- இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளன. குறிப்பாக, தகவல்தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலட்டத்தில் வேலை மாற்றத்துக்கான வாய்ப்புகளும் பரவலாகி உள்ளன.
- உலகமயமாக்கலுக்குப் பிறகு குடும்பம் மட்டுமின்றி தனிநபருக்கான பொருளாதார தேவைகளும் பெருமளவில் பெருகியுள்ளன. இதனை ஈடுசெய்யும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை தேடுவோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.
- நடப்பாண்டில் மட்டும் 26 சதவீத பணியாளர்கள் தங்களது பழைய வேலையை துறந்துவிட்டு புதிய வேலைக்கு மாற தயாராக உள்ளதாக பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் (பிசிஜி) அண்மையில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
- இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 8 நாடுகளில் 11 ஆயிரம் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அவர்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக வேலை மாற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அதிக ஊதியம்
- தற்போதைய பொருளாதார சூழலில் வரவுக்கும், செலவுக்குமான இடைவெளி அதிகரித்து கொண்டே செல்கிறது. நுகர்வு கலாச்சாரம் பெருகிவிட்ட நிலையில் கடன் வாங்கியாவது தங்களது வாழ்க்கைத் தரத்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப் பட்டுள்ளனர். தேவை அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்கள் அதிக ஊதியம் தரும் வேலையைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேலை நேரம்
- பொதுவாக 8 மணி நேரம்வேலை என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளது. உண்மையில் சந்தைப் பொருளாதாரத்தில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைப் பெருக்க இந்த வேலை நேரத்தை சரியாக கடைபிடிப்பதில்லை. மேலும், கூடுதல் நேர வேலையை சரியான முறையில் கணக்கிட்டு அதற்கான கூடுதல் சம்பளத்தையும் பெரும்பாலான நிறுவனங்கள் தருவதில்லை.
- அதிகநேரம் வேலை பார்ப்பதால் உடல் மட்டுமின்றி உள்ளமும் சோர்வு நிலைக்கு சென்றுவிடுவதாக கூறுகின்றனர் பணியாளர்கள். சரியான வேலை நேரத்தை கடைபிடிக்கும் அல்லது கூடுதல் வேலைநேரத்துக்கு ஏற்பசம்பளம் தரும் வேலையை தேட பணியாளர்கள் விரும்புகின்றனர்.
சமூக பயன்
- இன்னும் ஒரு சிலர் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வு காலபலன் உள்ளிட்ட அதிக சலுகைகள் தரும் நிறுவனங்களை தேடி அதில் பணிபுரிவது தங்களது வாழ்க்கைக்கு கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக வேலைமாற விரும்புகின்றனர்.
- ஏனெனில், பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு இதுபோன்ற முறையானசலுகைகளை அளிக்காமல் தொகுப்பூதியத்தை மட்டும் வழங்குகின்றன. இதன் மூலம் அவர்களை தற்காலிகமாக பயன்படுத்திக் கொண்டு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாகவும், பணி பாதுகாப்பற்ற சூழலில் ஊழியர்கள் அதிக பாதிப்புக்குள்ளாவதாகவும் கருத்து கணிப்பில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைவெளி அதிகரிப்பு
- முதலாளி, தொழிலாளி இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் சுமார் 28 சதவீத தொழிலாளர்கள் ஓராண்டில் ஒருமுறை கூட தங்களது முதலாளிகளை சந்தித்தது இல்லை என்கிறது புள்ளிவிவரங்கள். இதனால், வேலையில் உள்ள நிறை குறைகளை உரிய முறையில் சென்றுசேர்த்து அதற்கான தீர்வை பெற முடியவில்லை என்பது பணியாளர்களின் ஏக்கமாகஉள்ளது. அதனாலும் பலர் வேலை மாற யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
- இதனை புரிந்துகொண்டு தங்களது ஊழியர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை தெரிந்துகொள்ள முதலாளிகள் அவர்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டிய தேவை தற்போது அவசியமாகி உள்ளது.
- இந்தியாவைப் பொருத்தவரையில் 26 சதவீத பணியாளர்கள் நடப்பாண்டில் புதிய வேலைக்கு மாற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மரியாதை, நேர்மை, அங்கீகாரம் போன்ற உணர்சிகரமான காரணிகளை இதற்கு அவர்கள் முக்கிய காரணங்களாக பட்டியலிடுகின்றனர்.
- ஊதியம், வேலைநேரம், மேலாளர்கள் மீதான அதிருப்தி பணிமாற்றத்துக்கான காரணிகளில் முதலிடத்தில் இருந்தாலும், இந்திய பணியாளர்கள் உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தருவது இதிலிருந்து புலனாகிறது.
பணி பாதுகாப்பு சட்டம்
- பல மேற்கத்திய நாடுகளில் பணியாளர்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் வலுவான பணி பாதுகாப்பு சட்டங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மை வாதமாக உள்ளது.
- இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பணியாளர்களை திடீரென பணிநீக்கம் செய்யும் போக்கும் தற்போது அதிகரித்து வருகிறது. தனிநபர் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும்போது வேலை மாற்றங்களை கணிசமாக குறைக்கலாம் என்பது இத்துறை சார்ந்த நிபுணர்களின் கருத்து.
- வேலை மாற்றத்தில் பல்வேறு சவால்கள் இருந்தாலும், அது திறமையான, ஆற்றல்மிக்க பணியாளர்களை நிறுவனங்கள் ஈர்ப்பதற்கு சிறந்த வாய்ப்பாக இருப்பதையும் நாம் மறுப்பதற்கு இயலாது.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 02 – 2024)