TNPSC Thervupettagam

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

June 4 , 2019 2001 days 5038 0
  • ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் ஒரு தீவிர இந்து சமயப் பிராமண குடும்பத்தில் பிறந்த போதிலும் தனது பார்வையில் ஒரு தாராளவாதியாக இருந்தார்.
  • இவர் பிறந்த போது ஈஸ்வர் சந்திர பாண்டியோபாதியா எனப் பெயரிடப்பட்டார்.
  • இவர் 1820 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று தற்போதைய மேற்கு வங்காளத்தின் மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள பஸ்சிம் கட்கல் என்ற துணைப் பிரிவுப் பகுதியில் பிறந்தார்.

  • தாகூர் தாஸ் பாண்டியோபாதியாய் மற்றும் பகவதி தேவி ஆகியோர் இவரின் பெற்றோர்கள் ஆவர்.
  • அக்காலத்திய வழக்கமான முறைப்படி இவர் தனது 14-வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.
  • தினமணி இவரது மனைவியின் பெயராகும்.
  • நாராயண் சந்திர பாண்டியோபாதியாய் இவர்களது ஒரே மகனாவார்.
  • 1839 ஆம் ஆண்டில் இவர் தனது சட்டப் படிப்புத் தேர்வை வெற்றிகரமாக முடித்தார்.
  • இவர் தனது இருபத்தொன்றாம் வயதில் கல்கத்தாவின் சமஸ்கிருத கல்லூரியிலிருந்து அறிவுப் பெருங்கடல் எனும் பொருளுடைய “வித்யாசாகர்” எனும் பட்டத்தைப் பெற்றார்.
  • இந்தப் பட்டமானது வெவ்வேறு பாடங்களில் இவருக்கு இருந்த பரந்துபட்ட அறிவின் காரணமாக இவருக்கு வழங்கப்பட்டது.
  • ராமகிருஷ்ணரை அவரது வசிப்பிடத்தில் சந்தித்ததே வித்யாசாகரின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான தருணமாகும்.
கல்விச் சீர்திருத்தங்கள்
  • 1841 ஆம் ஆண்டு தனது 21 ஆம் வயதில் வில்லியம் கோட்டை கல்லூரியில் சமஸ்கிருதப் பிரிவிற்குத் தலைவராகப் பணியில் சேர்ந்தார்.
  • ஐந்து வருடங்களுக்குப் பிறகு 1846 ஆம் ஆண்டில் வில்லியம் கோட்டை கல்லூரியை விட்டு விலகி சமஸ்கிருத கல்லூரியின் துணைச் செயலாளராகப் பணியில் சேர்ந்தார்.
  • 1849 ஆம் ஆண்டு சமஸ்கிருத கல்லூரியிலிருந்து விலகி மீண்டும் வில்லியம் கோட்டை கல்லூரியில் தலைமை எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
  • 1850 ஆம் ஆண்டுகளில் மீண்டும் சமஸ்கிருத கல்லூரிக்குப் பேராசிரியராக திரும்பிய இவர் சமஸ்கிருதத்துடன் சேர்த்து ஆங்கிலம் மற்றும் வங்காள மொழியையும் கல்வி கற்கும் மொழியாக மாற்றினார்.
  • இவர் 1851 ஆம் ஆண்டு சமஸ்கிருத கல்லூரியின் முதல்வராக ஆனார். இதனால் அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு முதல்வராக மாறிய முதல் இந்தியர் எனும் பெருமையை இவர் பெற்றார்.
  • மேலும் இவர் இந்தப் புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்லூரியில் பிராமணரல்லாதோரும் சேர்ந்துப் படிக்கும் வகையில் விதிகளை மாற்றினார்.
  • இவர் சமஸ்கிருத மொழியிலக்கணத்தின் சிக்கலான கருத்துக்களை எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் அவற்றை வங்க மொழியில் விளக்கும் “உபக்ரமோனிகா” மற்றும் “ப்யாகாரன் கௌமுடி” எனும் இரண்டு நூல்களை எழுதினார்.
  • கல்கத்தாவில் முதன்முறையாக சேர்க்கைக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணம் எனும் கருத்துக்களை இவர் அறிமுகப்படுத்தினார்.
  • 1856 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் சீர்திருத்தவாதியான அமுல்யா அம்பாதியின் துணையுடன் “பரிஷா உயர்நிலைப் பள்ளியை” நிறுவினார்.
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் பெயரிடப்பட்ட அரசு உதவி பெறும் வித்யாசாகர் கல்லூரியானது வடக்கு கொல்கத்தாவில் உள்ளது. இது கல்கத்தாப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டக் கல்லூரியாகும்.

