TNPSC Thervupettagam

உயர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு

August 19 , 2024 101 days 119 0

உயர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு

  • மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிடும் தேசிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு உயர் கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களால் நாடப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்துவருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டுத் தரவரிசைப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இதன்படி பல்வேறு அளவுகோல்களின் கீழ் உயர் கல்வி நிறுவனங்கள் மதிப்பிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் தரவரிசைப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிடுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
  • ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாகச் சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டிலிருந்து கூடுதல் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
  • முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் அண்ணா (20), பாரதியார் (44), பாரதிதாசன் (55), சென்னை (64), அழகப்பா (76), பெரியார் (100) ஆகிய மாநில அரசு நிதியில் இயங்கும் ஆறு பல்கலைக்கழகங்கள் அடங்கும்.
  • இந்த ஆண்டு முதல், மாநில அரசு நிதியில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு என்று தனிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகம் தேசிய அளவில் முதல் இடம்பிடித்துள்ளது. ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டைவிட ஒரு படி முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • மேலும், இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன. இவற்றில் நான்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜ், பாரதியார் பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டு பட்டியலில் கடந்த ஆண்டைவிடப் பின்தங்கியுள்ளன.
  • பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் ஐஐடி சென்னை தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. கலை-அறிவியல் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு தனியார் கல்லூரிகள் 7, 8ஆம் இடங்களைப் பெற்றுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த மாநிலக் கல்லூரி 13ஆம் இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.
  • ஆக, சில விதிவிலக்குகளைத் தவிர, ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் தனியார் - மத்திய அரசு நிதியில் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிட, தமிழ்நாடு மாநில அரசு நிதியில் இயங்கும் நிறுவனங்கள் பின்தங்கியிருப்பதை உணர முடிகிறது.
  • யூஜிசி பிரதிநிதிகள் நியமன விவகாரத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் நிலவும் பிணக்கு காரணமாக ஐந்து மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. அதிகக் கட்டணம், பல்வேறு வகையிலான பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிப்பது போன்ற காரணங்களாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் முன்னிலை பெறுவதாகச் சொல்லப்படுகிறது.
  • இதுபோன்ற பிரச்சினைகள் களையப்பட்டு, மாநில அரசு நிதியில் இயங்கும் பல்கலைக்கழகங்களும் பிற கல்வி நிறுவனங்களும் தேசிய அளவிலான தரவரிசைகளில் முதன்மையான இடங்களைப் பெற வேண்டும். அதுதான் தமிழ்நாடு உயர் கல்வித் துறைக்கு உண்மையான பெருமையாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்