TNPSC Thervupettagam

உப்பைப்போல் ஒரு துறவி!

July 18 , 2020 1644 days 779 0
  • சுவாமி விவேகானந்தர் கொழும்பு முதல் அல்மோரா வரை சொற்பொழிவாற்றி நம்நாடு எழுச்சியுற வேண்டிய கருத்துகளை நல்கினார்.

  • அவர் சென்னையில் ஒன்பது நாள்கள் தங்கி வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐந்து முக்கியமான உரைகளை நிகழ்த்தினார்.

  • அந்த அருளாசிகள் தொடர்ந்து மக்களுக்குக் கிடைப்பதற்கு ராமகிருஷ்ண மடம் ஒன்று சென்னையில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பக்தர்கள் விரும்பினார்கள்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர்

  • அதற்கு சுவாமி விவேகானந்தர், "நான் என் சகோதரச் சீடர் ஒருவரை அனுப்புகிறேன். அவர் தென்னிந்திய வைதீகர்களைவிட ஆசாரங்களை முறையாகக் கடைப்பிடிப்பவர். பூஜையிலும், சாஸ்திரஅறிவிலும், இறை தியானத்திலும் இணையற்றவர்' என்று கூறினார்.

  • விவேகானந்தர்அவ்வாறு அனுப்பி வங்காளத்திலிருந்து தமிழகம் வந்தவர்தான் சுவாமி ராமகிருஷ்ணானந்தர்.

  • விவேகானந்தர், சமுதாய முன்னேற்றத்திற்கான கருத்துகளை விதைத்துவிட்டுச் சென்றார். அந்த விதைகளை வளர்த்துப் பயிராக்கியவர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர்.

  • மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ..சிதம்பரம் பிள்ளை, சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவாஆகிய மூன்று தேச பக்தர்களுமே சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக - தேசியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.

  • ..சி. இளைஞராக இருந்தபோது தெய்வப் பேரவையில் ஈடுபட்டு சிவபக்தியில் திளைத்தார். வள்ளிநாயகம் என்ற துறவியிடம் "கைவல்யம்', "விசார சாகரம்' ஆகிய வேதாந்த நூல்களைக் கற்றார்.

  • 1897- இல், சென்னை, திருவல்லிக்கேணியிலுள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தை ஏற்படுத்தி, ஆன்மிக தாகம் கொண்டவர்களுக்கு அருள் தொண்டு செய்துவந்தார் ராமகிருஷ்ணானந்தர். அப்போது சுவாமிகளை வ..சி. தரிசித்தார்.

..சியும் சுவாமி ராமகிருஷ்ணானந்தரும்

  • வேதாந்தத்தின் மாயா தத்துவத்தைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில், சுவாமிகளிடம் தான் தெளிவு பெற்றதை தனது சுய சரிதையில் வ..சி. பின்வருமாறு கூறுகிறார்:

  • சென்னையில் சுவாமி ராமகிருஷ்ணானந்தரைக் கண்டேன். அவர் என்னிடம்,

  • "சுதேசியம் பரவிவரும் இந்தப் பூமியில் கைத்தொழில் வளர்ப்பதற்கு நீ என்ன முயற்சி செய்தாய்' என்று வினவினார்.

  • அதற்கு நான், "இந்த உலகமோ கனவு போன்றது. பயனற்ற இந்த உலகம் பற்றிய நினைவு ஏன் இருக்க வேண்டும்? நீண்ட பெரிய முயற்சி செய்வதற்குப் பயனற்ற இந்த உலகில் என்ன இருக்கிறது? உலக வாழ்க்கையில் காணப்படும் உயர்வும் தாழ்வும் மாயையின் விளையாட்டு அல்லவா' என்றேன்.

  • செயல்முறை வேதாந்தியான விவேகானந்தரின் சகோதரத் துறவியான சுவாமி ராமகிருஷ்ணானந்தர், ..சி.யிடமிருந்த மாயைபற்றிய சந்தேகத்தை நீக்கியும், நடைமுறை வாழ்க்கையில் வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ வேண்டிய முறையையும் எடுத்துக்காட்டினார்.

  • அப்போது சுவாமிகள் கூறியதைக் கருத்தோடு ஏற்று வ..சி. தனது சுயசரிதையில் இவ்வாறு கூறியிருக்கிறார்: "சுதேசியம் ஒன்றே சுகம் பல அளிக்கும். இதே என் கடைப்பிடி என்றனன் அவன் உரை வித்தென விழுந்தது மெல்லிய என்னுளம்; சித்தம் அதனைச் சிதையாமல் வைத்தது!'

  • சுவாமிகளின் வழிகாட்டுதல் வ..சி.யின் உள்ளத்தில் வித்தாக விழுந்தது. அது அவரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது வரலாறு.

