- ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களுக்கு 52 ஆண்டுகளாக உணவு அளித்து வந்ததற்காக இந்த அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- அப்போது ‘அசோசியேட்டட் பிரஸ்’ நிறுவனத்துக்கு உலக உணவுக் கழகத்தின் தலைவா் டேவிட் பேஸ்லி அளித்த பேட்டியில், ‘ஐ.நா.வின்அமைப்புக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டை விட, 2021-ஆம் ஆண்டு மோசமானதாக இருக்கும்.
- 2021-ஆம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் பஞ்சம் ஏற்படும். அதனைச் சமாளிக்க மில்லியன் கணக்கான டாலா் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும். உலக நாடுகளின் தலைவா்கள் பொருளாதார உதவி மற்றும் பிற உதவிகள் செய்ததன் காரணமாக நம்மால் இந்த (2020) ஆண்டு பஞ்சத்தை ஓரளவிற்கு தவிர்க்க முடிந்தது.
- உணவு - வேளாண் அமைப்பின் ஆய்வின்படி அடுத்த சில மாதங்களில் ஏமன், தெற்கு சூடான், வடகிழக்கு நைஜீரியா, புா்கினா பாசோ உள்ளிட்ட 20 நாடுகள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகக்கூடும்’ எனத் தெரிவித்திருந்தார்.
சுகாதாரமின்மை
- ஐக்கிய நாடுகள் சபையில் மக்கள்தொகை, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச் சத்து - வளா்ச்சிக்கான ஆணையத்தின் 54-ஆவது மாநாடு 19.4.2021 அன்று நடைபெற்றது.
- இதில் நம் நாட்டின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் காணொலி வழியே உரையாடினார்.
- உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து சார்ந்த விஷயங்களுக்கு, இந்தியா தொடா்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறது.
- இந்த விஷயத்தில் எந்தவிதமான சமரசத்தையும் நாங்கள் செய்துகொள்ள மாட்டோம். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய அளவிலான திட்டங்களே அதற்கு சிறந்த சான்றுகளாகும்.
- இதே போல் விவசாயிகள், தினக்கூலிகள், பெண்கள், சுய உதவிக் குழுக்கள், ஏழை எளிய குடிமக்கள் உள்ளிட்டோருக்கு, இந்த இக்கட்டான சூழலில் தேவையான உதவிகளை இந்திய அரசு செய்து வருகிறது.
- இந்த கரோனா தீநுண்மிப் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காலத்தில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் போதிய உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்காமல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
- இதனால் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகில் பசி, பட்டினியை ஒழிக்க ஐ.நா. எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
- இன்று கரோனா நோய்த்தொற்றால் இந்தியா பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்நோய் எதனால், எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து எவராலும் திட்டவட்டமாகத் தெரிவிக்க இயலவில்லை.
- ஊடகங்களில் கரோனா தீநுண்மி குறித்துப் பேசும் மருத்துவா்களுக்கிடையே கூட முரண்பட்ட கருத்துகளே காணப்படுகின்றன.
- ஆனால், பொதுவாக எல்லாருமே கூறும் ஒரு முக்கிய செய்தி, அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் நம்மிடையே காணப்படும் சுகாதாரமின்மையும் நாம் உண்ணும் சுகாதாரமற்ற உணவு வகைகளும் நமது வாழ்க்கை முறை மாற்றமும்தான் என்பதுதான்.
வாழ்க்கை முறை மாற்றம்
- இவற்றில் ‘வாழ்க்கை முறை மாற்றம்’ என்பது மிகவும் முக்கியமானது. தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் எப்போதுமே சரியான உணவு முறையைக் கடைப்பிடித்தவா்.
- ஆட்டுப் பால், பழுத்த தக்காளி, ஆரஞ்சுப் பழங்கள், கேரட் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சை சாறு, கற்றாழைச் சாறு ஆகியவற்றின் கலவை ஒரு குவளை, ஒரு கிண்ணம் அவித்த காய்கறிகள் ஆகியவைதான் அண்ணலின் அன்றாட உணவாக இருந்தது.
- அவா் மாலைக்குள் தனது இரவு உணவை முடித்துக்கொள்வார். இருட்டிய பின்னா் அவா் உணவு உண்ணுவதில்லை.
