TNPSC Thervupettagam

உயர் கல்வி சேர்க்கையால் மட்டுமே பலன் கிடைக்குமா?

June 6 , 2024 219 days 167 0
  • உயர் கல்வியில் சேர்க்கை பெறும்போதுதான் ஒரு மாணவரின் கல்வி வாழ்க்கை முழுமையடைகிறது. மேலும், ஒரு மாணவரின் எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளமாகவும் உயர் கல்வி அமைகிறது. பொதுவாக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 என்பது கடைசி வகுப்பாகும். இதுவே உயர் கல்விக்குச் செல்வதற்கான நுழைவாயிலாகவும் அமைந்துள்ளது.
  • 2021-2022-இல் பெரிய மாநிலங்களுக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 47 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது.
  • இதில் பெண்கள் 47.3 சதவீதத்தையும், ஆண்கள் 46.8 சதவீதத்தையும் பெற்றுள்ளனர். உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் இந்தியாவில் ஒட்டுமொத்த சராசரியாக 28.4 சதவீதமாக உள்ளது. இது 2020-2021-இல் 27.3 சதவீதமாகவும், 2017-2018-ல் 24.6 சதவீதமாகவும் இருந்தது.
  • தமிழகம் முதலிடத்தை தக்கவைக்க பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர் கல்வியில் சேர்க்கை பெறச் செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர்க்கை பெறாதவர்களைக் கண்டறிந்து அவர்களை சேர்க்கை பெறச் செய்யும் பொருட்டு கடந்த ஆண்டு ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாளே உயர் கல்விக்கான இணையதளப் பதிவு தொடங்கியது. முதல் நாளிலிருந்தே ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். அரசு கல்லூரிகளில் சேர்க்கை பெற விண்ணப்பிப்போருக்கு வசதியாக அரசு கல்லூரிகளில் உதவி மையம் தொடங்கப்பட்டு பதிவு நடைபெற்றது. அதிகமானோர் விண்ணப்பித்ததால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைக் காட்டிலும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. வழக்கம்போல கலை, அறிவியல் பிரிவுகளில் குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகம். அண்மைக்காலமாக பட்டதாரி மாணவ, மாணவியரிடையே போட்டித்தேர்வு எழுதும் ஆர்வம், உடனடியாக அரசு அல்லது தனியார் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு மவுசு கூடியுள்ளது.
  • கலை பாடப் பிரிவுகளில் மொழிப் பாடங்கள், வணிகவியல், வணிக நிர்வாகம், அறிவியல் பாடப் பிரிவுகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு பெரும்பாலோனோர் விண்ணப்பித்துள்ளனர்.
  • சில ஆண்டுகளாக சேர்க்கை குறைவாக இருந்த கணித பாடப் பிரிவுக்கு நடப்பாண்டில் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
  • கடந்த ஆண்டு சேர்க்கை மிகவும் குறைவாக இருந்ததால் 12 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கணித பாடப் பிரிவு நீக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் கணித பாடம் மவுசு அடைந்துள்ளது.
  • உயர் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அதிகமான மாணவியர்கள் மொழிப் பாடம், வணிகவியல், கணினி அறிவியலைத் தேர்வு செய்கின்றனர். ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
  • உயர் கல்வி சேர்க்கைக்கு சில பாடப் பிரிவுகளுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கும்போது அரசால் ஒப்பளிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலான சேர்க்கைக்கு அக்கல்லூரிகள் சார்ந்த பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 30% அளவுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 20% அளவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
  • அறிவியல் பாடப் பிரிவுகளில் கூடுதல் சேர்க்கைக்கு கல்லூரி நிர்வாகம் விரும்புவதில்லை. ஏனெனில், கலை பாடப்பிரிவுகளுக்கு கட்டட வசதிகள் இருந்தால் மட்டும் போதுமானது. ஆனால், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிகள் தேவை என்பதால் பெரும்பாலும் ஒப்பளிக்கப்பட்ட அளவுக்கே சேர்க்கை நடைபெறுகிறது.
  • நாட்டின் ஒட்டுமொத்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 27 சதவீதத்திலிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உயர் கல்வி சேர்க்கையில் இந்திய சராசரியைவிட தமிழகத்தின் பங்கு இரண்டு மடங்கு அதிகம்.
  • பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர்க்கை பெறாதவர்களைக் கண்டறிந்து சேர்க்கை பெறச் செய்வது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிக் கல்வி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் மாணவர்கள் நலன் சார்ந்து பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு செயல்பாட்டில் உள்ள திட்டங்களை மேலும் செம்மைப்படுத்த வேண்டும்.
  • தமிழக அரசின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், செயல்படுத்தப்படவுள்ள தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் தகுதிவாய்ந்த மாணவ, மாணவியரைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள், ஆய்வக வசதிகள் பற்றாக்குறை நிலவும் வேளையில், அதிகப்படியான மாணவ மாணவியரை சேர்க்கை பெறச் செய்வதால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்காது. மாறாக, செயல்பாட்டில் உள்ள அரசின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்தான் அதிகப்படியான சேர்க்கைக்கு பலன் தரும்.
  • பிளஸ் 2 முடித்த அனைவரையும் உயர் கல்வியில் சேர்க்கை பெறச் செய்வதுடன், இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்வதும் அர்த்தமுள்ளதாக அமையும். அதிகமான சேர்க்கை மட்டுமே குறிக்கோளாக இருத்தல் சரியானது அல்ல.

நன்றி: தினமணி (06 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்