TNPSC Thervupettagam

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலும் காஸா போரும் விரிவும் ஆழமும் கொண்ட அலசல்

October 17 , 2023 453 days 303 0
  • காஸாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பு, கடந்த வாரம் இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவில் எதிர்மறையாக பெருங்கவனம் பெற்றுள்ளது.
  • பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பான ஹமாஸ் தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைக் கொன்று, பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்று, ஒட்டுமொத்த இஸ்ரேல் ராணுவத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
  • அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலின் மூலம் இஸ்ரேலின்  பாதுகாப்பு வியூகங்கள் மிகப் பலம் பொருந்தியவை என்ற கருத்து உடைத்தெறியப்பட்டதுடன், இஸ்ரேல் உளவு அமைப்பின் திறனைக் கேலிக்குரியதாக்கியது.
  • மறுபுறம், மிகுந்த பாதுகாப்பு உணர்வுடைய இஸ்ரேலின் மீது எப்படி இப்படியொரு தாக்குதல் நடத்த முடிந்ததென தீவிரவாத இயக்கங்கள் மத்தியில் ஹமாஸ் அமைப்பின் அந்தஸ்து உயர்ந்துள்ளது.
  • இந்தத் தாக்குதல் குறித்த தகவல்கள் முன்பே இஸ்ரேலுக்கு கிடைத்திருந்தும்,  அவற்றை இஸ்ரேல் அலட்சியம் செய்துவிட்டது என்பது உள்ளிட்ட ஏராளமான சதிக் கோட்பாடுகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இவை எதுவும் நம்பகத்தன்மைக்கு உகந்ததாக இல்லை.
  • இந்த விவகாரத்தில் இஸ்ரேல் உளவு அமைப்பின் தோல்வி தெளிவாகத்  தெரிகிறது. இருப்பினும் இஸ்ரேலின் அரசியல் தலைமை இதுகுறித்த எந்த உடனடி விளக்கமும் அளிக்க மறுத்துவிட்டது. அந்நாட்டு ராணுவமும் இதுகுறித்துப் பேசத் தயாராக இல்லை; ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டுவதே அதன் தலையாய பணியாக உள்ளது. பாதுகாப்பு மீறல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த இஸ்ரேல் ராணுவ தலைமை செய்தித்  தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “முதலில் நாம் சண்டையிடுவோம், பிறகு இதுகுறித்து ஆய்வு நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

வெளியேற்றம்

  • ஹமாஸ் இலக்குகள் மீது வான்வழி தாக்குதல்களையே அதிகமாக நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில்  தரைவழித்  தாக்குதல்களையும் சமீபத்தில் தொடங்கியுள்ளது. வடக்கு காஸா பகுதியில் உள்ள பத்து  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து  வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டது தரைவழித் தாக்குதலுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது.
  • முன்னதாக, ஹமாஸ் அமைப்பு வெளிநாட்டவர்கள் உட்பட 150 பேரை இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றது. மேலும் அவர்களைக் காஸாவிற்கு கொண்டு சென்று தரைவழித் தாக்குதலைத் தடுக்கவும், தற்போது சிறையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் செயற்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரி இஸ்ரேலை கட்டாயப்படுத்தவும் திட்டமிட்டது. ஆனால், இஸ்ரேலுக்கு வேறு திட்டங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
  • ராணுவ நடவடிக்கைகளின் மூலமாகவே பயங்கரவாதிகளை  வெளியேற்றுவதற்கும், பணயக் கைதிகளை மீட்பதற்கும் திட்டமிடுகிறது. பணயக்கைதிகள் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கோ, சமரசத்திற்கோ இடமில்லை என்ற இஸ்ரேலின் கொள்கை கடும் சோதனையில் உள்ளது. பிற நாடுகளின் குடிமக்கள் உட்பட ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கடத்தப்பட்டிருப்பதால் இஸ்ரேல் அதன் நிலைப்பாட்டை மாற்றுமா இல்லையா என்பது காஸாவில் உள்ள பிரமாண்டமான நிலத்தடி சுரங்கப்  பாதைகளுக்குள்ளிருந்து  ஹமாஸ் இயக்கத்தினரை வெளியேற்றும் திறனைப் பொருத்தது.

