- யூத மதத்தின் வரலாற்றில் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் மிகவும் கரடுமுரடான கால கட்டமாக அமைந்தன. அடுத்த 700 ஆண்டு கால வரலாற்றில் நடந்த கிறிஸ்துவ மத உருவாக்கமும் பரவலும் உலகளாவிய நோக்கில் அரசியல் மற்றும் மத அதிகாரங்களை மாற்றி அமைத்த முக்கிய விசைகளில் ஒன்றாக அமைந்தது. இந்த மறுசீரமைப்பு யூதர்களுக்கு எதிர்காலம் குறித்த கேள்வியை மேலும் அதிகரிக்கவே செய்தது.
- பிறப்பால் ஒரு யூதர் இயேசு. அவருடைய சீடர்கள் அனைவரும் யூதர்களே. யேசு பிறந்த பெத்லஹேம் நகரம் ஜெருசலேம் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. அதாவது, அந்தக் கால ஜூடேயா நாட்டில் ஒரு பகுதி. இயேசு பிறந்த இடம் யூத நாடாக இருந்தபோதும், அது ஒட்டு மொத்தமாக ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.
- வேறொரு மதச் சூழலில் வேறோரு அரசியல் அதிகாரத்தின் கீழ் ஒரு புதிய மதமாக கிறிஸ்துவம் எழுந்துவந்து இன்று உலகெங்கும் பரவிக் காலூன்றியது என்பது மனித குல வரலாற்றில் அசாத்தியமான நிகழ்வுகளில் ஒன்று.
புனித உடன்படிக்கை
- இயேசுவின் போதனைகள் யூத மத பின்புலத்தில் இருந்துவந்தாலும் அவை தனித்துவமான பாதையில் வேறொரு திசையை நோக்கிச் சென்றன. இரண்டு மதங்களும் ஓரிறை வழிபாட்டை ஏற்றாலும் அந்த இறைக்கு இயேசு முற்றிலும் வேறான ஒரு விளக்கத்தை அளித்தார். கடவுள் அனைத்தையும் படைப்பவராகவும் (Father) – அவரின் மகனாக பூமியில் அவதரித்தவராகவும் (Son of God) – எல்லாவற்றிலும் உறைந்திருக்கும் புனித ஆவியாகவும் (Holy Spirit) திரித்துவமாக உருவகித்தார். இம்மூன்றும் தனித்தனி இருப்புகளாக அடையாளப்படுத்தப்பட்டாலும் இவற்றின் சாரம் ஒன்றுதான் என்றார்.
- மாறாக யூதர்கள் கடவுள் எந்தவிதத்திலும் பிளவுபடுத்த முடியாத வேறுபடுத்த முடியாத, முழு முதல் ஒற்றை இருப்பு என்று நம்புகிறார்கள். யூத நம்பிக்கை இயேசுவை (அல்லது வேறு யாரையும்) கடவுளின் அவதாரமாகவோ, அவரின் பகுதியாகவோ ஏற்க மறுத்தது. இந்த இறையியல் கோட்பட்டு உள்ள வேறுபாடு கிறிஸ்துவம் தனித்துவமான ஒரு மத நோக்காக யூத மதத்தில் இருந்து வேறுபடுத்திக்கொண்டு விலகி வளர வழி வகுத்தது.
- இறையியலைத் தாண்டி நடைமுறையிலும் இயேசு முன்வைத்த விஷயங்கள் பல யூதர்களுக்கு ஏற்புடையனவாக இருந்தன. பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட மீட்பராக பலரை இயேசுவைக் கண்டார்கள். மேலும் கடவுளைக் கண்களால் காண முடியாத அரூப நிலையில் இருந்து கடவுளின் அவதாரமாக மனித உருவில் ஒருவரைக் காணுவதில் உள்ள நெகிழ்வுத்தன்மை பலருக்குக் கடவுளை மேலும் நெருக்கமான ஓர் இருப்பாக காட்டியது.
