TNPSC Thervupettagam

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்

October 2 , 2024 100 days 139 0

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்

  • காஸா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்​திருக்கும் நிலையில், அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கி​யிருக்​கிறது இஸ்ரேல். ஹிஸ்புல்லா இயக்கத்​தினர் பயன்படுத்திய பேஜர், வாக்கி-டாக்​கிகள் வெடித்து, 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்​ப​தாகக் கருதப்​படு​கிறது.
  • கடந்த வாரம் லெபனானில் இஸ்ரேல் வீசிய குண்டு மழையில், பெண்கள், குழந்தைகள் உள்பட 700க்கும் அதிகமானோர் உயிரிழந்​தனர். இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலுக்கு அஞ்சி தெற்கு லெபனானிலிருந்து ஒரு லட்சத்​துக்கும் அதிகமான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
  • இந்த நிலையில் செப்டம்பர் 27இல், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்​பட்டது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்​துள்ளது. தொடர்ந்து அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்​பட்டு​வரு​கின்​றனர்.

ஏன் தாக்குதல்?

  • 2023 அக்டோபர் 7 இல், இஸ்ரேல் மீது ஹமாஸ் (பாலஸ்தீன ஆதரவு இயக்கம்) நடத்திய தாக்குதலை எதிர்த்து இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்​கியது. அதில் இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்​பட்​டிருக்​கின்​றனர். இந்தச் சூழலில், ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து லெபனான் - இஸ்ரேல் எல்லையில் மோதல்கள் உருவாகி​யிருக்​கின்றன.

பின்னணி:

  • இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் ஏற்படுவது முதல் முறை அல்ல; அரை நூற்றாண்​டாகவே இப்பகை​யுணர்வு நீடித்து​வரு​கிறது. 1975 - 1990வரையில் லெபனானில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதில் லெபனானின் தெற்குப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
  • இஸ்ரேலின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் லெபனானின் ஆயுதம் ஏந்திய அமைப்புகள் தாக்குதல் நடத்தின. இத்தாக்​குதலுக்குப் பின்னால் ஹிஸ்புல்லா அமைப்பு இருந்​த​தாகக் கூறப்​பட்டது. இதன் தொடர்ச்​சியாக, 1980களில் இஸ்ரேலுக்கு எதிராகச் சக்தி வாய்ந்த அமைப்பாக ஹிஸ்புல்லா வளர்ச்சியடைந்தது.
  • இம்மோதலில், இஸ்ரேலின் முக்கிய எதிரியான ஈரானின் முழு ஆதரவும் ஹிஸ்புல்​லா​வுக்குக் கிடைத்தது. பொருளா​தா​ரரீ​தி​யாக​வும், ஆயுதங்கள் வழங்கு​வ​திலும் ஹிஸ்புல்​லா​வுக்கு ஈரான் உதவி வருகிறது. அதேவேளை, சிரியா அதிபர் பஷார் அல் அசாத்​துடனும் ஹிஸ்புல்லா அமைப்பினர் நெருங்கிய நட்பில் இருந்​தனர்.
  • 2000இல் இஸ்ரேல் ராணுவம் லெபனானிலிருந்து வெளியேறியது. எனினும் லெபனானின் எல்லைப் பகுதி​களில் இஸ்ரேல் ராணுவத்தின் இருப்பை ஹிஸ்புல்லா அமைப்​பினர் எதிர்த்து​வந்​தனர். இதன் காரணமாக, 2006இல் ஹிஸ்புல்லா - இஸ்ரேல் இடையே போர் வெடித்தது. தெற்கு லெபனானிலிருந்து ஹிஸ்புல்லாவை வெளியேற்ற இஸ்ரேல் கடுமை​யாகச் சண்டை​யிட்டது.
  • அப்போரில் 1,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்​பட்​டனர். ஆனால், போரில் தாங்களே வெற்றி பெற்றதாக ஹிஸ்புல்லா அறிவித்தது. இஸ்ரேல் உடனான போரைத் தொடர்ந்து படை பலம், ஆயுத பலத்தையும் அவ்வமைப்பு மேம்படுத்​தியது.
  • எப்போதெல்லாம் காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்து​கிறதோ அப்போது பாலஸ்​தீனர்​களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை ஹிஸ்புல்லா வழக்க​மாகக் கொண்டுள்ளது.

ஹிஸ்புல்​லாக்கள் யார்?

