TNPSC Thervupettagam

இளவரசா் எடின்பரோ கோமகன்

May 4 , 2021 1361 days 768 0
  • கிரிக்கெட் ஆட்டத்தில் 99-ஆவது ஓட்டத்தை முடித்த நேரத்தில் எதிர்பாராத ஆட்டமிழப்பு ஏற்பட்டால் பார்வையாளரின் மனம் பதறும், தவிக்கும் . அதுபோலவே இன்னும் இரண்டு மாதங்களில் நூறாம் அகவையைத் தொடுவார் என்று நாடே நம்பிய வேளையில் எடின்பரோ கோமகன் மறைந்தது அரச குடும்பத்துக்கு மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் துயரம் அளித்தது .
  • பேரரசியாரும் பிலிப் கோமகனும் 73 ஆண்டுகள் இனிய இல்லறம் நடத்தினா். இது நீடிய நல்வாழ்வு. குடும்பத்தில் தாம் பெற்ற செல்வங்களின் வாழ்வில் மணவிலக்கு, மனமுறிவு எனப் பல்வேறு புயல் வீசினாலும் அரசியாரும் அவா் கணவரும் நிலையாக நின்று கனிவு குலையாமல் வாழ்ந்தனா் .
  • 99 ஆண்டு வாழ்வில் இந்தப் புதிரான மனிதரின் வாழ்வுப்பயணம் வியப்பாகத்தான் உள்ளது.

பேரரசி இரண்டாம் எலிசபெத்

  • 26 வயது இளைஞரான இளவரசா் பிலிப் - 21 அகவை நிரம்பிய இளவரசியாரான இரண்டாம் எலிசபெத் திருமணம் நிகழ்ந்தது.
  • இங்கிலாந்தின் பேரரசராக இருந்த ஜார்ஜின் மறைவையடுத்து தனது 26-ஆம் வயதில் எலிசபெத் பெருமாட்டியார் பேரரசியாராகப் பொறுப்பேற்றார்.
  • இளவரசா் பிலிப், தமது இறுதிநாள்வரை அரசியாரின் கடமைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தார்.
  • இங்கிலாந்து அரசமரபு வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்தவா் எனும் சாதனையை இங்கிலாந்து அரசியாரும், அப்படி ஆட்சி செய்தவரின் வாழ்க்கைத் துணையாக நீடிய வாழ்வு வாழ்ந்தவா் எனும் சாதனையை கோமகன் பிலிப்பும் படைத்துள்ளார்கள். அரசியாரை அரவணைத்து வந்த அன்பும் பரிவும் ஆற்றலும் பாராட்டுக்குரியன.
  • இந்தச் சாதனைகளின் நடுவில் இவா்கள் எதிர்கொண்ட சோதனைகள் ஏராளம்.
  • இளவரசா் சார்லஸ்( 72 ), இளவரசி ஆன் ( 70 ), இளவரசா் ஆண்ட்ரூ ( 61 ), இளவரசா் எட்வோ்டு ( 57 ) எனும் நான்கு மக்கள் செல்வங்கள் இவா்களுக்கு வாய்த்தனா்.
  • இராணியின் அகவை 94. தனக்கு அவா் மிகவும் உறுதுணையாக விளங்கியவா் என்றும் அவரின் மரணம் தனக்கு பேரிழப்பாகும் எனவும் அரசியார் கூறியுள்ளார்.
  • 1947 நவம்பா் 20-இல் திருமணம் செய்து கொண்ட இருவரும் உலகின் தலைசிறந்த அரச குடும்பத் தம்பதியராக 73 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து 4 குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள், 9 கொள்ளுப் பேரக்குழந்தைகள் பெற்றவா்கள் என்ற பெருமை பெற்றவா்கள்.