ஏமாற்றுத் தந்திரம்

  • இஸ்ரேலை உள்ளடக்கிய புவியியல் பகுதியான வரலாற்றுக் கால  பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசை அழித்து, முஸ்லிம் அல்லாதவர்களை அகற்றி ஒரு சுதந்திரமான இஸ்லாமிய அரசை நிறுவுவதே ஹமாஸின் குறிக்கோள் எனக் கூறப்படுகிறது.
  • இதனால், இஸ்ரேலுக்கு எதிராகத் தற்கொலைப் படை தாக்குதல் உள்ளிட்ட பலவிதமான தாக்குதல்களை ஹமாஸ் மேற்கொள்ளத் தொடங்கியது. ஆனால் , இவையெல்லாம் பிராந்திய தலைப்புச் செய்திகளைத் தாண்டி வெற்றி பெறவில்லை.
  • கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள், பேச்சைக் குறைத்து, 2007ல் வன்முறையின் மூலமாக கைப்பற்றிய, வறுமையில் உள்ள காஸா பகுதியை நிர்வகிப்பதில் முழுக் கவனம் செலுத்துவதாக ஹமாஸ் போலித்தனத்தைக் காட்டியது.
  • மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் எதையும் திட்டமிடாமல், செயலற்றதாக மாறும் அளவில் நிலையைக் கவனமாக உருவாக்கியது. இதனால் ஹமாஸ் சூழ்ச்சியில் இஸ்ரேல் விழுந்தது.
  • அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சிறிய அளவிலான தாக்குதல்கள், ஏவப்பட்ட சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழக்கமாக முறியடித்தது. இந்தப் பகுதி முழுவதும் தங்கள்  கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்ற தவறான நம்பிக்கையை இஸ்ரேலுக்கு  அளித்தது ஹமாஸ்.
  • சமாதானத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் 18,000 பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டில் வேலை செய்ய அனுமதித்தது.
  • மேலோட்டமாகப் பார்த்தால், இஸ்ரேலில் வேலைவாய்ப்புகள், சிறந்த ஊதியம் போன்றவை நன்றாக இருந்தன. இதனால் காஸாவிலிருந்து பெரிய தாக்குதல்கள் ஏதும் இல்லை, இஸ்ரேலிய உளவுத் துறை நிறுவனங்களும் ஹமாஸ் பற்றி கவலைப்படத் தகுந்த அளவில் எந்த உரையாடலையும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் ஹமாஸ் மிகப் பெரிய திட்டங்களைக்  கொண்டிருந்தது. அதன் வரலாற்றில் மிகப் பெரிய  தாக்குதலுக்குத் தயாராகும் நேரத்திற்குக் காத்திருந்தது.
  • இஸ்ரேலின் அதிநவீன உளவுத் துறை கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக, ஹமாஸ் படையினர் தாக்குதலைத் திட்டமிடும்போது மொபைல் போன்கள், பிற மின்னணு சாதனங்களைத் தவிர்த்து நேரடியாகவே தொடர்பு கொண்டனர். அவர்கள் தனியாகவும், பொதுக் கூட்டங்கள் மூலமாகவும், ரகசியமாக செய்திகளை அனுப்பினர். இதனால் ஹமாஸ் படையினர் எந்தக் கவலையும் இன்றி பொதுவிலேயே பயிற்சி பெற்றனர். இஸ்ரேலின் பாதுகாப்புப் படையும் நிம்மதியாக இருந்தது. அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் பல மாத யோசனையில் இஸ்ரேல் இருந்ததால் மக்களும் அதிருப்தி அடைந்தனர்.
  • அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்த ஹமாஸ் படையினர்,  செப்டம்பர் 29 முதல்  அக்டோபர் 6 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் யூதர்களின் 'சுக்கோட்'  பண்டிகை விடுமுறைக் காலத்தைத் தேர்வு செய்தனர்.