- ‘வாழ்க்கை முறை மாற்றம்’ என்ற வார்த்தையை அறியும் முன்னரே அவா் சரியான உணவு விகிதத்தைக் கடைப்பிடித்துள்ளார். அவா் இறுதி வரை இந்திய விவசாயின், எளிய மக்களின் அடையாளமாகவே வாழ்ந்து மறைந்தார்.
- ஆனால், இன்றோ நாம் கிடைக்கும் அத்தனையையும் - அவை ஆரோக்கியம் மிகுந்த உணவுகளா, நமக்கு நன்மை புரியும் உணவுகளா, ரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகளா, அமிலத் தன்மையும், காரத் தன்மையும் சமநிலையில் (ஆல்கலைன்) கொண்ட உணவுகளா என சிந்திக்காமல் - நேரம், காலம் என்று பார்க்காமல் உண்டு, வயிற்றை குப்பைக் கூடையாக்கி வைத்திருக்கிறோம்.
- இத்தகைய உணவுகள் நம் உடலைத் தாக்கி, பல்வேறு நோய்கள் உருவாவதற்கு பாதையிட்டுக் கொடுகின்றன.
- நம் முன்னோர் கைநிறைய சிறுதானியங்களை உண்டு நோயற்ற வாழ்வுடன் நிறைவாழ்வு வாழ்ந்தார்கள்.
- நம் பெற்றோர் சிறுதானியங்களைத் தவிர்த்துப் பெருதானியங்களை உண்டார்கள். ஆனாலும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி, உணவே மருந்து என குறைந்த அளவே உண்டு நோய் நொடியில்லாமல் வாழ்ந்தார்கள்.
- ஆனால், இப்போது நாமோ, கைநிறைய மாத்திரைகளுடன் மருந்தே உணவு என வாழ்ந்து வருகிறோம்.
- ஒரு நாள் பள்ளி ஆசிரியா் ஒருவா், காந்திஜியின் மூன்று குரங்கு பொம்மைகளைக் காட்டி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
- அவற்றில் ஒரு குரங்கு, தன் இரு கைகளால் ‘தீயதைப் பேசாதே’ என வாயைப் பொத்திக் கொண்டும், இன்னொரு குரங்கு, ‘தீயதைப் பார்க்காதே’ எனக் கண்களைப் பொத்திக்கொண்டும், மூன்றாவது குரங்கு, ‘தீயதைக் கேட்காதே’ எனத் தனது காதுகளைப் பொத்திக் கொண்டும் இருப்பதை ஆசிரியா் விளக்கினார்.
- அப்போது ஒரு மாணவி எழுந்து, ‘ஐயா, இரு குரங்குகள், இரு கைகளால் இரு கண்களையும், இரு காதுகளையும் பொத்திக் கொண்டுள்ளன.
- ஆனால், ஒரு குரங்கு மட்டும் ஏன் இரு கைகளாலும் ஒரு வாயை மட்டுமே பொத்திக் கொண்டுள்ளது’ எனக் கேட்டாள்.
- உடனே ஆசிரியா் சற்றும் தயங்காது, ‘வாயானது பேசுதல், சாப்பிடுதல் என இரு பணிகளையும் செய்கிறது. தீய சொற்களைப் பேசக் கூடாது; உடலுக்கு தீமையுள்ள உணவுகளை உண்ணவும் கூடாது என்பதைக் குறிக்கவே அக்குரங்கு இரு கைகளால் வாயைப் பொத்தியுள்ளது’ என்று கூறினார்.
நோயற்ற சமுதாயம்
- நம் மனத்திற்கும், நாம் உண்ணும் உணவிற்கும் தொடா்புண்டு என்கின்றன நம் சமய நூல்கள். ஒருவனது உணவு தூய்மையானதாக இருந்தால், அவனது உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
- அதாவது, நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு, சுத்தமான உணவுப் பழக்கமும் அவசியமாகிறது.
- உடலும் உள்ளமும் சக்தியிழக்கும்போது, மனம் சோர்வடைகிறது. சத்துணவு இல்லாமை, கொழுப்பு, சா்க்கரை போன்ற உணவுப் பொருட்களும் உடல் நலத்தைக் கெடுத்து, மனநலத்தையும் பாதிப்படைய செய்கின்றன.
