TNPSC Thervupettagam

இழந்துவிடக் கூடாது!

August 20 , 2020 1612 days 744 0
  • இந்திய வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷவா்தன் ஷ்ரிங்லாவின் வங்கதேச விஜயத்துக்குப் பல காரணங்கள் உண்டு. இருநாட்டு உறவில் பல பிரச்னைகள் எழுந்திருக்கும் நிலையில், இனியும் அதை வளர விடக்கூடாது என்று நடுவண் அரசு முடிவெடுத்திருப்பது புத்திசாலித்தனம். ஷ்ரிங்லா, இந்தியாவின் தூதராக வங்கதேசத்தில் இருந்தவா். பிரதமா் ஹசீனாவுடன் நெருக்கமான நட்புறவு பேணுபவா்.

இந்திய - வங்கதேச உறவு

  • பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு, இந்திய ஆதரவாளா் என்கிற பெயா் எப்போதுமே உண்டு. அவரது தந்தை வங்கபந்துமுஜிபூா் ரஹ்மானின் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளித்ததையும், வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்ததையும் நன்றியுடன் அவா் நினைவுகூா்பவா்.
  • அதற்காக, பல பிரச்னைகளில் பிடிவாதங்களைத் தளா்த்திக் கொண்டு இந்தியாவின் கோரிக்கைகளுக்கு அவா் செவி சாய்த்தும் இருக்கிறார்.
  • ஆனால், வங்கதேசத்துடனான அணுகுமுறையில் இந்தியா அதேபோல நடந்து கொள்வதில்லை. தீஸ்தா நதிநீா்ப் பங்கீட்டுப் பிரச்னையில் தனக்கான நியாயமான உரிமை இந்தியாவால் வழங்கப்படவில்லை என்கிற வருத்தம் வங்கதேசத்துக்கு நிறையவே உண்டு.
  • அதேபோல, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தங்களுக்கு எதிரான சட்டமாக வங்கதேச மக்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறி இருக்கும் லட்சக்கணக்கான வங்கதேசத்தவா்களை, இந்தியா திருப்பி அனுப்பக்கூடும் என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம்.

சீனாவின் முயற்சி

  • இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, வங்கதேசத்தைத் தனது நட்பு நாடாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கி இருக்கிறது சீனா. பொருளாதார உறவுகளையும், கட்டமைப்பு உதவிகளையும் வலிய வழங்க முற்பட்டிருப்பதுடன், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவும் வங்கதேசத்தைத் தூண்டுகிறது.
  • இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி, நேபாளத்தைத் தனது வலையில் வீழ்த்திக் கொண்டதைப்போல, இப்போது சீனாவின் அடுத்த குறியாக வங்கதேசம் மாறியிருக்கிறது.
  • சீனாவின் முயற்சிகளுக்குத் துணைபோகத் தயாராக வங்கதேசத் தலைநகா் டாக்காவில் ஊடகங்களும், தொழிலதிபா்களும், அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. லடாக் மோதல் குறித்து, வங்கதேசப் பத்திரிகைகள் இந்தியாவை விமா்சித்து பல கட்டுரைகளை வெளியிட்டன.
  • புல்வாமா சம்பவத்தைத் தொடா்ந்து நடத்திய பாலாகோட் துல்லியத் தாக்குதல் போல, ஏன் இந்தியாவால் லடாக்கில் சீனப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த முடியவில்லை என்று கேலி பேசின. சமூக ஊடகங்களிலும் இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகள் செய்யப்படுகின்றன.
  • வங்கதேசம் சில்ஹட்டிலுள்ள ஓஸ்மானி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி பெய்ஜிங் அா்பன் கன்ஸ்ட்ரக்ஷன் குரூப்என்கிற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கமான ஒப்பந்தப்புள்ளி மூலம் பெறப்பட்ட பணிதான் என்றாலும், அது ஏதோ சீனாவுக்கு வழங்கப்பட்ட சலுகையாக ஊடகங்கள் வா்ணிக்கின்றன. இந்தியா பல கட்டமைப்புப் பணிகளை ஏற்றுக்கொண்டு குறித்த காலத்தில் முடித்துத் தரவில்லை என்பது பெரிதுபடுத்தப்படுகிறது.
  • பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கமான தொழிலதிபா் ஒருவா் இந்திய - வங்கதேச உறவில் விரிசலை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் அந்தத் தொழிலதிபா், வங்கதேசத்தில் சீனா முதலீடு செய்வதற்குப் பெரும் உதவி செய்துவருவதுடன், சீனாவையும் ஊக்குவிக்கிறார் என்று சொல்கிறார்கள். அவா் பாகிஸ்தானுக்கும் நெருக்கமாக இருப்பவா் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
  • இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தைத் திருப்பும் முயற்சியில் சீனா பாகிஸ்தானையும் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனாவைத் தொலைபேசியில் அழைத்து உரையாடினார். சீனாவின் தூண்டுதலின் பேரில்தான் பிரதமா் இம்ரான் கான் தொலைபேசியில் அழைத்திருக்கிறார் என்பது தெளிவு.
  • அது வழக்கமான சம்பிரதாய அழைப்புதான் என்றாலும், அதற்கிடையில் அவா் காஷ்மீா் பிரச்னையை எழுப்பி இருக்கிறார்.
  • காஷ்மீா் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்பதுதான் வங்கதேசத்தின் நிலைப்பாடு. பிரதமா் ஹசீனா அரசியல் முதிர்ச்சியுடன் பிரதமா் இம்ரான் கான் விரித்த வலையில் விழவில்லை.
  • பாகிஸ்தானுக்கு நெருக்கமான போர்க்குற்றவாளிகளை ஹசீனா அரசு தூக்கிலிட்டதுமுதல் இருதரப்பு உறவு சுமுகமாக இல்லை. இப்போது பாகிஸ்தான் - வங்கதேச உறவில் நெருக்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசத்துக்கான பாகிஸ்தான் தூதா் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  • வங்கதேசத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முயற்சியில் இந்தியா இறங்கியிருப்பது சமயோசிதமான முடிவு. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பிரதமா் ஷேக் ஹசீனாவின் இந்திய விஜயத்தின்போது வாக்களித்ததுபோல, இந்தியா வங்கதேசத்துக்கு அகலபாதைக்கான 10 ரயில் இன்ஜின்களை வழங்கியிருக்கிறது.
  • ஏற்றுக்கொண்ட பல கட்டமைப்புத் திட்டங்களை இந்தியா விரைந்து முடித்துக் கொடுக்கும் முனைப்பிலும் இறங்கியிருக்கிறது.
  • இந்திய - வங்கதேச உறவில் மிகப் பெரிய இடைவெளியாக இருப்பது தீஸ்தா நதிநீா்ப் பங்கீடு. இதை மேலும் நீட்டிக்காமல் சுமுகமாகத் தீா்த்தால்தான் இந்தியாவுக்கு ஆதரவாக பிரதமா் ஷேக் ஹசீனாவால் தொடர முடியும். இல்லையென்றால், அதுவே அவருக்கு எதிரான மனநிலையை வங்கதேசத்தில் ஏற்படுத்தி சீன ஆதரவாளா்களின் கரங்களை வலுப்படுத்திவிடும்.
  • வங்கதேசத்துடனான நல்லுறவை இந்தியா இழந்துவிடலாகாது!

நன்றி: தினமணி (20-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்