TNPSC Thervupettagam

இவர்களுக்கு முகாம்களே வாழ்வாதாரம்!

June 20 , 2020 1671 days 773 0
  • புகலிடம் என்பது, மிகப் பழங்காலத்திருந்தே நாடுகள் கடைப்பிடித்து வரும் பழக்கமாகும். போரில் தோற்ற மன்னர்கள், நட்பு நாட்டு மன்னர்களிடம் தஞ்சமடைதலும், பின்னர் அவர்கள் ஆதரவுடன் படை திரட்டி மீண்டும் போரிட்டு தன் நாட்டை மீட்பதும் வரலாற்றில் அதிகம் காணப்படும் நிகழ்வாகும்.

புகலிடம் அளிக்கும் உரிமை

  • தென் அமெரிக்க நாடான வெனிசுலா காரகாஸில் 1945 மார்ச் 28-இல் ஏற்கப்பட்ட ஆள்நில எல்லைப் புகலிடம் குறித்த மாநாட்டின் 1-ஆவது ஷரத்து, தனது இறையாண்மை அதிகாரத்தின் கீழ் எவருக்கும் தனது ஆள்நில எல்லைப் புகலிடம் அளிப்பதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு.
  • ஒரு நாடு தனது புகலிடம் அளிக்கும் உரிமையை செயல்படுத்தியது குறித்துக் குற்றம் சொல்வதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாது என்று கூறுகிறது.
  • பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தங்களின் உள்நாட்டுச் சட்டத்திலேயே புகலிடம் அளிப்பதற்கான உரிமையை அறிவித்துள்ளன.
  • 1959-இல் திபெத்தில் தங்களுக்கு எதிராக கலவரங்களைத் தூண்டிவிட்டதாக சீன அரசால் குற்றஞ்சாட்டப்பட்ட தலாய்லாமாவுக்கு தன் ஆள்நில எல்லைக்குள் இந்தியா புகலிடம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அகதியும் புகலிடமும்

  • அகதி என்பவர் இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில், அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரும், அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும், அந்த நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது அச்சம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும்.
  • அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர், இடம்பெயர்ந்தவர் அகதி எனப்படுவர்.
  • பொதுவாக புகலிடம் என்பதும் ஒரே பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.
  • ஆனால், இவர்களுக்குள் மெல்லிய வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பரந்த பொருளில் நோக்கும்போது புகலிடம் கோரும் நபர்களுக்கு அடைக்கலம் தரும் ஒரு சட்ட நிறுவனமே புகலிடம் ஆகும்.
  • அகதி என்பது, அவ்வாறு புகலிடம் அளிக்கப்பட்ட நபரின் சட்டத் தகுதி நிலையாகும்.
  • புகலிடம் என்பது ஒரு நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால், அந்தப் புகலிடம் பெற்ற அகதிகளின் சட்ட நிலை, சர்வதேச சட்டத்தால் ஒழுங்குபடுகின்றது.
  • ஒரு நாட்டில் இருக்கும் அகதிகளுக்கு இடையே அவர்களின் இனம், மதம் அல்லது அவர்களின் பூர்வீக நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக் கூடாது.
  • ஒரு நாட்டில் சட்ட விரோதமாக நுழையும் அகதிகள் உள்ளே நுழைந்தவுடன் உரிய அதிகார அமைப்பிடம் சரணடைந்து உரிய விளக்கம் அளித்து விட்டால், சட்ட விரோதமாக நுழைந்த குற்றத்துக் காக அவர்களைத் தண்டிக்கக்கூடாது என்று அகதிகள் தகுதி நிலை குறித்த ஐ.நா. மாநாடு ஷரத்து 31 கூறுகிறது.
  • மேலும், ஒரு நாட்டில் அகதிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள், அந்த நாட்டில் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு அந்த நாடு தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது.
  • அகதி என்ற வார்த்தையை கேட்கும்போது தானாகவே எல்லோருக்கும் கண்ணீர் வந்து விடும் என்பது நிதர்சனமான உண்மை.
  • மனிதன் தன் வாழ்க்கையில் பல விதமான துன்பங்களை அனுபவிக்கிறான். அதிலும் நாடு விட்டு நாடு சென்று அகதியாக வாழும் சூழ்நிலையில் உள்ளவர்களுக்குத்தான் அதிகமாகத் தெரியும்.
  • அப்படி வேதனைகளை அனுபவிப்பவர்கள், தங்களுடைய வாழ்க்கையை கவலையோடு கடத்துகின்றனர்.

உலக அகதிகள் விழிப்புணர்வு தினம்

  • உலக நாடுகளில் அகதிகளாக இருப்பவர்களில் அதிகமானோர் ஆப்பிரிக்கர்கள்.
  • அதனால்தான் முதலில் ஆப்பிரிக்க அகதிகள் தினம் என்று கடைப்பிடிக்கப்பட்டது.
  • இது போன்ற நிகழ்வை வரலாற்று தினமாக மாற்ற வேண்டும் என்ற நல்ல நோகக்தத்திலும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகளுக்கான தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும், 2000-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் பிறகு ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம்தேதியை உலக அகதிகள் விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
  • அகதிகள், புலம்பெயர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்தான் உலகில் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இது ஒருபுறமிருக்க இலங்கையில் இருந்து வந்து தமிழக முகாம்களில் அகதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் 68,000 பேர்.
  • அதே போன்று காவல் துறை பதிவு மூலம் 50,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

அரசு உதவுமா

  • இலங்கை அகதிகளில் சுமார் 28,500பேர் இந்திய வம்சாவளித் தமிழர்கள். அதாவது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இலங்கை இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பவர்கள்.
  • இவர்கள் சிறீமாவோ - லால் பகதூர் சாஸ்திரி ஒப்பந்தப்படி இலங்கையில் வாழ்வதற்கான உரிமை பெற்றவர்கள்.
  • இலங்கை அகதிகளுக்கான மாத பணக் கொடையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி குடும்பத் தலைவருக்கு ரூ.1,000, 12 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ரூ.750, 12 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு ரூ.400 என வழங்க 4.8.2011-இல் உத்தரவு பிறப்பித்தார்.
  • 9 ஆண்டுகள் நிறைவடைந்தும் இப்போதும் அதே மாத உதவித்தொகைதான் வழங்கப்படுகிறது. எனவே, மாத உதவித்தொகையை தமிழக அரசு அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு அகதிகளிடம் உள்ளது.
  • இன்றைய அகதி முகாம்களில் வாழ்பவர்களில் சுமார் 55% பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இலங்கையைப் பார்த்ததுகூட இல்லை.
  • இலங்கையின் கலாசாரம், பண்பாடு, அரசியல் எதுவும் இவர்களுக்குத் தெரியாது. இவர்களுக்கு இப்போது இருக்கும் கவலைகளில் முக்கியமானது இரட்டை குடியுரிமை, இரண்டாவது அரசுப் பணி தேர்வுகளில் தேர்வு எழுதுவதற்கு அனுமதி, மூன்றாவது வாக்குரிமை. இந்த மூன்றையும் யார் நிறைவேற்றுவார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
  • (இன்று உலக அகதிகள் விழிப்புணர்வு தினம்)

நன்றி: தினமணி (20-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்