- இதையும் தாண்டி மிக முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. யூத நம்பிக்கையின் அடித்தளம் கடவுள் யூத மக்களிடம் செய்துகொண்ட ‘புனித உடன்படிக்கை’யாகக் (Mosaic Covenant) கருதப்படுகிறது. மக்கள் யூத மதக் கோட்பாடுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டு நடந்தால், தொடர்ந்து வழிபாடுகளையும் சடங்குகளையும் பிசகாமல் செய்துவந்தால், கடவுள் அவர்களைக் காத்திருப்பார் எனவும், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசமாக இஸ்ரேல் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்றும் சொல்கிறது.
யூத வெறுப்பின் வேர்கள்
- இயேசு முன்வைத்த புதிய உடன்படிக்கை பாவ மன்னிப்பைப் பிரதானமாக முன்வைக்கிறது. நற்கருணை, சக மனிதரை அன்பு செய்தல் போன்ற விஷயங்களை முன்வைக்கிறது. இறைவனின் கட்டளைகள் நம்பிக்கையாளர்களின் மனதில் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்கிறது. மிகக் கறாரான சட்டங்களும் நெறிமுறைகளும் கொண்ட யூத நம்பிக்கையில் இருந்து விலகி இயேசு முன்வைத்த பாதை நெகிழ்வும், எளிமையும், மனிதத்தன்மையும் கொண்ட ஒரு வடிவத்தை அடைகிறது.
- இந்தக் காரணங்களால் இயேசுவிடம் பல சாமானிய யூதர்கள் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால், யூத மதத் தலைவர்கள் தரப்பில் இயேசு யூத நம்பிக்கைகளுக்குப் புறம்பான விஷயங்களை முன்வைத்ததும் தன்னைக் கடவுளின் மைந்தன் என்று சொல்லிக்கொண்டதும் மத நிந்தனையாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
- இந்தக் குற்றங்களை முன்வைத்து இயேசுவை ரோமானிய அதிகாரிகள் முன்பு கொண்டு நிறுத்தினர். ரோமானிய அரசு மதரீதியான குற்றச்சாட்டுகளைப் பெரிதாக பொருட்படுத்தாவிட்டாலும், இயேசு தன்னை ராஜாவாக அறிவித்துக்கொண்டதைப் பெருங்குற்றமாக கருதியது. இவ்வாறு அரசியல் விசைகளும் மத விசைகளும் பிரித்தறிய முடியாத வண்ணம் இயேசு சிலுவையில் அறையப்பட காரணமாயின.
- பிறகாலத்தில் திரளவிருக்கும் யூத வெறுப்பின் வேர்கள் இங்கிருந்துதான் கிளைத்தன. கிறிஸ்துவர்களின் பார்வையில் இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமானவர்களாக யூதர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மெல்ல கிறிஸ்துவம் என்பது யூத மதத்தின் ஒரு கிளையாக இருப்பதில் இருந்து, ஒரு தனி மதமாக மாற ஆரம்பித்தது. கிறிஸ்துவம் பரவப் பரவ யூதர்களின் மீதான நீக்கவே முடியாத இந்தக் கறையும் பரவ ஆரம்பித்தது.
யூதம் தன்னை எப்படிக் கட்டமைத்துக் கொண்டது
- இதுவரை லெவான்ட் பகுதியில் மட்டும் இருந்த யூதர்கள், மதரீதியான கெடுபிடிகளுக்குத் தப்பி ரோமப் பேரரசின் கீழ் இருக்கும் பல்வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார்கள். வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு என்று ரோம ஆதிக்கம் மிகப் பரந்த நிலப்பரப்பில் விரவியிருந்தது.
- ஆப்பிரிக்காவில் கறுப்பின யூதர்கள் உருவானது இவ்விதம்தான். பல யூதர்களுக்கே ஆப்பிரிக்க பூர்வகுடிகளில் யூதர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமளிப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்படிப் பரவலாக சிதறிய யூதர்களின் அவர்கள் சென்ற எல்லா நாடுகளிலும் அவர்களைச் சிறுபான்மையினர் ஆக்கியது.
