TNPSC Thervupettagam

இஸ்ரேலில் நெதன்யாஹு தலைமையில் ஆட்சி அமைக்கவிருப்பது குறித்த தலையங்கம்

November 16 , 2022 633 days 312 0
  • கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி, பெஞ்சமின் நெதன்யாஹு தலைமையிலான வலதுசாரிக் கூட்டணி, தனிப்பெரும்பான்மையுடன் இஸ்ரேலில் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், இஸ்ரேல் ஐந்து தேர்தல்களை சந்தித்துவிட்டது.
  • எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப்பெரும்பான்மை இல்லாததால், மறு தேர்தலை சந்தித்துக் கொண்டிருந்த இஸ்ரேல், இந்த முறை தெளிவான முடிவைத் தெரிவித்திருக்கிறது.
  • 160 உறுப்பினர்களைக் கொண்ட "நெஸ்ஸட்' எனப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், பெஞ்சமின் நெதன்யாஹு தலைமையிலான கூட்டணி 64 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றிருக்கிறது. முந்தைய தேர்தல் தோல்வியால் 15 மாதங்களுக்கு முன்னர் பதவி விலகிய பெஞ்சமின் நெதன்யாஹுவின் வெற்றி, எதிர்பாராததல்ல. கடந்த ஓராண்டாக, வலதுசாரிகள், இடதுசாரிகள், அரபிகள் அனைவரும் இணைந்து நடத்திய கூட்டணி ஆட்சியால் தொடர முடியாமல் போனபோதே, பெஞ்சமின் நெதன்யாஹுவின் தலைமையிலான "லிகுட்' கட்சி தலைமையில் அமைந்த கூட்டணி, ஆட்சியைப் பிடிக்கும் என்பது தீர்மானமாகிவிட்டது எனலாம்.
  • இஸ்ரேல் உருவான பிறகு அதன் வரலாற்றில் 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் நெதன்யாஹு மட்டுமே. 1992-ஆம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து, "லிகுட்' கட்சியின் தலைவரான பெஞ்சமின் நெதன்யாஹு சந்தித்திருக்கும் 11-ஆவது தேர்தல் இது. அவற்றில் ஐந்து தேர்தல்களில் வெற்றியையும், ஐந்து தேர்தல்களில் தோல்வியையும் எதிர்கொண்ட பெஞ்சமின் நெதன்யாஹு, இஸ்ரேலில் நீண்டகால பிரதமராக இருந்த சாதனையாளராவார்.
  • இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் 1949-ஆம் ஆண்டு பிறந்த பெஞ்சமின் நெதன்யாஹு, புதிதாக உருவான இஸ்ரேலில் பிறந்தவர் என்பது மட்டுமல்ல, மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவியை எட்டிப் பிடித்தவரும்கூட. 1999 தேர்தலில் தோல்வியைத் தழுவி, அடுத்த 10 ஆண்டுகள் அரசியல் வனவாசம் போனவர் 2009-இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது அவரது பொறுமைக்கும், மனம் தளராமைக்கும் எடுத்துக்காட்டு.
  • 2019-இல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் அவரால் நிலையான கூட்டணி ஆட்சியை அமைக்க முடியவில்லை. அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மூன்று ஊழல் வழக்குகள், அவரைத் துரத்துகின்றன. அவரை ஆட்சி அமைக்க அனுமதிக்கக் கூடாது என்கிற ஒற்றைப்புள்ளியில் அரசியல் எதிரிகள் அனைவரும் இணைந்து 2021-இல் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். 17 மாதங்கள் எதிர்க்கட்சியில் இருந்த பெஞ்சமின் நெதன்யாஹு, இப்போது வலுவான எண்ணிக்கை பலத்துடன் ஆட்சி அமைக்க இருக்கிறார்.
  • பெஞ்சமின் நெதன்யாஹுவின் வெற்றிக்கு அவரது லிகுட் கட்சியின் கட்டுப்பாடும், ஒற்றுமையும் உறுதுணையாக இருந்தன.
  • இஸ்ரேலின் மொத்த வாக்காளர்களான 67 லட்சம் பேரில் 73% பேர் வாக்களித்திருக்கிறார்கள். இடதுசாரிக் கட்சிகளும், அரபிகளின் கட்சிகளும் வலுவிழந்து விட்டன. தீவிர வலதுசாரிகளைத் தன்னுடைய கூட்டணியில் இணைத்துக்கொண்ட பெஞ்சமின் நெதன்யாஹு, மீண்டும் ஒரு தேர்தல் நடத்துவதைத் தடுத்து விட்டார்.
  • அது அவரது வெற்றி மட்டுமல்ல, யூதர்களின் மதவாதக் கட்சியான ரிலிஜியஸ் சியோனிஸ்ட் கட்சியின் வெற்றியும்கூட. இதுதான், பெஞ்சமின் நெதன்யாஹுவுக்குத் தலைவலியை ஏற்படுத்தப்போகும் பிரச்னை.
  • ரிலிஜியஸ் சியோனிஸ்ட் கட்சித் தலைவர் இடமெர் பென் கவிர் தீவிரவாத யூதர்; அரபிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர். நெஸ்ஸட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்திருக்கும் சியோனிஸ்ட் கட்சி, உள்துறை உள்ளிட்ட முக்கியமான பதவிகளைக் கோரக்கூடும். நம்பகத்தன்மையற்ற பாலஸ்தீனியர்களை நாடு கடத்த வேண்டும், வெஸ்ட் பேங்க் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வலியுறுத்துவார்கள்.
  • முந்தைய பெஞ்சமின் நெதன்யாஹு அரசின் முயற்சியால், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ உள்ளிட்ட ஏனைய அரபு நாடுகளுடன் இஸ்ரேல் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஈரானின் அணு ஆயுத முன்னெடுப்புக்கு எதிரான நெதன்யாஹுவின் நிலைப்பாடு, வளைகுடா நாடுகளை இஸ்ரேலுடன் உறவுகொள்ள வழிகோலியது. சமீபத்தில் லெபனான், சவூதி அரேபியா நாடுகளும் இஸ்ரேலுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
  • நெதன்யாஹு, சியோனிஸ்ட் கட்சியின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால், அரபு நாடுகளால் இஸ்ரேலுடனான நட்புறவைத் தொடர முடியாது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான அணு ஆயுத ஒப்பந்தத்தை நெதன்யாஹு முன்புபோல எதிர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம். அது இஸ்ரேல் - அமெரிக்க உறவை பாதிக்கக்கூடும்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடியைத் தனது தனிப்பட்ட நண்பராகக் கருதுபவர் பெஞ்சமின் நெதன்யாஹு. 1992-இல் வெறும் 20 கோடி டாலராக (சுமார் ரூ. 1,617 கோடி) இருந்த இந்திய - இஸ்ரேல் வர்த்தகம், 2020 - 21-இல் 7.86 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 63,579 கோடி) உயர்ந்திருக்கிறது. நமது இறக்குமதிகளைவிட, இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கான ஏற்றுமதிகளின் மதிப்பு அதிகம். அரபு நாடுகளும் இஸ்ரேலும் நட்புறவுடன் இருப்பதால் இந்தியா பயனடைகிறது.
  • பெஞ்சமின் நெதன்யாஹு அசாத்தியமான அரசியல் ராஜதந்திரி. ரிலிஜியஸ் சியோனிஸ்ட் கட்சியை இணைத்துக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார். அவர்களை எப்படித் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதில்தான் இருக்கிறது அவரது நிஜமான வெற்றி!

நன்றி: தினமணி (16 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்