  • "சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விதைத்த விதை, என் உள்ளத்தில் வேர் பிடித்து வளர்ந்தது. அதனால் செடியில் இரண்டு அழகிய தளிர்கள் போல் தூத்துக்குடி கைத்தொழில் சங்கமும் தரும சங்கமும் உருவாயின' என்று வ..சி. கூறுகிறார். மேலும் "தேசிய நாவாய்ச் சங்கம்' என்ற பெயரில் சுதேசிய கப்பல் கம்பெனியையும் வ..சி. ஆரம்பித்தார்.

  • சுவாமிகள் மும்பை (பம்பாய்) சென்றபோது அங்கு பால கங்காதர திலகரைச் சந்தித்தார். அதன் பயனாக பம்பாயில் ராமகிருஷ்ண மடம் தொடங்குவதற்கு திலகர் உதவினார். இவ்வாறு சுவாமிகள் பல முக்கிய தேசத் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்

  • சுவாமி விவேகானந்தர், "சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களைத் தூக்கி விடவேண்டியது நமது முக்கியமான பணி' என்றார்.

  • அந்த அறைகூவலைப் புரிந்து கொள்ளாது இன்று சிலர் செய்வதுபோல், இந்துமதத்தில் ஜாதி துவேஷம் அதிகமாக உள்ளது என்று மதம் மாறியவர்கள் பலர்.

  • இந்து மதத்தில் இருந்து கொண்டே அதைக் குறை கூறியவர்களும் அதிகமே. இப்படிப்பட்டவர்களின் மத்தியில் ராமகிருஷ்ணானந்தர் மேற்கூறிய பிரச்னையைத் தீர்ப்பது எவ்வாறு என யோசித்து வந்தார்.

  • அதே சமயம் பஞ்சமர்களை எவ்வாறு கரையேற்றுவது என்று சி.ராமசுவாமி ஐயங்கார் (ராமு) என்ற இளைஞரும் சிந்தித்துக்கொண்டிருந்தார். அவர் ராமகிருஷ்ணானந்தரைஅணுகினார். கல்வியற்று, ஏழ்மையில் உழன்ற அநாதைச் சிறுவர்களுக்கு சுவாமியின் வழிகாட்டுதலுடன் ஓர் இல்லம் அமைக்கப்பட்டது. அந்த இல்லம் ஏனோ நன்கு செயல்படவில்லை.

  • அதன் பின், சுவாமிகளின் முயற்சியாலும் ராமு மற்றும் அவரது உறவினரான ராமானுஜாச்சாரியர் ஆகிய இரண்டு இளைஞர்களின் கடும் உழைப்பாலும் 1905, பிப்ரவரி 17 அன்று ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் தொடங்கப்பட்டது.

  • இன்று அது வளர்ந்து, தாய்- தந்தையற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியோடு தெய்வபக்தியும் தேசபக்தியும் வழங்கி வருகிறது.

  • தத்துவப் பேராசிரியர் டி.எம்.பி. மகாதேவன், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்க ஜகந்நாதன், புகழ் பெற்ற விஞ்ஞானி டி.ஆர். சேஷாத்ரி, கமாண்டர் வி.எஸ்.பி. முதலியார், மேஜர் ஜெனரல் எஸ்.பி. மகாதேவன், அண்ணா சுப்ரமண்யம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இன்ஜினியர் ஏ. சீனிவாசன் போன்றோர் ராமகிருஷ்ணானந்தர் தொடங்கிய ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் உருவாக்கிய ரத்தினங்களுள் சிலர்.

  • பெண்களுக்கு கல்வி தேவையா என்று சமய மற்றும் சமுதாயத் தலைவர்களே பயத்துடனும் அலட்சியத்துடனும் இருந்தபோது, பெண் கல்வியில் சுவாமிகள் கூடுதல் கவனம் காட்டினார்.

  • பெண்கள் கல்வி பெறாவிடில் சமுதாயம் சீரழியும் என்று திடமாக நம்பினார். ஆதலால் 1906- இல் சென்னை தங்கச்சாலைப் பகுதியில் ஏழைக் குழந்தைகளுக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தேசிய பள்ளியைத் தொடங்கினார். அதில் இன்று ஏழைச் சிறுமிகள் சுமார் ஆயிரம் பேர் கல்வி பெற்று வருகிறார்கள்.

  • அவர்களுள் பலரும் துப்புரவுத் தொழிலாளி, தினக்கூலித் தொழிலாளர்களின் மகள்கள்.

அரும்பணிகள்

  • வங்காளியான சுவாமிகள் தமிழ் எழுத, படிக்க அறியாதவர். தமிழில் ஓரளவிற்கு உரையாடத் தெரிந்தவர். இருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு இந்து மதம், சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உலகளாவிய செய்திகளைத் தமது நூல்கள் மூலமாகக் கொண்டு சேர்ப்பதில் அக்கறை காட்டினார்.