கறுப்பின யூதர்கள்
- மைய நிலம் இல்லாமல் வழிபாட்டுத்தலங்களும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சூழலில், யூத மதம் தன்னை இந்தத் தடைகளுக்கு ஏற்ப கட்டமைத்துக்கொண்டது. ஒரு நாடு, ஒரு வழிபாட்டிடம், ஒற்றை வாழ்விடம் எளிதில் சாத்தியமாகாது என்பதை உணர்ந்து யூதர்கள் யூத மதத்தை, ஒற்றைப் புள்ளியில் குவியாத பரவலாக கட்டமைப்பு (De-centralised) கொண்ட மதமாக பரிணமித்துக்கொண்டார்கள். இதன் காரணமாக, யூத குருமார்களான ராபைகள் (Rabbi) பங்கு யூத மதத்தில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.
- ராபைகளில் செயல்பாடு நம் ஊர் பஞ்சாயத்து தலைவர்களின் செயல்பாட்டுக்கு ஒத்தது. அதாவது, மதரீதியாக அந்தந்தச் சமூகங்களுக்கு அங்குள்ள ராபை வழிகாட்டுபவரகாக இருப்பார். அவருக்கு மேலோ கீழோ யாரும் இருக்க மாட்டார்கள். இப்படி மத அதிகாரம் என்பது ஒற்றைப் புள்ளியில் குவியாமல் பரவலாகிறது. இது அவர்கள் குடியேறியுள்ள நாட்டில் அந்தந்தச் சூழல்களுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ள உதவியது.
- ஆனால், யூத மதப் பின்புலத்தில் உருவான கிறிஸ்துவ மதம் இதற்கு முற்றிலும் மாறான முறையில் தன்னைக் கட்டமைத்துக்கொண்டது.
- இந்தத் திசை நோக்கிய முக்கிய நகர்வு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் ஆரம்பிக்கிறது. ரோம அரசரான கான்ஸ்டன்டைன் தனது தங்கையின் கணவருக்கு எதிராகப் போர் புரிய நேர்கிறது. அந்தப் போருக்கு முன் அவர் தனது கனவில் சிலுவை போன்ற ஓர் அடையாளத்தைக் காண்கிறார். அதை ஒரு புனித வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்கிறார். அது அளித்த நம்பிக்கையின் பேரில் ஈடுபடும் தனது படைகளில் கேடையங்கள் அனைத்திலும் சிலுவை குறியைப் பொறிக்கச் சொல்கிறார். இறுதியாக அவருக்கு அந்தப் போரில் மாபெரும் வெற்றி கிடைக்கிறது. தனது வெற்றிக்குக் காரணம் இயேசு என்று நம்புகிறார்.
மிலான் அரசாணை
- மரபாக ரோமானியர்கள் பன்மையான இறை வழிபாட்டுமுறையைப் பின்பற்றிவந்தவர்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கடவுளை வைத்திருப்பார்கள். அப்பல்லோ, வீனஸ், டயானா இவை எல்லாமே கடவுளர்களின் பெயர்கள். ஜூபிடர் இவர்களின் தலைமை கடவுள். இந்த நீண்ட மரபில் வந்த ரோம அரசர்களில் ஒருவர் ஓரிறை மரபான கிறிஸ்துவத்தை ஆதரித்தது கிறிஸ்துவ மதத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை எனலாம்.
- உருவாகி ஓரிரு நூற்றாண்டுகளே ஆன ஒரு புதிய மதத்தை ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் அதிகாரப்பூர்வமாக ஏற்பது என்பது மாபெரும் அங்கீகாரம். அரசியலுக்குள் மதம் நுழைவது எப்படி அரசியல் அதிகாரத்தைப் பன்மடங்காக்குகிறதோ அதேபோல மதத்துக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும்போதும் அது அந்த மதத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்துகிறது.