  • ஹிஸ்புல்லா, லெபனானில் இயங்கும் செல்வாக்​குமிக்க ஷியா முஸ்லிம்​களின் அரசியல் கட்சி. ஆயுதம் ஏந்திய அமைப்​பாகவும் இது செயல்​படு​கிறது. இவ்வமைப்​பினர் லெபனானின் அரசியல் அதிகாரத்​தி​லும், நாடாளு​மன்​றத்​திலும் அங்கம் வகிக்​கின்​றனர். இந்த அமைப்பில் சுமார் 1,00,000க்கும் அதிகமான போராளிகள் உள்ளனர். இவர்களில் பலரும் சிரியாவின் உள்நாட்டுப் போரில் பங்கேற்​றவர்கள்.
  • உலகின் திறன்​மிக்க ஏவுகணை​களைக் கொண்டிருப்​பதால் உலக நாடுகளில் அரசைச் சார்ந்​திராத, பெரிய ஆயுத அமைப்பாக ஹிஸ்புல்லா அறியப்​படு​கிறது. இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹிஸ்புல்​லாவைத் தீவிரவாத அமைப்​பாகவே பார்க்​கின்றன. ஷியா மதகுருவான ஹசன் நஸ்ரல்லா, 1992ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா அமைப்​புக்குத் தலைமை வகித்து​வந்​தார்.
  • பெய்ரூட்டில் ஹிஸ்புல்​லாவின் தலைமையகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்​பட்​டார். ஹிஸ்புல்லா அமைப்பை அரசியல் - ஆயுதப் படையாக வழிநடத்திச் சென்றதில் நஸ்ரல்​லாவின் பங்கு முக்கிய​மானது. ஈரானுட​னும், அதன் முதன்மைத் தலைவர் அயதுல்லா அலி கமேனி​யுடனும் நஸ்ரல்லா நெருங்கிய தொடர்பில் இருந்​தவர். நஸ்ரல்​லாவின் மரணத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் ஐந்து நாள்கள் துக்கம் அனுசரிக்​கப்​படுவதாக ஈரான் அறிவித்​துள்ளது. இதன் மூலம் ஈரான் - நஸ்ரல்லா இடையேயான நெருக்​கத்தை அறியலாம்.

தாக்குதல் தொடரும்:

  • காஸாவில் ஹமாஸ் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக இஸ்ரேல் குறைத்​துக்​கொண்​டுள்ளது. அதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பை முற்றி​லுமாக அழிக்கும் நோக்கில் தெற்கு லெபனானில் தாக்குதலைத் தீவிரப்​படுத்​தியுள்ளது.
  • ஹிஸ்புல்லா - இஸ்ரேல் இடையே போர் நிறுத்​தத்தை ஐ.நா. அவை வலியுறுத்​தி​யுள்ளது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்​தத்தை ஏற்கவில்லை. “காஸா போரில் முழு வெற்றியை இஸ்ரேல் அடையும்வரை எங்கள் போராட்டம் தொடரும். ஹிஸ்புல்லா மீதான தாக்குதலும் தொடரும்” என அவர் பதிலளித்​திருக்​கிறார்.
  • இதுதொடர்பாக, நெதன்​யாகு​வுடன் பேசியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகில் பயங்கர​வாதத்​துக்கு இடமில்லை என்று குறிப்​பிட்​டிருக்​கிறார். ஹிஸ்புல்லா அமைப்​புக்கு உதவிவரும் ஈரானுக்கு நெதன்யாகு எச்சரிக்கை விடுத்​திருப்பது மேற்கு ஆசிய பிராந்​தி​யத்தில் பதற்றமான சூழலை உருவாக்கி​யுள்ளது.

அடுத்து என்ன?

  • ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்​லாவின் மரணம் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போரை விரிவுபடுத்​தி​யிருக்​கிறது. இப்போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா​வும், ஹிஸ்புல்​லா​வுக்கு ஆதரவாக ஈரானும் களத்தில் இறங்கும் சூழல் உருவாகலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்​துள்ளனர்.
  • நஸ்ரல்​லாவின் மரணம் ஹிஸ்புல்லாவை பலவீனப்​படுத்​தி​யிருந்​தா​லும், தலைவரின் மரணத்​துக்கு இஸ்ரேலைப் பழிவாங்க ஹிஸ்புல்​லா​வினர் உறுதி​கொண்​டுள்​ளனர். மறுபக்கம், ஹிஸ்புல்லா அமைப்பை முழுவதுமாக அழிக்க இஸ்ரேல் திட்ட​மிட்டு​வரு​கிறது. ஹமாஸுடன் ஒப்பிடு​கை​யில், ஹிஸ்புல்லா பலம் பொருத்திய அமைப்பு. இதை உணர்ந்தே இஸ்ரேலின் அணுகுமுறை வரும் நாள்களில் இருக்கும் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்