TNPSC Thervupettagam

இஸ்ரேலிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

August 6 , 2019 1985 days 1168 0
  • புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான உலகக் குறியீட்டெண் கடந்த வாரம் வெளியானபோது, மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. முதல் 50 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும் என்பதே எதிர்பார்ப்புக்கான காரணம்.
  • இந்தியா 52-வது இடத்தைப் பிடித்தது. 2015-ல் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 52-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
  • மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் இப்படி விரைவான வளர்ச்சியை இந்தியா மட்டுமே பெற்றிருக்கிறது.
  • புதிய கண்டுபிடிப்புகளில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
  • ஆனால், அதைவிட முக்கியம், முதல் 10 நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் முன்னேறியிருக்கிறது.
  • வடஆப்பிரிக்கா, மேற்காசியப் பகுதியில் இப்படி முதல் 10 நாடுகளில் ஒன்றாக முன்னேறியிருப்பது இஸ்ரேல் மட்டுமே.
  • இந்தியாவுக்குக் கற்றுத்தர இஸ்ரேலிடம் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சோதனைகளை எப்படிச் சாதனைகளாக மாற்றிக்கொள்வது என்பது அதில் முக்கியமானது.
  • வெறும் 85 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் உள்நாட்டுச் சந்தை மிகவும் சிறியது.
  • மிகவும் தொன்மையான நாகரிகங்களின் இருப்பிடமான தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த பகுதியில் இஸ்ரேலியர்கள் குடியேறியிருந்தாலும் பக்கத்து நாடுகள் அனைத்துமே அதற்கு எதிரி நாடுகள்தான்.
  • தண்ணீர் உட்பட எல்லா இயற்கை வளங்களும் அந்நாட்டுக்குப் பற்றாக்குறையே. அதன் 22,000 சதுர கிமீ பரப்பில் பெரும்பகுதி புல்கூட விளைய முடியாத வறண்ட நிலப்பகுதிதான்.

கல்வியில் கவனக்குவிப்பு

  • வேறு எந்த நாடாக இருந்தாலும் இதை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கும். இஸ்ரேல் அப்படியல்ல. அந்நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் நாட்டை முன்னேற்றுவதற்கு மனிதவள முதலீட்டை அதிகப்படுத்தினார்கள்.
  • எளிதாகப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடியவற்றை வேளாண்மை, தொழில் துறை இரண்டிலும் உற்பத்திசெய்தார்கள். தண்ணீர் பற்றாக்குறை, விவசாய வளர்ச்சி, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தினார்கள்.
  • முதல்படியாக, கல்வித் துறையில் அதிகம் முதலீடு செய்தார்கள்.
  • இஸ்ரேலின் ஜிடிபியில் 7% கல்வித் துறையில் செலவிடப்படுகிறது. வயதுவந்த இஸ்ரேலியரில் 45%-க்கும் மேல் கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கின்றனர். உலகிலேயே ஆராய்ச்சி-வளர்ச்சிக்காக அதிகம் செலவிடும் நாடு இஸ்ரேல்தான்.
  • தனது மொத்த ஜிடிபியில் 4.2%-ஐ இதற்காகச் செலவிடுகிறது. இந்தத் தொகையிலும் மூன்றில் ஒரு பங்கு நேரடியாகப் பல்கலைக்கழகங்களுக்குக் கிடைக்கிறது.
  • இஸ்ரேலியத் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வை சரியானதுதான் என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
  • பேடன்ட் உரிமைகளுக்காக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு அதிகம் மனுச் செய்யும் நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. இஸ்ரேலியக் கல்லூரி மாணவர்களின் கல்வித்தரம் மிக உயரியதாக இருக்கிறது.
  • ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், எச்பி உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட உலகத் தொழில் நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சி, வளர்ச்சி சோதனைச் சாலைகளை இஸ்ரேலில்தான் நிறுவுகின்றன.
  • நோபல் வென்றவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடாகவும் இஸ்ரேல் இருக்கிறது.
  • உலகிலேயே உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிதாகத் தயாரிப்பில் ஈடுபடும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களின் எண்ணிக்கை இஸ்ரேலில்தான் அதிகம். புதிய தொழில்நுட்பங்களை இஸ்ரேல் வளர்க்கும் விதம் உலகின் பிற நாடுகள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
  • இஸ்ரேலின் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் அந்நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டன. கடல்நீரைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கையாள்வதன் மூலம் அந்நாடு தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து மீண்டு, தண்ணீர் உபரி நாடாகிவிட்டது.
  • சொட்டு நீர்ப்பாசன பாலை வேளாண்மையில் உலகின் தலைமையாக இருக்கிறது.