ஹமாஸைச் சீண்டியது எது

  • பாலஸ்தீனப் பிரச்சினையே உலக நாடுகளால்  ஓரங்கட்டப்பட்டுவிட்டதைப் போன்ற ஒரு நிலையேற்பட,  குறிப்பாக,  இஸ்ரேலுடன்  அரபு நாடுகளே  நெருக்கம் கொள்ளத் தொடங்கிவிட்ட நிலையில் ஹமாஸ்  அமைப்பினர் சீண்டப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
  • ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய  நாடுகளுடன் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும்  வகையில் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டதை ஹமாஸ்  கடுமையாக எதிர்த்தது.
  • ஈரான் போன்ற பொதுவான நாடுகளை எதிர்கொள்ள டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் 2020-21ல் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
  • ஹமாஸின் மிகப் பெரிய நோக்கம் என்னவெனில், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 5,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதும், காஸா மீதான 16 ஆண்டு கால முற்றுகையை நீக்குவதும் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தடுப்பதுமே ஆகும்.
  • அவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து பாலஸ்தீனர்களும் ஹமாஸின்  ஆளுகையின் கீழ் சிறந்த முறையில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை ஹமாஸ் தெரிவிப்பதாக இருந்தது.

ஹமாஸ் சாசனம்

  • ஹமாஸ் தனது சாசனத்தை ஆகஸ்ட் 1988ஆம் ஆண்டு வெளியிட்டது, அதன் முக்கிய நோக்கமாக "பாலஸ்தீனம் முழுவதுக்குமான ஓர் இஸ்லாமிய அரசை" அமைப்பதாகும்.
  • அடிப்படை ஆவணத்தில் பல யூத எதிர்ப்புக் கொள்கைகள் இடம்பெற்றிருந்தன.
  • அந்த சாசனமானது, இரு நாடுகள் என்ற தீர்வை நிராகரிக்கிறது மேலும் மோதலை "ஜிஹாத் தவிர" தீர்க்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறுகிறது.
  • சாசனத்தின் ஆறாவது பிரிவானது, "முழு நிலமும் பேரம் பேச முடியாதது" என்று குறிப்பிடுகிறது.
  • மீண்டும் எழுதப்பட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் வெளியான புதிய சாசனத்தில், ஹமாஸ், யூத எதிர்ப்பு என்பதைவிட சியோனிசத்திற்கு எதிரானது என பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேல் அரசு சட்ட விரோதமானது மற்றும் முறைகேடானது என்றும், இஸ்ரேலையும் உள்ளடக்கி, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதி முழுவதையும் இஸ்லாமிய பாலஸ்தீன அரசாக்குவதே இலக்கு என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறது.

வன்முறை சித்தாந்தம்

  • ஹராகாத் அல்-முகவாமா அல்-இஸ்லாமியா (இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்) என்பதன் அரபுச் சுருக்கமே 'ஹமாஸ்'. இஸ்ரேலுக்கு எதிரான முதல் கிளர்ச்சிக்குப் பிறகு 1987ல் அகமது யாசின் என்பவரால் இது தொடங்கப்பட்டது. யாசின், எகிப்தில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவத்தின் பாலஸ்தீனிய கிளையுடன் தொடர்புடைய ஒரு மதகுரு.
  • பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (Palestine Liberation Organization) மதச்சார்பற்ற அணுகுமுறையை ஹமாஸ் கடுமையாக எதிர்த்தது. மேலும், பாலஸ்தீன பிரச்னையில் உண்மையான அக்கறை கொண்ட ஓர் அமைப்பாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது. மேலும், தனது நோக்கங்களை நிறைவேற்ற யோசிக்காமல் வன்முறை வழிகளைக்  கையாண்டதுடன் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்துக்கு (Palestinian Islamic Jihad ) எதிராகத் தன்னை இணைத்துக் கொண்டது.
  • மற்ற அரசியல், மத அமைப்புகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்ட ஹமாஸ், இன்று பாலஸ்தீனத்தின் மிகப் பெரிய தீவிரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது. ஹமாஸ் 1993 ஏப்ரல் மாதத்தில் முதல்முதலாக தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியது.
  • பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ராபின் ஆகியோர் ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடைபெற்றது.
  • இந்த ஒப்பந்தம் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் பாலஸ்தீன அதிகாரம் என்ற தனி அரசை நிறுவியது.
  • பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் இஸ்ரேல் இரண்டும் ஒன்றையொன்று அங்கீகரிக்கும் இந்த உடன்படிக்கைக்கு ஹமாஸ் கண்டனம் தெரிவித்தது.

