TNPSC Thervupettagam

இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஏன்

April 6 , 2024 289 days 282 0
  • இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருகிறது; அதிலும் படித்த இளைஞர்களிடம் வெகுவாக அதிகரித்துள்ளது. மகளிர் வேலைக்குப் போவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்திய வேலைவாய்ப்பு தொடர்பாக தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் மனிதவளத் துறையும் (ஐஎச்டி), சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ஐஎல்ஓ) 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இவற்றைத் தெரிவிக்கின்றன.
  • இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் செய்வதற்கான திறன் ஆகியவை பற்றிப் பல தரவுகள் தொடர்ந்து இருபதாண்டுகளாகத் (கோவிட்-19 பெருந்தொற்றுக்காலம் உள்பட) திரட்டி, ஆராயப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பின்மை தொடர்பாக உருவாகியுள்ள பல அம்சங்கள், நம்முடைய பொருளாதாரம் - வேலைவாய்ப்பில் வளர்ச்சி ஆகியவற்றை வெகுவாக பாதிக்கும் தன்மையுள்ளவை.

ஆய்வின் முக்கிய தகவல்கள்

  • வேலைக்குச் செல்லக்கூடிய வயதில் உள்ளவர்களுடைய எண்ணிக்கை (15 வயது முதல் 59 வயது வரை), 2011இல் 61% ஆக இருந்தது, 2021இல் 64% ஆக உயர்ந்திருக்கிறது, 2036இல் இது 65% அளவுக்கு உயரப்போகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 70 லட்சம் முதல் 80 லட்சம் பேர் வேலை தேடுவோர் எண்ணிக்கையில் சேருகின்றனர். இளைஞர்கள் கல்வி பெறும் வாய்ப்பு 2000வது ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் 18% ஆக இருந்தது 2022இல் 35% ஆக உயர்ந்திருந்தாலும், பொருளாதார உற்பத்தியில் ஈடுபடும் இளைஞர்கள் எண்ணிக்கை 52% என்ற அளவிலிருந்து 37% ஆகக் குறைந்திருக்கிறது.
  • வேலைவாய்ப்பின்மை என்பது இளைஞர்களிடையே முக்கியப் பிரச்சினையாகிக்கொண்டிருக்கிறது. பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வருகிறவர்களுக்கு இது பொருளாதாரரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் தீவிரமான பிரச்சினையாகிக்கொண்டிருக்கிறது. ஆண்டுக்காண்டு இது மேலும் பெரிதாகிறது.
  • வேலை கிடைக்காதவர்களின் மொத்த எண்ணிக்கையில் இளைஞர்கள் மட்டுமே 2022இல் 82.9% ஆக இருக்கின்றனர். படித்த பிறகு வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை 2000த்தில் 54.2% ஆக இருந்தது 2022இல் 65.7% ஆக உயர்ந்திருக்கிறது. பள்ளியிறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் பள்ளிக்கல்வி (பிளஸ் டூ) முடித்தவர்களில் 76.7% பெண்களும் 62.2% ஆண்களும் வேலை கிடைக்காமல் இருக்கின்றனர். பெண்களுடைய வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக இருக்கிறது.

போதிய வேலைவாய்ப்புகள் இல்லையா?

  • ஆண்டுதோறும் வேலைசெய்யும் தகுதியுள்ள வயதில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்காமலிருப்பதற்குக் காரணம், போதிய வேலைவாய்ப்புகள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. சந்தோஷ் மெஹ்ரோத்ரா இதைப் பற்றி நடத்திய ஆய்வுகள் இந்த அறிக்கையில் பல இடங்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. அவரிடம் கேட்டபோது, வேலைவாய்ப்புகள் இல்லை என்பதும், இருக்கும் வேலைகளைச் செய்வதற்கான பயிற்சியும் திறனும் பள்ளிக்கூடப் படிப்பை முடித்தவர்களிடம் இல்லை என்பதும் காரணங்கள் என்றார். இதற்குக் காரணம் கல்வியின் தரக் குறைவுதான்.
  • இதைப் போக்க, முறைசார்ந்த கல்வியிலிருந்து ஏதேனும் தொழில் செய்வதற்கான தனித்திறமைக் கல்வியைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்று அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுக்கிறார். தொழில்நுட்பம் தெரிந்த பள்ளிக்கூட மாணவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் மிக மிகக் குறைவு என்பதை ஐஎல்ஓ, ஐஎச்டி ஆகிய இரண்டின் தரவுகளுமே தெரிவிக்கின்றன.
  • 2022இல் மொத்த மாணவர்களில் 15.62% மாணவர்கள் மட்டுமே தொழில்கல்வி பயின்றவர்கள். அவர்களிலும் 4.09%தான் வேலை செய்வதற்கான முறைசார்ந்த தொழில் திறன் படைத்தவர்கள். 2019க்குப் பிறகு வேலைக்காக வேளாண்மைத் துறையை நாடுவது அதிகரிப்பதற்குக் காரணமே, வேறு துறைகளில் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்பதால்தான் என்கிறார் மெஹ்ரோத்ரா.
  • இந்த அறிக்கையைத் தயார் செய்தவர்கள், 2023இல் 90.4% வேலைவாய்ப்புகள் முறைசாராத் துறைகளில்தான் ஏற்பட்டன என்று சுட்டிக்காட்டுகிறார்கள். (முறை சாராத துறைகள் என்றால் அந்தத் துறையில் நடைபெறும் உற்பத்திக்கு வரி செலுத்த மாட்டார்கள், அது நிரந்தரமான வேலையுமில்லை - ஊதியமுமில்லை, அரசின் எந்தவித கண்காணிப்பிலும் அத்துறை இருக்காது).
  • முறை சார்ந்த துறைகளில் ஏற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் சரிபாதி அதாவது கிட்டத்தட்ட 45.2% முறைசாராத துறை வேலைகளைப் போலத்தான். படித்த இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை 2012இல் இருந்ததைவிட 2018இல் மூன்று மடங்காக பெருகிவிட்டபடியால், முறைசார்ந்த துறைகளிலேயே புதிதாக வேலைவாய்ப்பைப் பெருக்கியாக வேண்டும் என்கிறார் மெஹ்ரோத்ரா.