தொழில்நுட்ப ராணுவம்

  • சுற்றிலும் எதிரி நாடுகளால் சூழப்பட்டுள்ள இஸ்ரேல் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுகிறது. எனவே, தகவல் தொழில்நுட்பம்சார் நவீனத் தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்துகிறது. அதன் உளவுப் பிரிவின் திறமை பற்றிய கதைகள் அநேகம். அந்நாட்டில் வயதுவந்த அனைவரும் சில ஆண்டுகளுக்கு ராணுவத்தில் சேர்ந்து கட்டாயம் பணிபுரிய வேண்டும்.
  • எனவே, எல்லா இளைஞர்களும் அவர்களது அறிவுக்கூர்மை, ஆர்வம் ஆகியவற்றுக்கேற்ப தொழில்நுட்பங்களை ராணுவத்தின் மூலம் பழகிக்கொள்ள முடிகிறது.
  • கணினிகளில் பாதுகாக்கப்படும் ரகசியத் தகவல்கள் திருடப்படாமல் இருக்க நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றைத் தயாரித்து சந்தைப்படுத்தும் ‘செக் பாயின்ட்’ அத்தகைய நிறுவனங்களில் ஒன்று. உலக சைபர் பாதுகாப்புச் சந்தையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பவை மட்டும் 10%.
  • எப்போதும் எதிரிகளாலும் எதிரான சூழல்களாலும் சூழப்பட்டிருப்பதால், ‘இப்போதைய நிலைமையே போதுமானது’ என்று அவர்கள் ஓய்ந்து உட்காருவது இல்லை.
  • தங்கள் தொழில் துறை, வேளாண் துறை உற்பத்தி முறைகளைத் தொடர்ந்து நவீனப்படுத்திக் கொண்டே வருகிறார்கள்; பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விதவிதமாகக் கையாள்கிறார்கள்.
  • தங்கள் பரம்பரை குணத்தை ‘ஹுட்ஸ்பா’ (Chutzpah) என்கிறார்கள். ‘அதீத தன்னம்பிக்கை’ அல்லது ‘மிதமிஞ்சிய தெனாவட்டு’ என்பது பொருள். தோல்வியை இஸ்ரேலியச் சமூகம் இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. ‘மீண்டும் முயன்றுபார்’ என்றே ஊக்குவிக்கிறது.
  • இளைஞர்களுக்கு முதியவர்கள் ஆலோசனை சொல்வதும் ஊக்குவிப்பதும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

இந்தியாவுக்கான சவால்கள்

  • உணவு, தண்ணீர், தேசியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் ஏராளமான சவால்கள் இருக்கின்றன.
  • சுகாதாரத் திட்டங்களை நாட்டின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசெல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இவை எல்லாவற்றையுமே குறைந்த செலவில் செய்தாக வேண்டும்.
  • இஸ்ரேலைப் போல இந்தியாவும் கல்வித் துறையில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். ஆராய்ச்சி, வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
  • ஜிடிபியில் வெறும் 0.7% அளவுக்கே நாம் வளர்ச்சி, ஆராய்ச்சிக்குச் செலவிடுகிறோம்.
  • இதிலும் மிகச் சிறிதளவே பல்கலைக்கழகங்களுக்குக் கிடைக்கிறது. எஞ்சியவை விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு ஆகிய துறைகளுக்குக் கிடைக்கின்றன.
  • சீனா தனது மொத்த ஜிடிபியில் 1.3%-ஐ ஆராய்ச்சி வளர்ச்சிக்கு 2006-ல் செலவிட்டது. 2018-ல் அதை 2.18% ஆக உயர்த்தியிருக்கிறது.
  • எவ்வளவு பெருந்தொகையை ஒதுக்குகிறோம் என்பதுகூட முக்கியமில்லை, ஒதுக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்க வேண்டும்.
  • உலக நாடுகளுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நுகர்பொருட்களும் சேவையும் மக்களுக்கு விலை குறைவாகக் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது தவறு.
  • இந்தியாவுக்குச் சவாலாக இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டாலே ஏராளமான தொழில், வளர்ச்சி வாய்ப்புகள் ஏற்படும். உலக அளவில் இந்தியக் கண்டுபிடிப்புகளுக்குச் சந்தை ஏற்படும்.
  • இதைத்தான் இஸ்ரேல் சாதித்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ்திசை (06-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்