TNPSC Thervupettagam

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் குறித்த தலையங்கம்

February 26 , 2022 891 days 436 0
  • உலக நாடுகள் அச்சமடைந்தவாறே உக்ரைன் மீது போரைத் தொடங்கியுள்ளது ரஷியா. வான்வழி, கடல்வழி, தரைமார்க்கம் என ரஷியா மேற்கொண்டிருக்கும் பலமுனைத் தாக்குதல் உக்ரைனை மட்டுமன்றி, பிற நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றின் மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
  • உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைக்காட்சியில் அறிவிக்கும்போது, கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் பிராந்தியங்களில் வாழும் ரஷிய மொழி பேசும் மக்களை உக்ரைன் அரசுப் படையினரிடமிருந்து காக்கும் நோக்கிலேயே ராணுவ நடவடிக்கைக்கு தான் உத்தரவிடுவதாகத் தெரிவித்தார்.
  • ஆனால், தலைநகர் கீவ், லட்ஸ்க், இவானோ-ஃபிராங்கிவிஸ்க், ஒசேஸô, மரியுபோல், கார்கிவ் என முக்கிய நகரங்கள் மீது ரஷிய விமானங்கள் குண்டுமழை பொழிவதும், ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதும் உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • ராணுவ பலம் என எடுத்துக்கொண்டால் ரஷியாவைவிட பல மடங்கு பின்தங்கியுள்ளது உக்ரைன்.
  • ரஷியாவில் சுமார் 9 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். உக்ரைனில் 3.60 லட்சம் வீரர்களே உள்ளனர்.
  • பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு சுமார் 60 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4.51 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்கிறது ரஷியா. உக்ரைனோ அதில் பத்தில் ஒரு பங்கு அதாவது சுமார் 6 பில்லியன் டாலர்தான் (ரூ.45,166 கோடி) ஒதுக்கீடு செய்கிறது.
  • என்றாலும், சோவியத் யூனியன் உடைந்தபிறகு நடத்திய போர்களைவிட அதிக சவாலை இந்தப் போரில் ரஷியா எதிர்கொள்ள நேரிடும்.

தவிர்த்திருக்கக்கூடிய போர்

  • இதை உக்ரைன்-ரஷியா இடையிலான பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. இது அமெரிக்கா-ரஷியா இடையிலான இரண்டாவது பனிப்போர் என்றால் மிகையில்லை.
  • சோவியத் யூனியன் 1991-இல் உடைந்து சிதறியபோது அதிலிருந்து பிரிந்த உக்ரைன், தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்துகொண்டது.
  • அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகளுடன் உக்ரைன் நெருக்கமாக இருந்து வருவது ரஷியாவுக்கு நீண்டகாலமாகவே கோபத்தை ஏற்படுத்தி வந்தது.
  • உக்ரைனை தன் தலைமையிலான "நேட்டோ' அமைப்பில் இணைக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதையும் ரஷியா விரும்பவில்லை.
  • உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைக்கப்பட்டால், ரஷியாவின் எல்லையில் நேட்டோ, படைகளைக் குவிக்க முடியும். அப்படி ஒரு சூழல் உருவானால், அது ரஷியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அதிபர் புதின் கருதுகிறார்.
  • கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டுள்ள நேட்டோ படைகளைத் திரும்பப் பெற வேண்டும்; உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்கக் கூடாது என்று ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
  • ரஷியாவின் கோரிக்கைகளை நிராகரித்த அமெரிக்கா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல்வேறு தீவிர விளைவுகளை ரஷியா எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்தது.
  • இந்த விஷயத்தில், கடந்த கால வரலாற்றிலிருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
  • 2008-இல் ஜார்ஜியாவை ரஷியா தாக்கியபோதும், உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை 2014-இல் தன்னுடன் இணைத்துக்கொண்டபோதும் அமெரிக்காவாலும், ஐரோப்பிய யூனியனாலும் ரஷியாவுக்கு எதிராகப் பெரிதாக எதுவும் செய்துவிட முடியவில்லை.
  • அதேபோலத்தான் தற்போது உக்ரைனில் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது ரஷியா.
  • உலகையே பதைபதைப்புக்கு உள்ளாக்கியிருந்தாலும், இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியா பங்காற்ற முடியும் என்பது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததுடன், உக்ரைனில் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்; நேட்டோவுடனான பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதும், உக்ரைன்-ரஷியா பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருவதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்ததும் அதை உறுதிப்படுத்துகின்றன.
  • உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் ரஷியாவுக்கு எதிராக விதித்த தடைகள் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளபோதிலும், ரஷியா தனியாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையை, ஊடுருவல் என்று ஒப்புக்கொள்ள சீனா மறுக்கிறது.
  • மேலும், ரஷியாவிடமிருந்து கோதுமை இறக்குமதிக்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் ரஷியா தன் மீதான பொருளாதாரத் தடையின் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும். அத்துடன் பெலாரஸூம் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ளது.
  • உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நேட்டோ செய்து வந்தாலும், நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இல்லாததால் அந்த நாட்டுக்கு ஆதரவாக நேரடியாகப் போரில் ஈடுபட முடியாது.
  • அதுதான் "ரஷியாவுக்கு எதிரான போரில் எங்கள் நாடு தனித்துவிடப்பட்டிருக்கிறது' என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸலென்ஸ்கியை வேதனையுடன் சொல்ல வைத்திருக்கிறது.
  • அமெரிக்காவோ ரஷியாவோ ஏதோவொரு நாடு சற்று இறங்கி வந்திருந்தாலும் இந்தப் போர் தவிர்த்திருக்கக்கூடியதே!

நன்றி: தினமணி (26 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்