ஆரம்ப காலத்தில்

  • கடந்த 1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இஸ்லாமிய முஸ்லிம்  சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்த ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் பாலஸ்தீனத்தின் காஸா  மற்றும் மேற்குக் கரையில் சிறிய மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைத் திறந்து பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் காஸாவில், அவர்கள் பல  மசூதிகளைக் கட்டுவதில் தீவிரமாக இருந்தனர், அதேவேளையில் மேற்குக் கரையில் பல்கலைக்கழகங்களைத் திறப்பது என்ற அளவில் நிறுத்திக்கொண்டனர்.
  • இந்த பகுதிகளில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வன்முறையற்றவையாகவே இருந்தன. ஆனால், பல சிறிய குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஜிஹாத் அல்லது புனிதப் போருக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கின. இதற்கிடையே, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மதப் பிரிவுகளால் உருவாக்கப்பட்ட ஹமாஸ் தொடங்கப்பட்டவுடன், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வுகள் வலுப்பெறத் தொடங்கின.
  • ஹமாஸ் தனது 1988 சாசனத்தில், பாலஸ்தீனம் ஒரு இஸ்லாமிய நாடு என்றும், அது முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஒருபோதும் சரணடைய முடியாது என்றும், பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடம் இருந்து கைப்பற்றப் புனிதப் போரை நடத்துவது பாலஸ்தீன முஸ்லிம்களின் மதக் கடமை என்றும் கூறியது. ஆனால், ஹமாஸின் இந்த நிலைப்பாடு, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுடன் மோதலுக்கு வழிவகுத்தது. இதுவே 1988-ஆம் ஆண்டில் இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை அங்கீகரித்தது. ஹமாஸ் பின்னர் தனது நிலைப்பாட்டை ஓரளவு திருத்தியமைத்துக் கொண்டது. ஆனாலும், இஸ்ரேலை அங்கீகரிக்க  மட்டும் மறுத்துவிட்டது.

கைப்பற்றப்பட்ட காஸா

  • 2006 ஆம் ஆண்டில், பாலஸ்தீன சட்டப்பேரவை தேர்தலில் ஹமாஸ் போட்டியிட்டு, 132 இடங்களில் 74 இடங்களை வென்றது. இந்த வெற்றி, அந்த நேரத்தில் பாலஸ்தீன அதிகாரத்தை வைத்திருந்த ஃபதாவைத் தோற்கடிக்க உதவியது. இது ஹமாஸ் மற்றும் யாசர் அராஃபத் நிறுவிய  ஃபதா கட்சிக்கு இடையே அதிகாரப் போட்டிக்கு வித்திட்டது.
  • காஸாவை ஹமாஸ் கைப்பற்றியது மிகப் பெரிய  வன்முறையாக மாறியிருந்தது. ஹமாஸ் போராளிகள் காஸா பகுதியைக் கைப்பற்றி ஃபதா அதிகாரிகளை வெளியேற்றினர். இரு குழுக்களுக்கு இடையேயான சண்டை 2007 ஆம் ஆண்டு ஜூன் 10 முதல் 15ஆம் தேதி வரை நீடித்தது. இதனால், ஐக்கிய அரசும் கலைக்கப்பட்டது. இதன் மூலம் பாலஸ்தீனப் பகுதிகள் இரண்டாகப் பிரிந்தன. ஒன்று, பாலஸ்தீன தேசிய ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் மேற்குக் கரையாகவும், மற்றொன்று ஹமாஸால் ஆளப்படும் காஸாவாகவும் உருவானது.