கிடைக்கும் வேலையின் தரம்

  • கிடைக்கும் வேலையில் உற்பத்தித்திறனும் குறைவு, ஊதியமும் குறைவு. பண மதிப்பில் அல்லாமல் உண்மையான (வாங்கும் சக்தி அடிப்படையிலான) ஊதிய மதிப்பின்படி பார்த்தால் ஊதியம் குறைந்துவிட்டது அல்லது பல துறைகளில் தேக்க நிலையிலேயே இருக்கிறது. முறையான தொழிற்பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட முறையாக நியமனம் பெற்ற தொழிலாளர்களில் 40.8% பேரும் அன்றாட அடிப்படையில் வேலை செய்து ஊதியம் பெறுவோரில் 51.9% பேரும் பெறுவதில்லை. அரசு இத்தகைய தொழிலாளர்களுக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம், நாள் ஒன்றுக்கு ரூ.480.
  • இந்த அறிக்கைகள் குறித்து நாட்டின் பெரிய தொழிற்சங்கங்களும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ என்ற விவசாயிகள் அமைப்பும் கவலை தெரிவித்துள்ளன. உணவுப் பண்டங்களின் விலை கட்டுப்படாமல் உயர்ந்துகொண்டிருக்கும்போது தொழிலாளர்களின் ஊதியம் உயரவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது என்று மூத்த தொழிற்சங்கத் தலைவர் அமர்ஜீத் கௌர் தெரிவிக்கிறார். நாட்டில் வேலை செய்கிறவர்களில் மொத்தமே 9% பேர்தான் ‘முறையான – நிரந்தர’மான வேலைவாய்ப்பு உள்ளவர்கள்.
  • இவர்களுக்கு ஊதியம், மருத்துவப்படி, வீட்டு வாடகைப்படி, சிறப்புப் படிகள், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு, விலைவாசி உயர்வுக்கேற்ப நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையில் அவ்வப்போது அகவிலைப்படி உயர்வு, பணியிலிருந்து ஓய்வுபெறும்போது பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி பிடித்தம், தீபாவளி போனஸ் என்று அனைத்துமே கிடைக்கின்றன.
  • அவர்களுடைய பணிக்கு உத்தரவாதம் உண்டு; பணியிடை நீக்கம் - பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி விரைவில் நிவாரணம் பெற முடியும். வேலை செய்யும் காலத்தில் ஏற்படும் ஊனம், நோய்களுக்கும் உரிய இழப்பீடுகளைப் பெறலாம். ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் ஊழியர்கள், ஒன்றிய – மாநில அரசுகள் நடத்தும் அரசுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்தான் பெரும்பாலும் இந்த 9% முறைசார்ந்த ஊழியர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
  • இப்படி நிரந்தரமற்ற, தகுந்த ஊதியமல்லாத வேலைகளில் செய்யும் முறைசாராத் துறை ஊழியர்களால் தங்களுடைய குழந்தைகளுக்கும் தரமான கல்வியைத் தர முடியாது என்பதால் அடுத்த தலைமையைச் சேர்ந்த அவர்களும் படிப்பு முடித்துவரும்போது போதிய தொழில் திறன் இல்லாதவர்களாகவும் இருக்கும் வேலைகளைச் செய்யக்கூடிய திறனற்றவர்களாகவும்தான் இருப்பார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் அமர்ஜீத் கௌர்.
  • தனிநபர்கள் நல்ல கல்வி பெற்று, உயர் தொழில்நுட்பம் படித்து வேலைவாய்ப்பைப் பெறும்போது பாதுகாப்பான, அதிக சம்பளம் தரக்கூடிய வேலைகளைப் பெறுவது இயல்பாகிறது. அதனால் மற்றவர்களைவிட பலமடங்கு அதிக ஊதியம் பெறுகின்றனர். நாட்டுக்குள்ளேயே தென்னிந்தியா, மேற்கிந்தியா, வடகிழக்கு இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் நல்ல கல்வியைப் பெற்று முறைசார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் என்கின்றனர் ஆய்வறிக்கை தயார் செய்தவர்கள்.
  • பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த விளிம்புநிலை இளைஞர்கள்தான் முறைசாரா வேலைவாய்ப்புகளில் அதிகம் இருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

முறைசார்ந்த துறையில் ஏன் வேலைவாய்ப்புகள் குறைந்தன?

