உயிரி - பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக் கொள்கை
- வேளாண்மை, உணவு உற்பத்தி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல சிக்கல்களுக்குத் தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி) 1986இல் மத்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகத்தில் ஒரு புதிய துறையாகச் சேர்க்கப்பட்டது. பிற நாடுகளால் மதிக்கப்படத்தக்க நிலையை அத்துறையில் இந்தியா இன்றைக்கு அடைந்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கி உதவியது, அதன் உயிரி தொழில்நுட்பவியல் வளர்ச்சிக்கு ஒரு சான்று.
மூன்று இலக்குகள்:
- கடந்த ஓராண்டாகவே பிரதமர் நரேந்திர மோடி, ‘விகஸித் பாரத்’ (வளர்ச்சி அடைந்த இந்தியா) என்னும் இலக்கு குறித்துப் பேசி வருகிறார். இந்தியா தனது நூறாவது விடுதலை நாளைக் கொண்டாட உள்ள 2047க்குள் மிகுந்த வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதே அதன் சாராம்சம்.
- சமூக, பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் வளர்ச்சியில் நிலைத்த தன்மை, நல்ல அரசு நிர்வாகம் போன்ற பல கூறுகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக உயிரி தொழில்நுட்பவியல் துறையில் உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகளில் இந்தியா முழுவீச்சில் ஈடுபடவுள்ளது. அதற்காக ‘உயிரி-பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, (Biotechnology for Economy, Environment and Employment - Bio-E3) என்கிற கொள்கைக்குப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆகஸ்ட் 24இல் ஒப்புதல் அளித்தது.
- உயிரி தொழில்நுட்பவியல் துறையில் உற்பத்தியை அதிகரிக்கவைத்து, வளமான, தற்சார்பான, சுகாதாரமான நாடு என்கிற நிலையை அடைவதே இக்கொள்கையின் நோக்கம். இதற்காக உயிரி தொழில்நுட்பவியலுடன் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
வழிமுறை என்ன?
- நுகர்வோருக்குக் குறிப்பிட்ட பொருள்கள் கிடைப்பதில் நிலைத்த தன்மை இல்லை. உற்பத்திக்காக மூலப்பொருள்கள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கழிவுகள் அதிகளவில் உருவாகின்றன. இந்தப் போக்கின் காரணமாகக் காட்டுத்தீ, பனியாறுகள் உருகுவது, பல்லுயிர் வளம் குறைவது போன்ற சீரழிவுகள் ஏற்படுகின்றன.
- ‘பசுமையை இழக்காத வளர்ச்சி’ என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்த நிலையை மாற்ற ‘பயோ - ஈ3’ சில செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. வேதிப்பொருள் சார்ந்த தொழில்களை உயிர்மப் பொருள்கள் சார்ந்த தொழில்களாக மாற்றுவதை வெகுவாக ஊக்குவிப்பது இதன் அடிப்படை நோக்கம்.
- அழிந்த தாவரம், விலங்குகள் போன்றவை அடங்கிய உயிர்மப் பொருள்கள் (biomass), குப்பைக்கிடங்குகள், பசுங்குடில் வாயுக்கள் போன்றவற்றில் நுண்ணுயிர்ச் செயல்பாடுகளைத் தூண்டும் தொழிற்சாலைகள் வழியே மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தி, உயிர்மப் பொருள்களை உற்பத்தி செய்வதும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் அறவே இல்லை என்ற நிலையை அடைவதும் இதன் மூலம் சாத்தியப்படும்.
- இறைச்சிக்கு மாற்றாகத் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படும் புரதங்கள்; கூடுதலான வைட்டமின், புரதம் போன்றவை செயற்கையாகச் சேர்க்கப்பட்ட உணவு வகைகள்; சில நோய்களைக் கண்டறியவும் குணப்படுத்தவும் தேவைப்படும் செயற்கைப் புரதங்கள்; பழச்சாறு பதப்படுத்துதல் - காகிதக்கூழ் பதப்படுத்துதல் போன்றவற்றுக்குத் தேவையான நுண்ணுயிர் பெக்டினேஸ் போன்ற தொழில் பயன்பாட்டு நொதிகள்; எத்தனால் போன்ற உயிர்ம எரிபொருள்கள்; தடுப்பூசி மருந்து போன்றவற்றைத் தயாரிக்கும் துறைகளில் புத்தாக்கத் தொழில்முனைவோரின் பங்களிப்பு பெரிதும் தேவையாக உள்ளது.
முக்கியக் கூறுகள்:
- எதிர்பாராத காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வேளாண்மை, சிமென்ட் தயாரிப்பு, அனல் மின்சக்தி உற்பத்தி போன்ற வணிகச் செயல்பாடுகளால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடைச் சேகரித்து, அதிலிருந்து எரிபொருள் தயாரித்தல் போன்ற பணிகளுக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதிலும் தொழில் முனைவோரின் வரவு எதிர்நோக்கப்படுகிறது.
- சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையிலும் இவை அமல்படுத்தப்படுவதற்கான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. உயிரி தொழில்நுட்பவியல் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இணைத்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், அற மதிப்பீடுகளைத் தக்கவைத்தல், பன்னாட்டுத் தர நெறிமுறைகளுக்குத் தகுந்தபடி இவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வகுத்தல் போன்றவையும் ‘பயோ ஈ 3’இன் முக்கியமான கூறுகளாகும்.
- உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தின் மதிப்பு 2014இல் 10 பில்லியன் டாலராக இருந்தது. 2024இல் 130 பில்லியனாக அது உயர்ந்துள்ளது. 2030க்குள் இது 300 பில்லியன் டாலர் என்கிற சந்தை மதிப்பை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை விரைவாக எட்ட ‘பயோ ஈ3’ வழிவகுக்கும் என மத்திய அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 09 – 2024)