TNPSC Thervupettagam

உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்

February 14 , 2024 342 days 447 0
  • பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாஜக தொடர்ந்து பேசிவந்த நிலையில், அக்கட்சி ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தராகண்ட் சட்டமன்றத்தில், 2024 பிப்ரவரி 7அன்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
  • நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது. அதையொட்டியே 2014, 2019 பாஜக தேர்தல் அறிக்கைகளில் பொது சிவில் சட்டம் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. முன்னதாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அக்கட்சி உறுதியாக இருந்தது.
  • அதன் முன்னோட்டமாக, சிறிய மாநிலமான உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டது. அதற்கான எதிர்வினைகளை முன்வைத்து அச்சட்டத்தை பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம் (கூட்டணி ஆட்சி), அசாம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.

பொது சிவில் சட்டம்

  • இந்தியாவில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற தனிநபர் உரிமைகளை, வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மக்கள் பின்பற்றும் மதங்களுக்கான தனிநபர் சட்டங்களே நிர்வகித்துவருகின்றன. இந்தநிலையை மாற்றி, அனைத்து மக்களின் தனிப்பட்டஉரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின்கீழ் கொண்டுவருதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம்.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 44ஆவது கூறானது, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தைக் கொண்டுவரலாம் என்று குறிப்பிடுகிறது. இவ்வாறு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்படி குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுவருகிறார்.
  • ஆனால், மதங்களின் தனிப்பட்ட உரிமைகளில் இச்சட்டம் தலையிடுகிறது என எதிர்ப்புக் குரல்கள் பரவலாகநிலவுகின்றன. இதையொட்டியே இச்சட்டம் தொடர்பாக மத்திய அரசு, மக்களிடம் கருத்துகளைக் கேட்டுவருகிறது.

உத்தராகண்ட்டில்

  • மத்திய அரசுக்கு முன்னதாகவே, பொது சிவில் சட்டத்தை உத்தராகண்ட் மாநிலத்தில் அமல்படுத்துவதில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி திட்டவட்டமாக இருந்தார்.
  • இந்நிலையில், இது தொடர்பான சட்ட முன்வடிவை உருவாக்குவதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 2022இல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓராண்டாக மக்களிடம் கருத்துகளைக் கேட்ட இக்குழு, அறிக்கையைப் பொது சிவில் சட்ட வரைவாகத் தயாரித்து உத்தராகண்ட் அரசிடம் வழங்கியது.
  • இதைத் தொடர்ந்து உத்தராகண்ட் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் முலம் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாகப் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட மாநிலமானது உத்தராகண்ட். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு போர்த்துக்கீசிய ஆட்சியில் இருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • # உத்தராகண்ட்டின் பழங்குடியின மக்களைத் தவிர்த்து மற்ற அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும்.
  • # ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் சமமானவாரிசுரிமை வழங்கப்பட்டுள்ளது. தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், பதிவு செய்யாத உறவின் மூலம் பிறந்த குழந்தைகள், வாடகைத் தாய்மூலம் பெறப்பட்ட குழந்தைகள் என அனைவருக்கும் இவ்வுரிமை பொருந்தும்.
  • # பெண்களுக்கான திருமண வயது 18ஆகவும், ஆண்களுக்கான திருமண வயது 21ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • # குழந்தை மணம், இருதார மணம், பலதார மணம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • # திருமணம் செய்துகொண்டவர்கள் தங்கள் திருமணத்தை 6 மாதங்களுக்குள்ளாகவே பதிவுசெய்ய வேண்டும். பதிவுசெய்யாத திருமணங்கள் அங்கீகரிக்கப்படாததுடன் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், திருமணத்தில் தவறான தகவலை அளிப்பவர்களுக்கு ரூ.25,000 அபராதத்துடன் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை வழக்கப்படும்.
  • # திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் இணையர் (live-in relationship) அது குறித்துப் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தகைய இணையர்கள், ஒரு மாதத்துக்குள் தங்கள் உறவைப் பதிவுசெய்யத் தவறினால் ரூ.10,000 அபராதத்துடன், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. உறவிலிருந்து விலகினாலும் அது குறித்தும் பதிவுசெய்ய வேண்டும்.
  • # நீதிமன்றங்களை நாடியே விவகாரத்துகள் பெறப்பட வேண்டும். மீறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

விமர்சனங்கள்

  • முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் வரும்நிக்கா ஹலாலா, இத்தாத், முத்தலாக் போன்ற திருமணம், விவாகரத்து தொடர்பான நடைமுறைகள் பொது சிவில் சட்டத்தின்படி குற்றச் செயல்களாகக் கருதப்படுகின்றன. இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதோடு, நாட்டின் முன்னேற்றத்துக்கும் தடையை ஏற்படுத்துகிறது என அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின் றனர்.
  • இந்தியாவின் மரபார்ந்த திருமணங்களுக்கு மாற்றாக ஆண்-பெண் இரு பாலினத்தவரும் நட்பார்ந்த முறையில் பழகி, பின்னர் காதலர்களாகிச் சேர்ந்து வாழும் உரிமையை நமது அரசமைப்புச் சட்டம் குற்றமாகக் கருதவில்லை. ஆனால், சேர்ந்து வாழும் இணையரை அரசிடம் பதிவுசெய்யச் சொல்வதன் மூலம் தனிமனித உரிமையை உத்தராகண்ட்பொது சிவில் சட்டம் மீறுகிறது என எதிர்ப்பாளர்கள்கருதுகின்றனர்.
  • இச்சட்டத்தில் பால் புதுமையினரைஉள்ளடக்காமல் இருப்பது அச்சமூகம் சார்ந்த செயல்பாட்டாளர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்