- கான்ஸ்டன்டைன் 313ஆம் ஆண்டு ‘மிலான் அரசாணை’ என்ற உத்தரவைப் பிறப்பிக்கிறார். அதன்படி கிறிஸ்துவ மதம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதமாக ஏற்கப்படுகிறது. இதுவரை அரசு கைப்பற்றிய மத வழிபாட்டிடங்கள், சொத்துக்கள் போன்றவை மக்களிடமே திருப்பி அளிக்கப்படுகின்றன. இது நடந்த பத்து ஆண்டுகளில் கிறிஸ்துவத்தை ரோம் சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரப்பூர்வமான மதமாகவே அறிவிக்கிறார். மேற்கே இங்கிலாந்தில் இருந்து கிழக்கே சிரியா வரை ரோமர்களின் ஆட்சிப் பரவியிருந்தது. இந்தப் பேரரசின் குடையின் கீழ் 5 கோடி மக்கள் வாழ்ந்துவந்தனர். இந்த அங்கீகாரம் கிறிஸ்துவம் பரவ எவ்வளவு முக்கியமானதாக அமைந்திருக்கும் என்பதை நாம் எளிதாக ஊகிக்கலாம்.
- இதே அளவு முக்கியமான இன்னொரு விஷயத்தையும் கான்ஸ்டன்டைன் செய்கிறார் 325ஆம் ஆண்டில் ‘நைசியன் சபை’ என்ற ஒன்றையும் உருவாக்குகிறார். வளர்ந்துவரும் கிறிஸ்துவ மதத்தில் வரக்கூடிய பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் களைந்து மதரீதியான கருத்தியல் இணைவை உருவாக்க இந்தச் சபை பெரும் உதவியாக இருந்தது. இந்தச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இன்றளவும் கிறிஸ்துவ வழிபாட்டு முறையிலும், கிறிஸ்துவ இறையியலிலும் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றன.
கிறிஸ்துவர்களை ஒடுக்கிய ரோம்
- ரோம் அதிகாரப்பூர்வமாக கிறிஸ்துவ மதத்தை ஏற்றதுக்கொண்டது பண்பாட்டுரீதியாக முக்கியமான இணைவுகளையும் பாய்ச்சலை நிகழ்த்தியது. ரோமானிய செவ்வியல் பண்பாடு, கலை, கட்டுமானம், தத்துவம், மொழி, அரசியல், விஞ்ஞானம், சட்டம் போன்றவை கிறிஸ்துவ இறையியல், அதன் மெய்யியல் மற்றும் குறியீடுகளுடன் ஒன்றர கலந்தது. இதுதான் நாம் இன்றும் மேற்கத்திய கலாச்சாரம் என்று ஒட்டுமொத்தமாக சுட்டுவதற்கு அடித்தளமாக அமைந்தது.
- வரலாற்றில் எதேச்சையாக நடக்கும் சில விஷயங்கள் எதிர்காலத்தில் மாபெரும் பாதிப்பைச் செலுத்துபவையாக மாறுவது பெரும் வியப்பளிப்பது. ஏனென்றால், கிறிஸ்துவ மதத்துக்கும் இப்படி ஒரு நல்லூழ் அமைந்தது எனலாம். கிறிஸ்துவ மதம் உருவான முதல் இரண்டு நூற்றாண்டுகள் வரை ரோம அரசு கிறிஸ்துவர்களைக் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியது வரலாறு.
- புனித இக்னேசியஸ், முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்துவ மதத்தின் ஆரம்பக் கால திருத்தூதர்களில் (Apostels) ஒருவர். கிறிஸ்துவ இறையியல், தேவாலயவியல் (ecclesiology) போன்ற விஷயங்கள் குறித்து எழுதிய முன்னோடிகளில் ஒருவர். குறிப்பாக, பாதிரிமார்களின் அதிகாரம், மத ஒற்றுமை பேணுதல், திருச்சபையின் கட்டமைப்பு, அதன் அதிகார அடுக்கு போன்ற கருத்துகளை எல்லாம் முன்வைத்தவர். இதை அவர் எழுதிவைக்கத்தான் முடிந்தது.
