TNPSC Thervupettagam

உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதம்

February 7 , 2024 341 days 316 0
  • இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலங்களுக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் (GER – Gross Enrollment Ratio), தொடர்ந்து ஐந்தாவது கல்வியாண்டாகத் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அகில இந்திய உயர் கல்விக் கணக்கெடுப்பில், இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது.

அரசின் இலக்கு

  • உலகில் வறுமையைப் போக்கவும், நிலையான,நீடித்த வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை எட்டமத்திய அரசு சமீபத்திய ஆண்டுகளாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
  • அதன் ஒரு பகுதியாக, உயர் கல்வி நிறுவனங்களில், வருகிற 2035இல் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50% என்ற அளவை எட்டுவதற்கான இலக்கைமத்திய அரசு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கைச் சுட்டிக்காட்டியே, “படித்தவர்கள் திறனுள்ள பணியாளர்களாக மாறும்போது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவாக முடியும்என மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார்.
  • உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதம்: 18 முதல் 23 வயதினரில் எத்தனை பேர் பள்ளிக் கல்வி முடித்து, உயர் கல்வி (கல்லூரி, பல்கலைக்கழகம்) சேர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து, உயர் கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் கணக்கிடப்படுகிறது.

பெரிய மாநிலங்களில்

  • 2021–2022இல், பெரிய மாநிலங்களுக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில்தமிழ்நாடு 47% பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. இதில்பெண்கள் 47.3%ஐயும், ஆண்கள் 46.8%ஐயும் பெற்றுள்ளனர்.மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் பட்டியல்சாதி - பழங்குடி மாணவருக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் முறையே 39.4%, 43.9% பெற்றுதமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெரிய மாநிலங்களில்தமிழ்நாட்டைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரப் பிரதேசம் (36.5%), கர்நாடகம் (36.2%), மகாராஷ்டிரம் (35.3%), மத்தியப் பிரதேசம் (28.9%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இந்தியாவில்: 2021–2022 இல் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் இந்தியாவில் ஒட்டுமொத்த சராசரியாக 28.4%ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், இவ்விகிதம் 2020-2021இல் 27.3%ஆகவும், 2017–2018இல் 24.6%ஆகவும், 2014-2015இல் 23.7%ஆகவும் இருந்தது. இதில் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை 2014-2015இல் 1.57 கோடியாக இருந்த நிலையில், 2021–2022இல் 2.07 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2021-2022இல், மொத்த மாணவர்களில் சுமார் 78.9% பேர்இளங்கலைப் படிப்புகளிலும், 12.1% பேர் முதுகலைப் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர். மேலும், இளங்கலைப் பட்டப்படிப்புகளில் கலை (34.2%), அறிவியல் (14.8%), வணிகம் (13.3%), பொறியியல்-தொழில்நுட்பம் (11.8%) ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளதாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

யூனியன் பிரதேசங்கள் - மாநிலங்கள்

  • உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதத்தில், யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை 64.8 சதவீதத்துடன் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி (61.5%), டெல்லி (49%) ஆகியவை உள்ளன. மாநிலங்களை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் 43.1%, உத்தராகண்ட் 41.8%, கேரளம் 41.3%, தெலங்கானா 40% ஆகியவை அடுத்த நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன.

பின்தங்கிய மாநிலங்கள்

  • அசாம், பிஹார் மாநிலங்களில் உயர் கல்வியைத் தொடரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், உயர் கல்விக்கான சேர்க்கை விகிதத்தில் இம்மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. அசாமில் உயர் கல்விக்கான சேர்க்கை விகிதம் 16.9%ஆகவும், பிஹாரில் 17.1%ஆகவும் பதிவாகியுள்ளன; ஜார்க்கண்டில் 18.6%ஆக உள்ளது.
  • யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு 1.1% பெற்று மிகவும் குறைவான உயர் கல்விச் சேர்க்கை விகிதத்தைக் கொண்டுள்ளது. லட்சத்தீவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், இந்தச் சேர்க்கை விகிதம் குறைவாக இருப்பதாக கல்வித் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்