  • இதுவே இந்தியாவில் இந்தியருக்காக இந்தியரால் நிதியுதவி மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் தனியார் கல்லூரி ஆகும்.
  • இக்கல்லூரியானது வித்யாசாகரால் 1872 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இது முன்னர் மெட்ரோபாலிட்டன் கல்வி நிறுவனமாக அறியப்பட்டது.
சமூகச் சீர்திருத்தங்கள்
  • இவர் மகளிர் கல்வியின் தீவிர ஆதரவாளராவார்.
  • இவர் வங்காளம் முழுவதும் 35 பள்ளிகளைப் பெண்களுக்காகத் திறந்து அவற்றில் 1300 மாணவிகளைச் சேர்ப்பதில் வெற்றியும் கண்டார்.
  • இதற்காக உதவி புரியும் வகையில் நாரி சிக்சா பந்தர் எனும் நிதியத்தை இவர் தொடங்கினார்.
  • இவர் 1849 ஆம் ஆண்டு மே 07 அன்று இந்தியாவில் பெண்களுக்கான முதல் நிரந்தரப் பள்ளியான பித்தூன் பள்ளிக்கூடத்தை நிறுவ ஜான் எலியட் டிரிங்வாட்டர் பித்தூனிற்கு ஆதரவளித்தார்.
  • இந்தியாவில் குறிப்பாக வங்காளத்தில் உள்ள பெண்களின் நிலையை உயர்த்துவதில் வித்யாசாகர் வெற்றியும் பெற்றார்.
  • அக்சய் குமார் தத்தா போன்றவர்களின் உதவியுடன் விதவை மறு மணமுறையைப் பிரதான இந்து சமூகத்தில் அவர் அறிமுகப்படுத்தினார்.
  • 1856 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் 1856 ஆம் ஆண்டின் XVவது சட்டம் என்றும் அறியப்படும் “இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856” இந்து விதவைகளின் மறுமணத்தைச் சட்டப் பூர்வமாக்கியது.
  • இந்தச் சட்டமானது டல்ஹௌசி பிரபுவால் தயாரிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அடுத்ததாகப் பதவிக்கு வந்த கானிங் பிரபுவால் 1857 ஆம் ஆண்டு இந்தியக் கலகத்திற்கு முன்னதாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • வில்லியம் பெண்டிங் பிரபுவால் 1829 ஆம் ஆண்டில் சதி ஒழிப்பிற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தம் இதுவேயாகும்.
  • வித்யாசாகர் இதன் மிகப் பிரபலமான ஆதரவாளராக இருந்தார்.
  • இவர் சட்டமன்ற சபையில் இதற்கு ஆதரவாக மனு ஒன்றினை அளித்தார். ஆனால் ராதாகாந்த் தேவ் மற்றும் அவரது தர்ம சபையின் சார்பில் கிட்டத்தட்ட நான்கு மடங்கிற்கும் அதிகமான கையொப்பங்களுடன் இதனை எதிர்த்து எதிர்மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
  • இவர் 1870 ஆம் ஆண்டில் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்திட தனது மகன் நாராயண் சந்திராவிற்கு ஒரு இளம்பருவ விதவைப் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.
அவரது படைப்புகள்
  • வங்காள கலாச்சாரத்தை முக்கியத்துவப்படுத்திப் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
  • இவரின் “போர்னோ போரிச்சோய்” (எழுத்துகளின் அறிமுகம்) எனும் புத்தகமானது இன்றும் வங்காள எழுத்துக்களைக் கற்பதற்கான அறிமுக உரையாக உள்ளது. மேலும் இது 12 உயிர் எழுத்துக்கள் மற்றும் 40 மெய் எழுத்துக்களை அச்சுக் கலை வடிவமாகவும் சீர்திருத்தம் செய்தது.

