உண்மை கண்டறியும் சோதனை: குற்றவாளிகளைக் கண்டறியுமா?
- கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர், குற்றம் தொடர்பான உண்மைகளைச் சொல்ல மறுப்பதால், விசாரணையை நிறைவுசெய்ய முடியவில்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, குற்றம்சாட்டப்பட்டவரை உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
- இதையடுத்து அவரிடம் பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. உண்மை கண்டறியும் சோதனை என்பது குற்றவாளி பொய் சொல்கிறாரா என்பதைக் கண்டறிவதுடன், தவறான தகவல்களைச் சொல்லி வழக்கைத் திசைதிருப்புகிறாரா என்பதையும் அறிய உதவும். இந்தியாவில் இப்படியான சோதனைகள் பெரும்பாலும் நீதிமன்ற அனுமதியைப் பெற்றே செய்யப்படுகின்றன.
‘பாலிகிராப்’ பரிசோதனை:
- ‘பாலிகிராப்’ (Polygraph) பரிசோதனையில், விசாரணை செய்யப்படும் நபரின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகள் மூலம், அவரது ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சின் வேகம், தோலின் வெப்பநிலை போன்றவை கண்காணிக்கப்படும். விசாரணையின்போது அவர் பொய் சொன்னால் ஏற்படும் பதற்றத்தினால் மேற்கூறிய உடலியக்க அளவுகளில் மாற்றம் ஏற்படுவதை வைத்து உண்மைத்தன்மை பரிசோதிக்கப்படுகிறது.
- குற்றம் செய்யாத நபர்கூட விசாரணையின்போது பதற்றமாக இருக்க வாய்ப்பிருப்பதால், இதன் நம்பகத்தன்மை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் எளிய பரிசோதனை என்கிற முறையில், இன்னும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உளவியல் பிரேதப் பரிசோதனை:
- பிரேதப் பரிசோதனை என்பது இறந்த நபரின் சாவுக்கான காரணத்தை உடற்கூறாய்வின் மூலம் கண்டறியும் முறையாகும். ஆனால், உளவியல் பிரேதப் பரிசோதனை (Psychological autopsy) என்பது இறந்தவரின் மனநிலை அவரது மரணத்துக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்று கூறாய்வு செய்யும் உளவியல் பரிசோதனையாகும்.
- இதில் இறப்புக்கு முன்பும் முந்தைய சில நாள்களிலும் இறந்தவரின் மனநிலை, சிந்தனை ஓட்டம், நடவடிக்கைகள், உணர்வுகள் எப்படி இருந்தன என்று மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், சட்டம் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆராயப்படும். கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவரைச் சமீபத்தில் சந்திக்க நேர்ந்த மற்ற நபர்கள், நாள்குறிப்பு, கைபேசி, கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் இறந்தவர் கடைசி சில நாள்களில் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை அறிந்துகொள்வதுதான் இதன் நோக்கம்.
- இதை வைத்தே அந்த நபர் அவராகவே முடிவுசெய்து, தற்கொலை செய்துகொண்டாரா, தற்கொலை செய்யத் தூண்டப்பட்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பதைக் குறிப்பிட்ட அளவுவரை அறிந்துகொள்ள முடியும்.
- மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வெங்கோப ராவ், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பொன்னுதுரை போன்றோர் இதில் புகழ்பெற்றவர்கள். சில நேரம், கொலைக் குற்றம்சாட்டப்பட்ட நபர் அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் வேளைகளில், கொலைக்கு முன்பு அவரின் மனநிலை, நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்பதை மேற்கூறியது போல் ஆராய்வதன் மூலமும் விசாரணைக்கு வலுச்சேர்க்க முடியும்.
- குற்றவாளிகளின் சுயவிவரச் சோதனை (Offenders profile) என்கிற பெயரில் காவல் துறையில் இது பின்பற்றப்படுகிறது. இன்றைக்குப் பெரும்பாலான கொலைக் குற்றங்கள் / தற்கொலைகளுக்கான காரணங்கள் கைபேசி, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்வதன் மூலமாகவே கண்டறியப்படுவதால், ‘டிஜிட்டல் பிரேதப் பரிசோதனை’ (Digital autopsy) என்றும் அவற்றை அழைக்கலாம்.
மூளை வரைபடம்:
- ஒரு நபர் குற்றம் செய்ததற்கான சாட்சியங்கள் இருந்தாலும், அதை அவர் மறுக்கும்போது மூளை வரைபடப் பரிசோதனை (Brain mapping) உதவியாக இருக்கும். இதில் ஒருவர் என்ன பொய் சொல்கிறார் என்பதைக் கண்டறிய இயலாது; ஆனால், அவர் திரித்துச் சொல்கிறார் அல்லது பொய் சொல்கிறார் என்பதைக் கண்டறிய முடியும்.
- இப்பரிசோதனையின்போது அந்நபர் அறிந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் - வழக்குக்குச் சம்பந்தப்பட்ட - சொற்கள், சம்பவங்கள், பெயர்கள் போன்றவை காதொலிப்பான் (Headphones) மூலம் அவருக்கு ஒலிக்கவைக்கப்படும். பின்பு அந்நபர் அறிந்திருக்க வாய்ப்பில்லாத - விசாரணையில் திரட்டப்பட்ட சம்பவங்கள், சொற்கள் ஒலிக்க வைக்கப்படும்.
