TNPSC Thervupettagam

உணர்வோம் உண்மை நிலையை

September 16 , 2020 1586 days 766 0
  • நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் கூடுகின்றன. மசோதாக்களை நிறைவேற்றிப் பிரிகின்றன. நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. ஜேஇஇ, நீட் போட்டித் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. இணையவழிக் கல்வி என்கிற பெயரில் கல்விக்கூடங்களும் நடத்தப்படுகின்றன. எல்லாம் சரி, பொருளாதாரம் சற்றும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை, அது குறித்து யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
  • 2020 - 21 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியப் பொருளாதாரம் 23.9% சுருங்கி இருக்கிறது.
  • முக்கியமான உலக நாடுகளில் மிக அதிகமான பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டிருப்பது நாம்தான். இது ஏதோ பொது முடக்கத்தின் காரணமாக மட்டுமே ஏற்பட்டது என்று நினைத்தால் அது தவறு.
  • கடந்த எட்டு காலாண்டுகளாக, அதாவது இரண்டு ஆண்டுகளாகவே, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை என்று கருதப்படும் உற்பத்தித் துறை 3% சராசரி வளர்ச்சியைத்தான் கண்டது.
  • வேலைவாய்ப்பையும், கனிமப் பொருள்கள் மூலம் வருவாயையும் வழங்கும் சுரங்கத் துறை, கடந்த எட்டு காலாண்டுகளில் ஐந்து காலாண்டுகள் எதிர்மறை வளர்ச்சியை (நெகடிவ் குரோத்) சந்தித்து வந்திருக்கிறது.
  • நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் கட்டுமானத் துறை கடந்த எட்டு காலாண்டுகளில் வெறும் 3.7% வளர்ச்சியைத்தான் கண்டிருக்கிறது. இதேபோலத்தான் எல்லா துறைகளின் நிலையும் இருந்து வந்திருக்கிறது.
  • அரசுத் துறையும், ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் பல சமாதானங்களைச் சொன்னாலும்கூட, உயர்மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவும், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதும் இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கவே செய்திருக்கிறது.
  • அவை தற்காலிகமானவைதான் என்றும் நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் என்றும் வாதிட்டவர்களின் எதிர்பார்ப்பை சற்றும் எதிர்பாராத கொள்ளை நோய்த்தொற்று தகர்த்துவிட்டது.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய எட்டு காலாண்டுகளையே எடுத்துக்கொண்டாலும் இந்தியாவின் சராசரி ஜிடிபி வளர்ச்சி 5.2% மட்டும்தான்.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய அந்த நிலையை நாம் மீண்டும் அடைவது என்பதேகூட, அடுத்த சில ஆண்டுகளுக்கு சாத்தியமாகப் போவதில்லை.

நுகர்வு இல்லாத நிலை

  • பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக ஏற்பட இருக்கும் தனிநபர் ஊதிய இழப்பு, அரசின் வருவாய் இழப்பு, வேலை இழப்பு, உற்பத்திக் குறைவு, வாங்கும் சக்தி இல்லாததால் ஏற்படும் தேக்கம் என்று பெரும் பிரச்னைகளை நாம் சந்திக்கத் தொடங்கி இருக்கிறோம்.
  • ஜிடிபி பாதிப்பில் 50% அரசால் ஏற்கப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம். ஊதியம் பெறுவோர் 25%, மரபுசாராத் துறையினர் 15% , கார்ப்பரேட் நிறுவனங்கள், உற்பத்தித் துறை 10% என்கிற அளவில் பாதிக்கப்படுவார்கள்.
  • அதன் விளைவு சாதாரணமாக இருக்கப்போவதில்லை. கோடிக்கணக்கான நடுத்தரக் குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படும். நடுத்தரக் குடும்பத்தினர் மட்டுமல்ல, உயர் வருமானப் பிரிவினரேகூட செலவு செய்ய முற்பட மாட்டார்கள்.
  • நுகர்வு இல்லாத நிலையில், தேவை குறைந்து புதிய முதலீடுகளோ, வேலைவாய்ப்போ இல்லாத நிலைமை ஏற்பட இருக்கிறது.
  • தேக்கம் நீண்டு போக, நீண்டு போக பொருளாதாரம் மேலும் பலவீனமடைந்து மீண்டும் தலைதூக்குவதே கடினமாகக் கூடும்.
  • 1979 முதல் இந்தியாவின் ஜிடிபியில் தளர்வு ஏற்பட்டதில்லை. பொருளாதார சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட 1991 - 92 நிதியாண்டிலிருந்து, கடந்த 2019 - 20 நிதியாண்டு வரை இந்தியாவின் சராசரி ஜிடிபி வளர்ச்சி 6.8%. மிகக் குறைந்த வளர்ச்சி 1991 - 92-இல் (1.1%) என்றால் மிக அதிகமான வளர்ச்சி 2010 - 11 (10.3%) நிதியாண்டில்.
  • இதற்கிடையில் மூன்று முறை 5% வளர்ச்சிக்குக் குறைவாக ஜிடிபி இருந்தது என்னவோ உண்மை.
  • அப்போதும்கூட 4% (1997), 3.8% (2002), 3.9% (2008) என்கிற அளவில்தான் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இருந்ததே தவிர, 0%-க்கும் குறைவாகச் சென்றதே கிடையாது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு நான்கு தடவை இந்தியா எதிர்மறை வளர்ச்சியை எதிர்கொண்டது. 1950, 1965, 1972, 1979 நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சுருங்கியபோதுகூட நமது ஜிடிபி -5% என்கிற அளவில்தான் வீழ்ச்சியை சந்தித்தது.
  • கடந்த 40 ஆண்டுகளில் நாம் பொருளாதார மந்தநிலையை (ரிசஷன்) எதிர்கொள்ளவில்லை. இப்போது, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பால், இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு விடுமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
  • தனிமனித வருமான வீழ்ச்சி, தொழிற்சாலை உற்பத்தியில் தேக்கம், சில்லறை விற்பனையில் நுகர்வு இல்லாத நிலைமை போன்றவை வேலையின்மையை அதிகரிக்கும்.
  • அதன் விளைவாக வாங்கும் சக்தி குறையும்போது, பொருளாதார நடவடிக்கைகள் மேலும் சரியும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வேலையிழந்த மாத ஊதியம் பெறுவோரின் எண்ணிக்கை 1.89 கோடியாகவும், தினக்கூலி பெறுவோரின் எண்ணிக்கை 68 லட்சமாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
  • இன்னும் எத்தனை வாரங்கள், மாதங்கள் கொள்ளை நோய்த்தொற்று தொடரும் என்பது தெரியாது.
  • அது தெரியாத வரையில், இந்தியப் பொருளாதாரம் எப்போது மீண்டெழும் என்பதையும் கணிக்க முடியாது. இந்த உண்மை நிலையை மக்களிடமிருந்து மறைப்பதில் அர்த்தமில்லை. அதே நேரத்தில், அவர்கள் பொறுமை இழந்து விடாமல் பாதுகாத்தாகவும் வேண்டும்!

நன்றி:  தினமணி (16-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்