TNPSC Thervupettagam

உயர் நீதிமன்ற நீதிபதியின் நம்பிக்கை தரும் பாராட்டு!

February 19 , 2025 14 days 83 0

உயர் நீதிமன்ற நீதிபதியின் நம்பிக்கை தரும் பாராட்டு!

  • சமீபகாலமாக தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல்தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதற்கான பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டிருந்தார்.
  • இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் சார்பில் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘‘உயர் நீதிமன்ற உத்தரவின்படி பணியிடங்களில் நடைபெற்ற பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளில் விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். பாலியல் தொல்லை தொடர்பாக இப்போது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
  • பெண்கள் தைரியமாக முன்வந்து பாலியல் தொடர்பான புகார்களை போலீஸில் அளிக்கின்றனர். தமிழக போலீஸாரும் அந்தப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கிரிமினல்வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதுடன் அவர்களின் கல்விச் சான்றிதழும் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு வகைகளிலும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
  • அப்போது நீதிபதி மஞ்சுளா கூறுகையில், ‘‘இப்போது கூட பாலியல் புகாரில் சிக்கிய டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிமீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. டி.ஐ.ஜி.என்று பாராமல் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய செய்திகளை பத்திரிகைகளில் பார்த்தேன். மேலும், அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றச்சாட்டில் போலீஸார் விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள் அச்சமின்றி தைரியத்துடன் பணிக்குச் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். பணியிடங்களில் அமைத்திருக்கக் கூடிய விசாகா கமிட்டியின் விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
  • பாலியல் குற்றங்களை பொறுத்தவரை புகார் குறித்த தகவல்கள் பொதுவெளிக்கு வராமல் பாதுகாக்கப்படுவதோடு இந்த வகையான குற்றங்களில் மிக விரைவாக வழக்கை நடத்தி முடிக்க அரசும் அதிகாரிகளும் முனைப்பு காட்ட வேண்டும். நீதிமன்றங்களும் இவ்வழக்குகளை முடிந்த அளவு விரைவாக விசாரித்து குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.
  • பொதுவாகவே காவல்துறை மீதும் காவலர்கள் மீதும் சமூக விரோதிகளுக்கு அச்சம் குறைந்து வருவதன் எதிரொலியாக பல்வேறு சம்பவங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. அந்த நிலையை மாற்றி காவல்துறையின் மீது கண்ணியமான பார்வையையும் மரியாதை கலந்த பயத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு உடனே எடுக்க வேண்டும். காவலர்களும் அரசியல் குறுக்கீடுகளுக்கு பணியாமல் விரைவாகவும் நேர்மையாகவும் கடமையாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்