்டிகள் சூடுபிடித்ததால், ஒலிம்பிக்கிள் இடம்பெறும் அளவுக்கு ‘ஃபேவரைட்’ விளையாட்டாக மாறிவிடும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள், ‘பிக்கிள் பால்' ஆர்வலர்கள்!
  • சென்னையைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞரான ராம்குமார் கடந்த ஓராண்டாக ‘பிக்கிள் பால்’ விளையாடி வருகிறார். சென்னை வாசிகள் மத்தியல் வைரலாகியுள்ள இந்த விளையாட்டால், இப்போ தெல்லாம் விளையாட இடம் கிடைப்பதில்லையாம்.
  • “பள்ளிப் படிப்பின்போது டென்னிஸ் விளையாடக் கற்றுக்கொண்டதால், அதைப் போன்றதோரு விளையாட்டான ‘பிக்கிள் பால்’ விளையாட்டின்மீது ஆர்வம் ஏற்பட்டது. வேலை, அலுவல்களுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘பிக்கிள் பால்’ விளையாடி வருகிறேன்.
  • நண்பர்களோடு சேர்ந்து ‘கோர்ட்’டை முன்பதிவு செய்து விளையாடுவோம். ஆனால் கடந்த சில மாதங்களாக அவ்வளவு எளிதில் ‘கோர்ட்’ கிடைப்பதில்லை. இந்த விளையாட்டுக்கு தற்போது அதிக ‘டிமாண்ட்’ இருப்பதைப் பார்க்க முடிகிறது.
  • மற்ற விளையாட்டுகளைப் போல முன்கூட்டியே திட்டமிட்டு அணி திரட்டிச் சென்று விளையாட வேண்டுமென்பதில்லை. எங்கள் நண்பர் குழுவில் ஆடவர், மகளிர் என யாருக்கு விருப்பமோ அவர்களைக் கூட்டிக்கொண்டு சட்டென்று ‘பிக்கிள் பால்’ விளையாடக் கிளம்பிவிடுவோம். உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் இந்த விளையாட்டில் நேரம் போவதே தெரியாது” என்கிறார் ராம்குமார்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்