தலைவர்கள்

  • ஹமாஸின் நிறுவனர் யாசின் தனது 12 வயதில் நேரிட்ட விபத்தினால் மாற்றுத் திறனாளியாகி, சக்கர நாற்காலியில்தான் இருந்தார். 2004 ஆம் ஆண்டு காஸா நகரில் தொழுகையின்போது யாசின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.  இவருக்குப் பிறகு ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான சலா ஷெஹாடே  இருந்தார்.  1996 இல் ஹமாஸ் இராணுவத் தலைவரும் வெடிகுண்டு நிபுணருமான யாஹ்யா அயாஷ் இறந்த பிறகு, ஷேஹாட் முகமது டெய்ஃபுடன் இணைந்து குழுவில் ஒரு தலைவரானார். இவரும் 2002 ஆம் ஆண்டு நடந்த வான்வழித் தாக்குதலால் வெளியேற்றப்பட்டார்.
  • ஹமாஸின் தற்போதைய தலைவர்கள் யாஹ்யா சின்வார், முகமது டெய்ஃப் மற்றும் இஸ்மாயில் ஹனியே ஆகியோர் இருந்தனர்.
  • இவர்களில் யாஹ்யா மற்றும் முகமது டெய்ஃப் ஆகியோர், காஸா மக்களை, இஸ்ரேலின் தாக்குதலுக்கு இரையாக்கிவிட்டு, காஸாவில் உள்ள ஒரு சுரங்கப் பாதையில் பத்திரமாக இருப்பதாக நம்பப்படுகிறது, ஹனியே, காஸாவுக்கு வெளியே, கெய்ரோவிலும் தோஹாவிலும் மாறி மாறி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
  • இவர்களில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, நன்கு  அறியப்பட்ட தலைவர். ஹமாஸ் குழு 2006 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பாலஸ்தீனப் பிரதமராக மிகக் குறைந்த காலம் பதவி வகித்தவர்
  • 'ஊழியர்களின் தலைவர்' என அறியப்படும் முகமது டெய்ஃப், 2015 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடங்குவதாக டெய்ஃப் தான் ஆடியோ செய்தி மூலம்  அறிவித்தார்.
  • டெய்ஃப், 2002ஆம் ஆண்டு சலா ஷெஹாடே இறந்த பிறகு  ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 61 வயதான சின்வார், ஹமாஸ் ராணுவப் பிரிவின் முன்னாள் தளபதி. ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பிரெஞ்சு - இஸ்ரேலிய சிப்பாய் கிலாட் ஷாலித் விவகாரத்தில் கைதி பரிமாற்றத்தின்போது 2011 ஆம் ஆண்டு விடுவிக்கப்படுவதற்கு முன்பு சின்வார் சுமார் 23 ஆண்டுகள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் தேடப்படும் "சர்வதேச பயங்கரவாதிகள்" பட்டியலில் சின்வாரும் உள்ளார்.

இவர்களுக்கு நிதியளிப்பது யார்

  • ஈரானிடம் இருந்து ஹமாஸ் நிதியுதவி பெறுவதாகக் கூறப்படுகிறது.  இதுதவிர, ஈரானில் இருந்து சூடான் மற்றும் எகிப்து வழியாக ராக்கெட்டுகள் மற்றும் பிற வெடிபொருள்களும் அனுப்பப்படுவதாகவும் நம்மப்படுகிறது. இவை  அனைத்தும் சினாய் தீபகற்பத்திலுள்ள சுரங்கப் பாதைகள் வழியாக  காஸாவிற்குள் நுழைகின்றன. லெபனானில்தான் ஹமாஸ் படையினர் குண்டுகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளையும் பெற்றனர்.

சிக்கலின் தோற்றம்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் வரலாறு என்ன

  • இன்று நாம் காணும் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் 1948 வரை பாலஸ்தீனமாக ஒரே பகதியாகத்தான் இருந்தது. பாலஸ்தீனத்தை 1900-களில் ஒட்டோமன் பேரரசர் ஆட்சி செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் பேரரசை வீழ்த்தி ஆட்சியை பிரிட்டன் கைப்பற்றியது. அந்த சமயத்தில், பாலஸ்தீனத்தில் அரேபியர்கள் பெரும்பான்மையுடனும், யூதர்கள் சிறுபான்மையாகவும் வசித்து வந்தனர். இதற்கிடையே, பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் அதிகளவில் குடியேறத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தன.