  • அவற்றுள் ஓர் அம்சம்தான் சுவாமிகள் எழுதிய ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு என்ற நூல். வங்காள மூலத்திலிருந்து ஆங்கிலத்திலும், கா.ஸ்ரீ.ஸ்ரீ.- யின் சீரிய தமிழ் மொழிபெயர்ப்பிலும் அந்த நூல் வெளிவந்தது. தென்கலை, வடகலைஆகிய இரண்டு வைணவப் பிரிவினரும் பாராட்டும் வகையில் இந்தநூல் உள்ளதாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் கூறினார்.

  • சுவாமிகள் 1908- இல் தொடங்கிய சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு கண்ட பதிப்பகம் ஆன்மிகம், பக்தி, வேதாந்தம், பண்பாடு, கலாசாரம், கல்வி, சுய முன்னேற்றம், குழந்தை இலக்கியங்கள் போன்ற பல துறைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது; இன்றும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

  • சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தமது காலத்தின் அறிஞர்களையும் புத்தக வெளியீட்டாளர்களையும் நன்கு தொடர்புகொண்டிருந்தார்.

  • அவர்களுள் பேரறிஞர் மகேசகுமார் சர்மா முக்கியமானவர். இவர் பங்கிம்சந்திரர் எழுதிய "ஆனந்தமடம்', விவேகானந்தரின்"தற்காலஇந்தியா' போன்ற நூல்களையும் மொழிபெயர்த்தவர்.

  • 1901- இல் தொடங்கி நூற்றாண்டு கொண்டாடி சிறந்த நூல்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸ் பதிப்பகத்தின் நிறுவனர் வி.குப்புசுவாமி ஐயர் சுவாமிகளின் சிறந்த பக்தர்களுள் ஒருவராவார்.

  • 1895- இல், "லோகோபகாரி' என்ற மாதப்பத்திரிகையைத் தொடங்கிய வி. நடராஜ ஐயர், சுவாமி விவேகானந்தரின் கருத்துகளைத் தமது பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அவ்வாறு அவர் வெளியிடுவதற்கு சுவாமிகள் எல்லா வகைகளிலும் உதவினார்.

  • 1962- 63- இல், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வரான காமராஜர் நிவாரணப்பணிகளைஆராயச்சென்றார்.

  • அங்கு சென்றதும் அவருக்கு ஆச்சரியம். யாரும் போக முடியாது என்று இருந்த அந்த வெள்ளக்காட்டில் ராமகிருஷ்ண மடத்துத் துறவிகள் இருவர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து முதல்வர் காமராஜர் ராமகிருஷ்ண மடத்தைப் பெரிதும் பாராட்டினார்.


 

உப்பைப்போல் ஒரு துறவி

  • அன்றுமுதல் இன்றுவரை நிவாரணப் பணிகளை ராமகிருஷ்ண மடங்கள் தொடர்ந்து நடத்தி வருவதற்கு சுவாமிகளே பிள்ளையார்சுழி இட்டார்!

  • வங்காளம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ்ஆகிய மொழிகளை அறிந்திருந்த சுவாமிகள் நாடெங்கும் சுற்றி இந்துமத சாரத்தை மக்களுக்குப் போதித்தார்.

  • மேலும், ராமகிருஷ்ண மடங்களில் நடக்கும் நித்திய பூஜைகளின் விதிமுறைகளையும் மந்திரங்களையும் நெறிப்படுத்தியவர் சுவாமிகளே.

  • மடத்தின் துறவிகளுக்கான பிரம்மசரிய, சந்நியாச தீûக்ஷ முறைகளையும் சுவாமிகளே வகுத்துக் கொடுத்தார்.

  • தமிழ்நாட்டில் ராமகிருஷ்ண இயக்கம் செய்துவரும் ஏழைகளுக்கான பலவிதமானசேவைகள், கல்வி, மருத்துவம், ஆன்மிகம் மற்றும் பண்பாட்டைப் பரப்புதல், இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப்பணிகள்ஆற்றுவது போன்றவை யாவும் சுவாமிகள் அன்று விதைத்தவையே.

  • உப்பு, தன்னை மறைத்துக்கொண்டு உணவின் சுவையைக் கூட்டுவதுபோல், சுவாமிகள் தமது சேவைகளை மட்டுமே வெளியுலகிற்குக் காட்டினார். அவரது திருவுருவைக்கூட தரிசிக்கவில்லையே என்ற குறை பலருக்கும் இருந்தது.

  • சுவாமிகளின் 150- ஆவது பிறந்த ஆண்டு விழாவின்போது 2012 ஜூலை 15- இல் சென்னைஸ்ரீ ராமகிருஷ்ணமடத்தில் அவருக்கு வெண்கலச்சிலை நிறுவப்பட்டபோது அந்தக் குறை நீங்கியது!

(இன்று சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் 158- ஆவது பிறந்த தினம்)

நன்றி: தினமணி (18-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்