TNPSC Thervupettagam

இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் இந்தியா பாதுகாப்பு, காப்பீடு அம்சங்களில் சமரசமா?

May 13 , 2024 67 days 80 0
  • பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் 6 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் கட்டுமான வேலைகளில் பணிபுரிந்து வந்த 90 ஆயிரம் பாலஸ்தீனத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் இஸ்ரேலில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. கட்டுமான துறையை மேம்படுத்துவதற்காக சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 70 ஆயிரம் தொழிலாளர்களை அழைத்து வர இஸ்ரேல் முடிவு செய்தது.

இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள்:

  • 10,000 இந்திய கட்டுமான தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இஸ்ரேலில் கட்டுமான வேலைகள் செய்வதற்கு மாதம் ரூ.1.36 லட்சம் சம்பளத்தில், 45 வயதுக்குட்பட்ட 10,000 தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தேசிய திறன் மேம்பாட்டு கழகம் கடந்த டிசம்பர் மாதம் விளம்பரம் வெளியிட்டது.
  • பிஹார், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இதற்கான வேலைவாய்ப்பு முகாமில் குவிந்தனர்.
  • இந்த இளைஞர்களில் பலர் ஆசிரியர் பயிற்சி உட்பட பல்வேறு பட்டப் படிப்புகளை படித்தவர்கள். குறைவான சம்பளம், குடும்ப வறுமை, அரசு பணியிடங்களுக்கு அதிக போட்டி, தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கிடைக்காதது, பொருளாதார சுணக்கம், எதிர்கால குடும்ப நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இஸ்ரேலுக்கு வேலைக்கு செல்வதற்கு அவர்கள் தயாராகி உள்ளனர்.
  • அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில் கரோனா ஊரடங்குக்குப் பிறகு 15 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகளுக்கும், 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளில் 42 சதவீதம் பேருக்கும் வேலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார சுணக்கத்தின் காரணமாக நிலையான முறைப்படுத்தப்பட்ட ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் இந்தியாவில் குறைந்து விட்டன. இந்தச் சூழலில் அதிக வருமானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் போர்ச் சூழல் நிலவும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முடிவுக்கு இந்திய இளைஞர்கள் வருகின்றனர் என்று பொருளாதார நிபுணர் ரோசா ஆபிரகாம் குறிப்பிடுகிறார்.

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு:

  • ஏற்கெனவே, ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் வேலை செய்யும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவித்தது. இந்த நிலையில், தற்போது 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு இந்திய அரசு அனுப்புவது பேசுபொருளாகி உள்ளது. பாதுகாப்பு இல்லை என்பது தெரிந்தும் மத்திய அரசு தொழிலாளர்களை அனுப்ப முடிவு எடுத்துள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
  • அயல்நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை ஒழுங்கு படுத்தும் நோக்கத்தில் இ-மைகிரேட் தளம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த தளத்தின் நோக்கமே தொழிலாளர்களின் பாதுகாப்பையும், வேலைக்கான தயார் நிலையையும் உறுதிப்படுத்துவதே. இதில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்பவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட தொழிலாளர் நலன் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
  • இந்த தளம், குடிபெயர்வோர், பாதுகாவலர் அலுவலகம், தூதரகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், பாஸ்போர்ட் அலுவலகங்கள், ஆள் சேர்ப்பு நிறுவனங்கள், வேலை தருபவர்கள் மற்றும் குடிவரவு பணியகம் ஆகியவற்றுக்கு இடையே சர்வதேச தொழிலாளர் புலம்பெயர்வில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துகிறது.
  • 1983-ம் ஆண்டின் குடியேற்ற சட்டத்தின்படி அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் இந்த காப்பீட்டு திட்டம் கட்டாயமாகும். ஆனால் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தினால் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு செல்லும் தொழிலாளர்கள் யாரும் இந்த இ-மைகிரேட் போர்டலில் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் வேகம் காட்டும் மத்திய அரசு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதை முற்றிலுமாக கைவிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

அடிப்படை உரிமைகள் கூட இல்லை:

  • இஸ்ரேல் செல்லும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலேயே அவர்களது உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான தொகை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேலுக்கு செல்லவும் பின்பு அங்கிருந்து திரும்பி வரவும் விமான டிக்கெட்டுக்கான கட்டணத்தையும் தொழிலாளர்களே ஏற்க வேண்டும்.
  • தொழிலாளர்களுக்கான அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை. பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை.
  • பிற நாடுகளில் வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வேலைக்கான உத்தரவாதம் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதி கூட இஸ்ரேலுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படும் விவகாரத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
  • இந்திய இஸ்ரேல் ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் செயல்படுத்தும் பொறுப்பு தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஆனால், தொழிலாளர் நலன் சார்ந்த கெடுபிடிகள் எதுவும் இருக்கக் கூடாது என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இந்திய அரசு சமரசம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
  • ஒவ்வொரு தொழிலாளியிடமும் தலா பத்தாயிரம் ரூபாயை கட்டணமாக வசூலிக்கும் தேசிய திறன் மேம்பாட்டு கழகம், அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பொறுப்பேற்க மறுக்கிறது.
  • உயிரைப் பணயம் வைத்து... இஸ்ரேலிய அரசாங்கம் இந்திய தொழிலாளர்களை தான் ஆக்கிரமித்து இருக்கிற பாலஸ்தீன பகுதிகளில் வேலைக்கு அமர்த்தினால் அது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாக கருதப்படும். ஆகவே, இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப வேண்டாம் என்று இந்திய கட்டுமான துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பு, இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவை வேண்டுகோள் விடுத்துள்ளன.
  • போர் நடக்கும் நாட்டில் இருந்து தனது மக்களை வெளியேற்றுவதற்குத்தான் எந்தவொரு அரசும் முன்னுரிமை தரும். ஆனால், தற்போதைய நிலை அதற்கு நேர்மாறாக உள்ளது. அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டமே இந்திய தொழிலாளர்களை தங்களது பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் சமரசம் செய்ய வைத்து போர் நடைபெறும் நாட்டுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளி உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்