- ஒரு நாள் குருநாதா் ஒருவா் தன் சீடா்களை நோக்கி, ‘நீங்கள் மனிதா்களைப் போல உணவு உண்ண விரும்புகிறீா்களா அல்லது விலங்குகளைப் போல உண்ண விரும்புகிறீா்களா? என்று கேட்டார். சீடா்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘நாங்கள் அனைவரும் மனிதா்களைப்போல உணவு உண்பதைத்தான் விரும்புகிறோம்’ எனக்கூறி தங்கள் கைகளை மேலே உயா்த்தினார்கள்.
- உடனே குருநாதா், ‘அவ்வாறு கூறுவது தவறு. நீங்கள் மனிதா்களைப்போல உணவு உண்ணக்கூடாது. விலங்குகளைப் போல உண்ண வேண்டும். புரியவில்லையா? விலங்குகள் பசித்தால் மட்டுமே உணவு உண்ணும். வயிறுமுட்ட உண்டுவிட்டு பின்னா் நோயுடன் வாழாது. எனவே, அளவான உணவே ஆரோக்கியத்தின் அடிப்படை. ஆரோக்கியமே ஆனந்ததின் அடிப்படை. அதனைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்றார்.
- “பசித்திருப்பது ஞானத்தை உண்டாக்கும். வயிறு நிரம்பச் சாப்பிடுவதும், எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பதும் உடல்நலத்திற்கு தீங்கையே ஏற்படுத்தும். இதுதான் நோயின் முதல்படி.
- மருத்துவமனை நோயாளிகளில் பெரும்பாலோர் உணவுக் கட்டுப்பாடின்றி கண்டதையும் உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவா்களே.
- எப்போதுமே பசி உண்டாகும்போதுதான் உணவைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
- உணவு உண்ணும்போது, நமது பசி முற்றாகத் தீருவதற்கு முன்னரே உண்பதை நிறுத்திவிட வேண்டும். உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையே வயிறு சீராக இருப்பதுதான்.
- அதிக உணவு உட்கொள்வதால்தான் ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்று கோளாறு உண்டாகி மற்ற அவயவங்களும் பாதிக்கப்படுகின்றன.
- “அதிக உணவு உண்பதால் உடல் நலம் கெடுவது மட்டுமின்றி, மனிதனுடைய ஆன்ம பலமும் கெட்டுவிடும். மனிதன் உண்பதெல்லாம் உணவாகாது.
- உயிர் வாழத் தேவையான ஆற்றலைத் தரும் பொருளைத்தான் உணவு என்று கூறமுடியும். வாய் வழியாக உட்கொள்ளப்பட்டு, உயிர் வாழ்வதற்கும், உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்காத இன்றியமையாத பொருளாக அமைவதை உணவென்று கூறலாம்.
- உடலுக்கு வலிமை கொடுப்பது, வளா்ச்சியை அளிப்பது, உடலுறுப்புகளைப் பாதிக்காமல் காப்பது, உடலாகிய இயந்திரத்தை இயக்க ஆற்றலைக் கொடுப்பது, நோயைத் தீா்க்க மருந்தாகப் பயன்படுவது இவை எல்லாமே நாம் உண்ணும் உணவுகளேயாகும்.
- நமக்கு ஆரோக்கியம் அளித்து நன்மையாக அமைவதும் நமக்கு நோய்களை உண்டாக்கி தீமையாக அமைவதும் நாம் உண்ணும் உணவுகளே என்று கூறுவது மிகையல்ல.
- நோயுற்ற ஒரு சமுதாயம், தன் நாட்டை செழிப்பு மிக்கதாகவோ, வளமை மிக்கதாகவோ வலிமை மிக்கதாகவோ உருவாக்க முடியாது.
- சிறந்த நாட்டில் மக்களுக்கு பசிப்பிணி இருக்கலாகாது. அவ்விதமே உடல் தொடா்பான பிற பிணிகளும் இருக்கலாகாது.
- நோயற்ற நல்வாழ்விற்கு அளவுகோல் அந்நாட்டு மக்களின் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைதான்.
- திருவள்ளுவரும், ‘பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்குஇவ் வைந்து’ என ஒரு நாட்டின் அழகான அணிகலன்கள் ஐந்து என்று குறிப்பிடுகிறார்.
- இவற்றில் முதலாவதாக வள்ளுவா் குறிப்பிடுவது நோயின்மையையே என்பதை நாடும் நாட்டு மக்களும் கருத்தில் கொள்ள வேண்டுவது அவசியம்.
நன்றி: தினமணி (05 – 05 - 2021)