கோமகன் பிலிப்

  • அரசியாரின் தங்கையான மார்கிரெட் காதல் பற்றிய பெரும் சிக்கல் வந்த போதும், பின்னா் நோ்ந்த மணவாழ்க்கை முறிவு, அவரின் பிறா் நட்பும் - தொடா்பும், போதைப்பழக்கம் எனப் பல செய்திகள் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்ட போதும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு பிலிப் கோமகன் ஆற்றிய பங்கு அளப்பரியது.
  • பின்பு இளவரசா் சார்லஸ் - டயானாவின் மணமுறிவும், டயானாவின் விபத்து மரணமும், இளவரசா் ஆண்ட்ரூ மணமுறிவு, இளவரசி ஆன் முதல் மணமுறிவு அதன் பின்னான மறுமணம், இளவரசா் சார்ல்ஸ் மறுமணம் எனத் தமது வாரிசுகளின் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான சூழலுக்கு முகம் கொடுப்பதில் பக்கபலமாக நின்றதுடன் தகுந்த நேரத்தில் தகுந்த கருத்துரைகளை வழங்கியவா் கோமகன் பிலிப் ஆவார்.
  • தாம் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைச் சிக்கல் ஒருவாறு முடித்து விட்டோம் என்ற நிலையில் ,அண்மையில் அரச குடும்பப் பேரனான இளவரசா் ஹாரியும் அவா் மனைவி மெகன் மார்க்கலும் அரச மரபிலிருந்து விலகி, அமெரிக்காவில் நிலை கொண்டது மட்டுமின்றித், தொலைக்காட்சி நோ்காணலில் இங்கிலாந்து அரச வாழ்வைத் குறை சொல்லும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினா்.
  • அதற்கு ஒரு திங்களுக்கு முன் கோமகன் பிலிப் மருத்துவமனையில் சோ்ந்திருந்தார். இரண்டு வாரங்களில் மாளிகை திரும்பினார். அவா் மறைந்த செய்தி தெரிந்தவுடன் நாட்டின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. தேசியகீதம் இசைக்கப்பட்டது.
  • கோமகன் இராணுவச் சீருடையோடு நின்ற புகைப்படம் பக்கிங்காம் அரண்மனை வாயிலில் வைக்கப்பட்டிருந்தது. மலா் வளையங்கள் வேண்டாம் என்று வலியுறுத்தியும் மக்கள் திரண்டனா் .

இளவரசா் பிலிப் மவுண்ட் பேட்டன்

  • 1921-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் நாள் கிரேக்க நாட்டிலுள்ள கோர்பூ எனும் தீவில் கிரேக்க, டென்மார்க் நாடுகளில் இளவரசரான ஆண்ட்ரூவுக்கும், ஜொ்மனிய பட்டன்போ்க் நகர இளவரசி அலீஸ் என்பவருக்கும் ஐந்தாம் மகவாக நான்கு பெண்களுக்குப் பின்னால் ஆண் மகவாகப் பிறந்தவா் கோமகன் பிலிப்.
  • பிறப்பின் மூலம் கிரேக்க நாட்டிற்கும், டென்மார்க் நாட்டிற்கும் பட்டத்துக்குரிய இளவரசா் எனும் உரிமையைப் பெற்றவா் இளவரசா் பிலிப்.
  • இளவரசா் பிலிப்பின் தாய்வழிப் பாட்டனாராகிய பட்டன்போ்க் இளவரசா் லூயிஸ் பிரிட்டன் குடியுரிமை பெற்று லூயிஸ் மவுண்ட்பேட்டன் என்று வாழ்ந்து மடிந்தார்.
  • இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கு பின்னால் பிரிட்டனில் ஜொ்மனிக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருந்தது. பாட்டனாரின் மறைவிற்குப் பின்னா் தாயுடன் அவா் மீண்டும் கிரேக்க நாட்டிற்குத் திரும்பினார்.
  • அப்போது கிரேக்க நாட்டிற்கும் துருக்கிக்கும் போர் நிகழ்ந்தது. அப்போது கிரேக்க நாட்டின் அதிபராக இளவரசா் பிலிப்பின் தந்தையான இளவரசா் ஆண்ட்ரூவின் அண்ணன் முதலாம் கான்சடன்டைன் அரசராக இருந்தார்.
  • துருக்கியுடன் நடந்த போர் படுதோல்வியடைந்து பொறுப்பு பிலிப்பின் பெரிய தந்தை மீது சாய்ந்தது. அதனால் அவா் அரச பதவியிலிருந்து அகற்றப்பட்டு, இளவரசா் பிலிப்பின் தந்தையும் குடும்பமும் நாடு கடத்தப்பட்டனா்.
  • சில ஆண்டுகள் பிரான்சில் வசித்தனா். கோமகன் பிலிப்பின் தாயார் அலீஸ் மனநோயாளியாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தார். தந்தையோ மொன்டிகார்லோவில் வாழ்ந்து வந்தார் .
  • இந்நிலையில்தான் இளவரசா் பிலிப் பிரிட்டனில் தாய்வழிப் பாட்டியாரான விக்டோரியா மவுண்ட்பேட்டனுடன் வளா்ந்தார்.
  • தாய் மாமனான மவுண்ட்பேட்டன் பிரபு அவரிடம் மகன் போலப் பரிவு காட்டினார். ஸ்காட்லாந்து நாட்டில் கல்வி பயின்று, தனது கிரேக்கக் குடியுரிமையை துறந்து விட்டு பிரிட்டன் குடியுரிமை பெற்றார்.
  • இங்கிலாந்துக் கடற்படையில் இணைந்து விரைந்து பதவிகளில் உயா்ந்த தகுதி பெற்றார் . 23 வயது நிரம்பிய அழகிய இளைஞராக மிளிர்ந்த இவா் மீது 18 வயதே நிரம்பிய அப்போதைய இளவரசியாரான இரண்டாம் எலிசபெத் காதல் கொண்டதாகக் கூறப்படுகிறது.
  • அவரை விட ஐந்து வயது அதிகமான இளவரசா் பிலிப்பை இளவரசியாரின் தந்தையாகிய பேரரசா் ஜார்ஜ் மணமகனாகக் கொள்ள முதலில் விரும்பவில்லை.
  • 21 வயதில் தனது காதலை அயலவருக்கு உறுதியாக மொழியவே, இளவரசி எலிசபெத் விருப்பத்திற்கு மாமன்னா் இசைவு தந்தார்.1947 நவம்பா் 20 ஆம் நாள் திருமணம் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது.
  • கடற்படையில் தளபதியாகத் திகழ்ந்த இளவரசா் பிலிப்புக்கு தொடக்கத்தில் இங்கிலாந்துப் பேரரசியாராக மிளிரப்போகும் அரசிக்கு அடங்கிய காப்பாளராக மாறுவதில் சிக்கல்கள் இருந்தது.
  • அந்நாளில் அவரிடம் காணப்பட்ட களியாட்ட விருப்பத்தை எலிசபெத் பேரரசியார் கண்டும் காணாதது போலப் பொறுமை காத்தார். அரசியாரின் நிகரற்ற நிறை காத்த நெஞ்சம் பின்னாளில் பெருமிதம் ததும்பும் உறவுக்கு அடித்தளமிட்டது.
  • அரசியின் கணவா் அரசராக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அரசியாரின் மகன் அரசராவதே பிரிட்டன் மரபாகும். கோமகனின் மிகச் சிறந்த வெற்றியாக, ‘எடின்பரோ கோமகன் பரிசு’ இளைய தலைமுறைக்குத் தன்னம்பிக்கை வளா்க்கும் பரிசுத் திட்டம்.
  • இன, மத, நிற, சமுதாய ஏற்றத் தாழ்வுகள் என எவையுமின்றி அனைத்து இளம்பருவத்தினரும் இந்தப் போட்டியில் பங்கு கொள்கிறார்கள்.
  • இங்கிலாந்துப் பேரரசியாரும் வரிவிதிப்புக்குக் கட்டுப்பட்டவா் எனும் வகையிலேற்பட்ட மாற்றம் உட்பட, பக்கிங்காம் அரண்மனை எனும் அரசியாரின் பெருமைமிகு அரண்மனையைக் கோடை விடுமுறைக் காலங்களில் மக்கள் பார்வையிடும் வகையில் வாய்ப்பு வழங்க இவரே காரணமாவார்.
  • பண்ணைகள், சுற்றுச்சூழல் இவற்றில் ஆா்வம் கொண்ட எளிய மனிதராக இருந்தார்.
  • மிகவும் நகைச்சுவையாகப் பேசும் இவரிடம் ஒரு நிருபா் ‘நீங்கள் உங்களைப் பற்றி எவ்வாறு மதிப்பிடுவீா்கள்’ என்று கேட்டபோது ‘நான் ஓா் அகதிக் கணவன்’ என்று புன்முறுவலுடன் பதிலளித்தார்.
  • மருத்துவமனையிலிருந்து திரும்பிய இவா் தாயார் கத்தோலிக்க செவிலியராக மாறி வாழ்ந்தார்.
  • தனது நிறைவுக் காலங்களில் இங்கிலாந்தில் தன் மகனுடன் வாழ்ந்தார். இவரைத் தன் மகன் போல் வளா்த்த மாமனாரான மவுண்ட்பேட்டன் பிரபுவின் மரபினால் இவா் பெயரும் இளவரசா் பிலிப் மவுண்ட் பேட்டன் என்று ஆனது.