- இதுபோன்ற கருத்துகளை முன்வைத்ததற்கும் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் ரோமானிய அரசால் கொல்லப்பட்டார். ரோமானிய கேளிக்கை அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டார். புனித இக்னேசியஸ் தனது மனதில் எதை உத்தேசித்தாரோ அதை இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் தன்னை தண்டித்த அதே ரோமப் பேரரசின் வழிவந்த இன்னொருவர் நிறைவேற்றுவார் என்பதை அவர் கனவிலும் கற்பனை செய்திருக்கவே மாட்டார்.
- ஓரிறை மதங்கள்
- யூத மதமும் ஓரிறை மதம்தான். கிறிஸ்துவமும் ஓரிறை மதம்தான். அந்தக் காலகட்டத்தில் இவ்விரண்டு மதங்களுக்கும் இடையே இருந்த வேறுபாடு நுட்பமான இறையியல் வேறுபாடு மட்டுமே. கிறிஸ்துவம் இன்று அடைந்திருக்கும் பிரமாண்டமான வடிவும் விரிவும் அன்றில்லை. அப்படி இருக்க பல நூறாண்டுகள் பழமையான யூத மதத்தைவிட இளைய மதமான கிறிஸ்துவத்தின்பால் கான்ஸ்டன்டைன் ஈர்க்கப்பட்டது மிக முக்கியமான வரலாற்று திருப்பத்திற்கு வித்திட்டது. ஒருவேளை அவர் யூத மதத்தைத் தனது மதமாக தேர்ந்தெடுத்திருந்தால். இன்று நாம் காணும் உலக அமைப்பே வேறு விதமாக இருந்திருக்கலாம்.
அரசர் கான்ஸ்டன்டைன்
- கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சிய ரோம ராஜ்ஜியம் நான்காம் நூற்றாண்டில் சரியலானது. ஆனால், அதற்குள் கிறிஸ்துவம் நன்கு பரவி நிலையாக ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது. ஐந்தாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் கிறிஸ்துவம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பான்மை அதிகாரம் கொண்ட மதம் என்னும் நிலையை எட்டிவிட்டது.
- யூதர்களுக்குத் தங்களுக்கென்று அரசியல் அதிகாரமும் இல்லை, அதிகாரத்தில் இருக்கும் அரசுகளின் அதரவும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் மதரீதியான தலைமையை மட்டுமே தங்கள் வழிகாட்டுதலுக்காக உருவாக்கிக்கொள்கிறார்கள். ராபைகள் ஆன்மிக வழிகாட்டிகளாக மட்டும் இல்லாமல், யூதர்களின் அன்றாட நடைமுறை கேள்விகளுக்கும் சிக்கல்களுக்கும் வழிகாட்டுபவர்களாக மாறிவிடுகிறார்கள்.
தவிர்க்க முடியாத பாலஸ்தீனம்
- தாய் நாடு என்ற ஒன்றில்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் குடிபெயர்ந்தவர்கள் அந்தந்த நாட்டோடு தம்மை இணைத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு ஏற்கெனவே எண்ணிக்கையில் குறைவான யூதர்கள் மேலும் பல்வேறு நாடுகளில் சிதறி, முற்றான அரசியல் அதிகாரம் அற்றவர்களாக மாறுகிறார்கள்.
- இதற்கிடையிலேயேதான் இஸ்லாம் ஒரு மதமாக அரேபிய தீபகற்பத்தில் உருவாகிவருகிறது. இஸ்லாமியப் பரவல், மதம் மற்றும் அதிகாரம் சார்ந்த சமன்பாட்டை முற்றிலும் வேறொரு பக்கம் சாய்க்கிறது. இஸ்லாமிய அரபு தேசமாக பாலஸ்தீனம் என்பது எப்படி நாம் தவிர்க்கவே முடியாத ஒரு நிதர்சனம் என்பது இந்தப் புள்ளியில்தான் ஆரம்பமானது.
நன்றி: அருஞ்சொல் (18 – 10 – 2023)