  • ஒன்றிய – மாநில அரசுகள் எடுத்த கொள்கை முடிவுகள் காரணமாக முறைசார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. முறைசார்ந்த துறைகளில் ஆண்டுதோறும் ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு காலியாகும் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு ஆள்கள் புதிதாக சேர்க்கப்படாமல், அப்படியே காலாவதியாக விடப்படுகின்றன.
  • தொடர்ந்து இப்படிப் பல ஆண்டுகளாகச் செய்ததால் முறைசார்ந்த துறைகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். அத்துடன் அரசுகளே ஒப்பந்த அடிப்படையிலும் தொகுப்புதிய அடிப்படையிலும் ஆள்களை நியமித்துக்கொள்கின்றன.
  • பல வேலைகளை அயல்பணி ஒப்படைப்பு வழியாக ஒப்பந்ததாரர்களிடம் விட்டுவிடுகின்றன. இதனாலும் நிரந்தர – முறைசார்ந்த துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன.

பெண்களுக்கு ஏன் குறைவு?

  • வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட கடந்த இருபதாண்டுகளாகக் குறைந்துவருகிறது. 2022 கணக்கெடுப்பின்படி, உற்பத்தித் துறையில் கிடைக்கும் வேலையில் சேரும் ஆண்களின் எண்ணிக்கை 61.2% ஆகவும் மகளிரின் எண்ணிக்கை 21.7% ஆகவும் இருக்கிறது.
  • கிராமங்கள், நகரங்கள் என்று இரண்டு இடங்களிலுமே இது இதே விகிதத்தில்தான் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் கல்வி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பை நாடுதல் ஆகிய மூன்று இனங்களிலும் பெண்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதுதான் என்கிறது அறிக்கை.
  • 2012 முதல் 2019 வரையில் பெண்கள் வேலைக்கு அதிகம் போட்டியிடாத நிலையிலும், பொதுவான வேலைவாய்ப்பின்மை வேகமாக அதிகரித்தது. 2019 பெருந்தொற்றுக்குப் பிறகே நிலைமை ஓரளவு சீர்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் ஏராளமான பெண்கள் தொழில் துறை, சேவைத் துறை வேலைகளுக்கு வராமல், விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு அதிகம் போவதுதான்.

ஆய்வறிக்கையின் பரிந்துரை

  • அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியப் பொருளாதாரம் (ஜிடிபி) 5% முதல் 6% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப் பெரிய அளவில் உயர் தொழில்நுட்பங்கள் இனிப் பயன்படுத்தப்படும் என்பதால், வேலைக்குத் தேவைப்படும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கும் அவர்கள் கிடைக்கும் எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய பற்றாக்குறை ஏற்படும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.
  • தொழில் துறைக்குத் தேவைப்படும் திறன் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் அளித்தால்தான் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. இதற்காக ஐந்து இலக்குகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்கிறது அறிக்கை:

§ அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நாட்டின் வளர்ச்சி – உற்பத்தி திட்டங்களை திட்டமிட வேண்டும்.

§ வேலைவாய்ப்புகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.

§ தொழிலாளர் சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க திட்டம் அவசியம்.

§ தொழில் செய்வதற்கான திறனை வளர்ப்பதற்கும் அதிகத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை தருவதற்கும் உரிய அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

§ தொழிலாளர் சந்தைக்குத் தேவைப்படும் தொழில் தகுதிக்கும், வேலைக்கு வரத் தகுதியுள்ள இளைஞர்களிடம் உள்ள திறமைக்கும் இடையே நிலவும் பற்றாக்குறையை, தகுநத் கல்வி, பயிற்சிகள் மூலம் இட்டு நிரப்ப வேண்டும்.

  • விவசாயம் அல்லாத துறைகளில் வளர்ச்சியைப் பெருக்க கொள்கை வகுக்கும்போதே, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் வழிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு அரசின் உதவி அதிகரிக்கப்படுவதுடன் அவற்றின் உற்பத்தி, விற்பனை ஆகியவை பரவலாக்கப்படவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
  • வேளாண்மைத் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும், பண்ணையல்லாத துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருக வேண்டும், சுயமாகத் தொழில் செய்வதைப் பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும், பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும், அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர்களுக்கு நல்ல தரமான பணிநிலைமை, ஊதியம், வசதிகள், சமூக பாதுகாப்பு ஆகியவை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

நன்றி: அருஞ்சொல் (06 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்