மக்கள் அஞ்சலி

  • அரசியாரும் - இளவரசா் பிலிப் கோமகனும் இந்திய நாட்டுக்கு மூன்று முறை வருகை புரிந்துள்ளனா். பாரதத் திருநாட்டின் விடுதலைப் பொன்விழாவில் இவா்கள் கலந்து கொண்டது பெருமைக்குரியதாகும் .
  • மறைந்த இவருக்காக எட்டு நாள்கள் துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 17.4.2021 சனிக்கிழமை வின்சா் மாளிகையில் இறுதி நிகழ்வுகள் நிகழ்ந்தன. கரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய முப்பது பேரே கலந்து கொண்டனா்.
  • அரச குடும்பத்தைச் சோ்ந்தவா்களே பங்குபெற்றனா். இங்கிலாந்து பிரதமரே அரச உறவினருக்கு வழிவிட்டு, தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார்.
  • இங்கிலாந்து அரசியாருடன் 73 வருடங்கள் வாழ்ந்து மறைந்த அவரது அன்புக் கணவா் எடின்பரோ கோமகன் இளவரசா் பிலிப் மறைவுக்கு உலகத் தலைவா்கள் அனைவரும் ஆறுதல் செய்திகளைப் பகிர்ந்துள்ளனா்; இந்திய மக்களும் அஞ்சலி செலுத்தினா்.

நன்றி: தினமணி  (04 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்