  • 1858 ஆம் ஆண்டில் வங்காள மொழி செய்தித்தாளான “சோமப் பிரகாஷ்” என்றப் பத்திரிக்கையை அவர் வெளியிடத் தொடங்கினார்.
  • தத்துவபோதினிப் பத்திரிக்கை, சர்வசுபங்காரிப் பத்திரிக்கை மற்றும் இந்து தேசபக்தி போன்ற புகழ்பெற்றப் பத்திரிக்கைகளை அச்சிடும் பணிகளுடன் அவர் தொடர்பிலிருந்தார்.
  • இவரின் இறுதிக் காலங்களில் சாதாரண மக்களும் வாங்கிப் படிக்கும் வகையில் மலிவான விலையில் புத்தகங்களை அச்சிடுவதற்கான நோக்கத்துடன் சமஸ்கிருதப் பதிப்பகம் ஒன்றை அவர் நிறுவினார்.
இறுதிக் காலங்கள்
  • வித்யாசாகர் தனது வாழ்நாளின் கடைசி 18 முதல் 20 ஆண்டுகளை தற்போதைய ஜார்க்கண்டில் உள்ள ஜமத்ரா மாவட்டத்தின் கர்மாட்டரில் உள்ள நந்தன் கானன் பகுதியில் உள்ள சந்தால் பழங்குடி மக்களுடன் கழித்தார்.
  • இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக கர்மட்டர் இரயில் நிலையத்தின் பெயரானது “வித்யாசாகர்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இவர் 1891 ஆம் ஆண்டில் ஜூலை 29 ஆம் நாள் தனது 70 வயதில் பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் காலமானார்.
நினைவுச் சின்னங்கள்
  • இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் ஹூக்ளி ஆற்றின் மீது அமைந்துள்ள இரண்டாம் ஹூக்ளி பாலம் என்றறியப்படும் பாலமானது வித்யாசாகர் பெயரால் “வித்யாசாகர் சேது” என அழைக்கப்படுகின்றது. இது கொல்கத்தாவின் இரட்டை நகரமென்று அறியப்படும் ஹவுராவையும் கொல்கத்தாவையும் இணைக்கிறது.

  • கொல்கத்தாவின் வித்யாசாகர் கல்லூரிக்கு இவரின் பெயரிடப்பட்டது. மேலும் பஸ்சிம் மிதுனாப்பூரில் 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இவரின் பெயரில் (வித்யாசாகர்) தொடங்கப்பட்டது.
  • இது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கணிதவியலாளர் மற்றும் புள்ளியிலாளரான அனில் குமார் கெயின் என்பவரால் தொடங்கப் பட்டது ஆகும்.
  • மேற்கு வங்காளத்தில் கல்வியைப் பரப்புவதற்காகவும் சமூக விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்காகவும் நடத்தப்படும் ஒரு விழாவானது வித்யாசாகர் மேளா எனும் பெயரில் 1994 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடத்தப்படுகின்றது.

  • 2001 ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியானது கல்கத்தா மற்றும் பிர்சிங்கா ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றது.
  • இவருக்கு முன்னோடியான வங்காள பிரபுத்துவச் சீர்திருத்தவாதியான ராஜா ராம்மோகன் ராயின் மரபில் வித்யாசாகரும் சமூக மாற்றம் மற்றும் அதிகாரமளித்தலுடன் கல்வியை இணைத்தார்.
  • “துன்பம் இல்லாத வாழ்க்கை மாலுமியில்லாதப் படகு போன்றது. அதற்கு எந்த இலக்குமில்லை, காற்றின் போக்கில் அதுவாகவே தானாக நகரும்” என்பது வித்யாசாகரின் புகழ்பெற்ற மேற்கோளாகும்.

  • வித்யாசாகரின் மறைவிற்குப் பின்னர் “நாற்பது மில்லியன் வங்காளத்தினரைப் படைக்கும் பணியில் கடவுள் எவ்வாறு இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் படைத்தார் என்பது வியப்பு” என ரவீந்திரநாத் தாகூர் குறிப்பிட்டார்.

 

 

- - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்