பால்ஃபோர் பிரகடனம் என்றால் என்ன

  • பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃபோர், 1917-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை யூதர்களின் தாயகமாக நிறுவதற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி யூதர்களின் முக்கியத் தலைவரான பரோன் லயோனல் வால்டர் ரோத்ஸ்சைல்டுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் பால்ஃபோர் பிரகடனம் என்று கூறப்படுகிறது.
  • இந்த பிரகடனமானது பாலஸ்தீனத்துக்கான பிரிட்டிஷ் ஆணையில் சேர்க்கப்பட்டு, பின்னர் 1922-ல் லீக் ஆஃப் நேஷனால் (தற்போது ஐ.நா. அவை) அங்கீகரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது என்ன நடந்தது

  • இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக 1920 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில், ஐரோப்பாவைவிட்டு வெளியேறி பல்லாயிரக்கணக்கான யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடிபெயர்ந்தனர். இதனால் யூதர்கள் - அரேபியர்களுக்கு இடையே வன்முறைகள் அதிகரித்தன.

ஐநாவின் முன்மொழிவு என்ன

  • யூதர்கள் - அரேபியர்களுக்கு இடையே வன்முறை அதிகரித்ததால் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை 1947-ல் ஐ.நா. அவை வகுத்தது.
  • யூதர்களுக்கு ஒரு நாடு, அரேபியர்களுக்கு ஒரு நாடு. அரேபியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்களின் மத முக்கியத்துவம் வாய்ந்த ஜெரூசலேமை சர்வதேச மண்டலமாக மாற்ற முன்மொழியப்பட்டது.
  • இதனை யூதர்கள் ஏற்ற நிலையில், அரேபியர்கள் ஏற்க மறுத்ததால் செயல்படுத்த முடியவில்லை.

இஸ்ரேல் எப்போது உருவாக்கப்பட்டது

  • இரு சமூகத்தினரிடையே அதிகரித்த மத வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியதால், பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த பிரிட்டன் வெளியேறியது. யூதர்களும் இஸ்ரேல் என்ற தனி நாட்டை உருவாக்குவதாக அறிவித்தனர்.
  • இந்த நிலையில், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட அடுத்த நாளே, புதிய நாட்டை விரும்பாத எகிப்து, இராக், ஜோர்தான், லெபனான் மற்றும் சிரியா ஆகிய 5 நாடுகளும் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன.

போருக்குப் பிறகு என்ன நடந்தது

  • இந்த போரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெரூசலேமின் மேற்குப் பகுதியையும், பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்தது. பல பாலஸ்தீன மக்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
  • காஸா நகரம் எகிப்தின் கட்டுப்பாட்டிலும், மேற்கு கரை ஜோர்தானின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

1967 போரில் என்ன நடந்தது

  • அரபு நாடுகளுடன் 1967-ல் நடந்த போரில் வெற்றி பெற்ற இஸ்ரேல், கிழக்கு ஜெரூசலேம் மற்றும் மேற்குக் கரையைக் கைப்பற்றியது. மேலும், சிரிய கோலன் குன்றுகள், காஸா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளையும் கைப்பற்றியது.
  • பெரும்பாலான பாலஸ்தீன அகதிகள் இன்னும் காஸா மற்றும் மேற்குக் கரையில் வசித்து வருகின்றனர்.
  • ஜெரூசலேமை தலைநகராக இஸ்ரேலும், கிழக்கு ஜெரூசலேமை தலைநகராக பாலஸ்தீனமும் உரிமை கோரி வருகின்றன. இந்த நிலையில், கிழக்கு ஜெரூசலேம் மற்றும் மேற்குக் கரையில்  யூதர்களுக்கான குடியேற்ற பகுதிகளை இஸ்ரேல் உருவாக்கியது. இது சர்வதேச அமைப்புகளால் சட்டவிரோதமெனக் கருதப்படுகிறது.

நன்றி: தினமணி (17 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்