- இவ்விரண்டின்போதும் அவரது மூளையின் மின்னணுச் செயல்பாடுகள், தலையின் வெளிப்புறத்தில் பொருத்தியுள்ள மின்முனைகளின் (Electrodes) மூலம் கணினியில் அலைகளாக மாற்றப்பட்டு ஆராயப்படும். ஏற்கெனவே பரிச்சயமான சம்பவங்களைக் கேள்விப்படும்போது மூளையின் மின்னணுச் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை, பரிச்சயமில்லாத வார்த்தைகளைக் கேட்கும்போது ஏற்படும் மாற்றங்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும்.
- குற்றம் சம்பந்தப்பட்ட பரிச்சயமான சம்பவங்களை அவர் வாய்வழியே மறுத்தாலும், மூளையின் செயல்பாடுகள் அதை ஆமோதிக்கும். இதன் அடிப்படையில், அந்த நபர் குற்றத்தை மறைக்கிறாரா இல்லையா என்பதைப் பிரித்தறிய முடியும்.
குரல் அடுக்குப் பகுப்பாய்வு:
- மனிதர்களின் குரலில் ஏற்படும் மிக நுட்பமான அதிர்வெண் மாற்றங்கள், ஒருவர் அதைப் பேசும்போது இருக்கும் அவரின் மனநிலை, உணர்ச்சி நிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் குரல் அடுக்குப் பகுப்பாய்வு (Layered Voice Analysis).
- ஒருவர் பொய் சொல்லும்போது குரலில் நடுக்கம் ஏற்படுவது இயல்பாகக் காணப்படும் ஒரு மாற்றம். இந்நவீனப் பரிசோதனை மனிதக் காதுகளால் பகுத்தறிய முடியாத குரலின் நுண் மாற்றங்களைக்கூடப் பகுத்தறியும் வகையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயலியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
- விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் பதில்களை நேரடியாகவோ அல்லது பதிவுசெய்யப்பட்ட குரலாகவோ கணினி செயலிக்குள் செலுத்தினால், எந்த இடத்தில் அவர் சூழ்ச்சித்திறத்துடன் பேசுகிறார் அல்லது பொய் சொல்கிறார் என்பதை அவரது குரலின் நுண் மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்து செயலி காட்டிக்கொடுத்துவிடும்.
நார்கோ பகுப்பாய்வு:
- குற்றம் சாட்டப்பட்ட நபர் முழு சுயநினைவுடன் இருக்கும்போது உண்மையை எளிதில் மறைக்க முடியும். இந்த நார்கோ பகுப்பாய்வில் (Narcoanalysis) அறுவைசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் ‘பென்டோதால்’ என்கிற மயக்கமருந்தை உட்செலுத்திச் செய்யப்படுவதால் ‘பென்டோதால் விசாரணை’ (Pentothal interview) என்றும் அழைக்கப்படுகிறது.
- இதில் சுயநினைவுக்கும் முழு மயக்க நிலைக்கும் இடைப்பட்ட ‘ஹிப்னாசிஸ்’ என்கிற மயக்க நிலையில் விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த அரைமயக்க நிலையில் பரிசோதனை செய்யப்படும் நபரால் பேச முடியும், ஆனால் அவர் பேசுவதைத் தணிக்கை செய்து பேசும் திறன் குறைந்துவிடுவதால் உண்மையை மறைக்காமல் சொல்லும் வாய்ப்பு அதிகம்.
- இதை அனுபவம் மிக்க மனநல மருத்துவர், மயக்க மருத்துவர் கொண்ட குழுவால் மட்டுமே செய்ய முடியும். நார்கோ பகுப்பாய்வு, சட்டம் சார்ந்த மனநலத் தேவைகளுக்காக மட்டுமல்லாது, நனவிலி மனதின் பிரச்சினைகளால் ஏற்படும் நரம்பியல் கோளாறுகளைச் சரிசெய்யும் சிகிச்சை முறையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சட்ட முக்கியத்துவமும் நம்பகத்தன்மையும்:
- மேற்கூறிய உண்மை கண்டறியும் பரிசோதனைகள் நூறு சதவீத நம்பகத்தன்மை கொண்டவை அல்ல. இவற்றின் மூலம் குற்றம்சாட்டப்பட்ட நபர் பொய் சொல்வதாக ஆணித்தரமாக நிரூபிக்க முடியாது. எனினும், வழக்கு விசாரணையின் மற்ற அம்சங்களோடு இதை ஒப்பிட்டு, ஒரு வலுச்சேர்க்கும் முறையாகப் பயன்படுத்த முடியும். இந்திய அரசமைப்புக் கூறு 20(3) இன்படி விசாரிக்கப்படும் நபரின் ஒப்புதல் இதற்கு அவசியம்.
- நீதிமன்ற ஆணையும் அவசியம். மற்ற எல்லாப் பரிசோதனை முறைகளையும்விடக் குரல் அடுக்குப் பகுப்பாய்வு முறை நம்பகத்தன்மை கொண்டதாகவும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாகவும் உருவெடுத்துவருகிறது. இதில் உடலை எந்த வகையிலும் தொடாமல், விசாரணைக்கு உள்பட்ட நபரின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த முடியும். 2002இல் குஜராத்தில் நடந்த கலவரங்களில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் வடோதரா மருத்துவக் கல்லூரியில் நார்கோ பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது முக்கியச் செய்தியாகப் பேசப்பட்டது.
- அதற்குப் பின்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் இம்முறையைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகக் காண்பிக்கும் தவறு ஒரு சதவீதம்கூட இல்லாமல், உண்மைக் குற்றவாளிகளை மிகத் துல்லியமாகக் கண்டறியும் அளவுக்கு மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் கண்டுபிடிக்கப்பட்டால் காவல் துறைக்கும் சட்டத் துறைக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 08 – 2024)