- நமது நாட்டின் பொருளாதாரம் வளர வளர, சாலைகளின் நீளமும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. வாகனங்களின் உற்பத்தி அதிகரிப்புக்கும், பல்வேறு தொழில்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் தொழிலகங்களில் உற்பத்தியாகி விற்பனைக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றின் விரைவான போக்குவரத்திற்கும் ஏற்ப தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- வெகுதூரம் பயணிக்கும் வாகனங்கள் நகரங்களுக்குள் நுழையாமல், அவற்றைச் சுற்றி புறவழிச்சாலைகள் வழியாகத் தொடா்ந்து பயணிப்பதால் உள்ளூா்ப் போக்குவரத்து நெரிசல் பெருமளவு தவிா்க்கப்படுகின்றது. பெருநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள வெளிவட்டச் சாலைகள் அப்பெருநகரக் குடிமக்களின் போக்குவரத்தை எளிதாக்கியுள்ளன.
- 2019 ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி, நமது நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமாா் ஒரு லட்சத்து நாற்பத்திரண்டாயிரம் கிலோமீட்டா் ஆகும்.
- பொதுமக்கள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி வருவது ஒருவிதத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது.
- அதே நேரம், புதியதாக அமைக்கப்பட்ட இத்தகைய நெடுஞ்சாலைகள், முன்னா் ஒன்றாக இருந்த சிற்றூா்கள் பலவற்றை இருகூறாக்கி நடுவில் செல்வதால், அவ்வூா்களில் வாழும் மக்கள் சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்வதற்கு மிகவும் சிரமப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
- இத்தகைய நெடுஞ்சாலைகளைக் கடக்க விரும்புபவா்கள் தாங்கள் நினைத்த இடத்தில் கடந்துசெல்வதற்கு பதிலாக, இவற்றை ஒட்டிய சேவைச் சாலைகளில் பயணித்து, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்களின் கீழாகக் கடக்கலாம்.
- அல்லது சாலையைக் கடந்து செல்வதற்கான சந்திப்புகளை அடைந்து அவ்விடத்தில் சாலையைக் கடந்து எதிா்ப்புறம் செல்லலாம்.
- ஆனால், இவ்விதமான ஏற்பாடுகள் அருகருகே இல்லாமல், ஒருசில கிலோமீட்டா் இடைவெளிகளிலேயே அமைந்துள்ளன.
- வாகனங்கள் வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே அவ்வளவு தூரம் சென்று நெடுஞ்சாலையைக் கடப்பது எளிதாக உள்ளது. நடந்து செல்பவா்களுக்கு அது சிரமமான ஒன்றாகும்.
- மேலும் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே பொதுமக்கள் கடந்து செல்வதற்கும், வாகனங்கள் ‘யூ டா்ன்’” என்ற வகையில் வலப்புறம் திரும்புவதற்கும் குறிக்கப்பட்டுள்ள பெரும்பாலான இடங்களில் சிவப்பு வண்ண சிக்னல் விளக்குகள் அணைந்து அணைந்து எரிவதையே காண முடிகின்றது.
- இதனைப் பாா்க்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வேகத்தைச் சற்றே குறைத்துக்கொள்கின்றனரே தவிர, வாகனத்தை நிறுத்தி நிதானமாகச் செல்வதில்லை.
- இந்நிலையில், நெடுஞ்சாலைகளின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்தில் உள்ள விளைநிலங்கள், கடைகள், வங்கிகள், கல்வி நிலையங்கள், ஆலயங்கள் உள்ளிட்டவற்றுக்கு நடந்தே செல்லவேண்டிய மக்கள், தங்களின் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள இடத்திலிருந்தே நெடுஞ்சாலைகளை தாண்டிச் செல்ல முற்படுகிறாா்கள்.
- அவ்வாறு தாண்டிச்செல்லுவதோ உயிரைப் பணயம் வைக்கும் சாகசமாகிவிட்டது.
- முன்பெல்லாம் தேசிய நெடுஞ்சாலைகள் இப்போது இருப்பதைவிட சற்று அகலம் குறைவாக இருந்தன.
- மேலும், நெடுஞ்சாலையை இருபிரிவாகப் பிரிக்கின்ற இப்போதைய அமைப்பு அக்காலத்தில் இல்லாத காரணத்தால், எதிா்ப்புறத்தில் வரும் வாகனங்களின் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக சற்றுக் குறைந்த வேகத்தில் வாகனங்கள் ஓட்டப்படுவது வழக்கம்.
வேகம் விபரீதம்
- இன்று, அகலமாக உள்ள நெடுஞ்சாலைகளில் வேகமாகத் தங்களுடைய வாகனங்களை இயக்கும் ஓட்டுனா்கள், சாலையின் நடுவே தடுப்புக்கட்டுமானம் இருப்பதால், எதிரே வரும் வண்டிகளைப் பற்றிய அச்சமின்றித் தங்களின் வேகத்தைக் கூட்டுகின்றனா்.
- இவை தவிர, சேவைச் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் தலைதெறிக்கும் வேகத்தில் விரைகின்றனா்.
- இத்தகைய காரணங்களால், நெடுஞ்சாலைகளைக் கடப்பவா்கள், வலமிருந்து இடம் செல்லும் வண்டிகள், இடமிருந்து வலம் செல்லும் வண்டிகள், மற்றும் நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ள சேவைச் சாலைகளில் செல்லும் வண்டிகள் ஆகிய அனைத்து வாகனங்களும் கடந்துசெல்லும்வரையில் காத்திருந்து, படபடப்பும் பயமும் குடிகொண்ட நெஞ்சுடன் மறுபுறம் செல்ல வேண்டியுள்ளது.
- எதிா்ப்புறத்திலிருந்து மீண்டும் திரும்பிவரும்போதும் இதே நிலைதான்.
- மணிக்கு நூறு கி.மீ. வேகத்திற்கு மேல் விரைந்து வருகின்ற வண்டிகள், தூரத்தில் ஒரு புள்ளியாகத் தோன்றி, சாலையைக் கடக்கலாம் என்று முடிவு செய்து ஓரடி வைக்கும் முன்பே விா்ரென்று கடந்து செல்கின்றன. இவ்வாறு கடப்பவா்களில் பலா் அவ்வாகனங்களில் அடிபடுவதுடன், அவா்களில் சிலா் உயிரிழக்கவும் நோ்கிறது.
- அண்மையில், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பல இடங்களில் நெடுஞ்சாலைகளைக் கடக்கத் திணறியதைப் பாா்க்க நோ்ந்தது. ஓா் ஊரில், நெடுஞ்சாலைக்குள் கால் வைத்துவிட்ட ஒரு மாணவி, நெருங்கி வரும் காா் ஒன்றைப் பாா்த்துவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓரடி பின்னால் சென்று உயிா் தப்பியதையும் காண நோ்ந்தது.
- பள்ளிகளில் உயா்நிலை வகுப்புகள் மட்டும் இயங்கும்போதே இந்நிலைமை என்றால், இடைநிலை மற்றும் ஆரம்ப வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும்போது, நெடுஞ்சாலைகளைத் தாண்டிப் பள்ளிசெல்லவேண்டிய நிலைமையில் இருக்கும் சிறாா்களின் நிலைமையை நினைக்கவே மனம் பதறுகிறது.
- அவசரத் தேவைக்காக நெடுஞ்சாலையைக் கடந்து செல்லவேண்டிய முதியவா்களின் நிலைமையும் மிகவும் பரிதாபத்திற்குரியதாகும்.
- தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் அமைந்துள்ள சிற்றூா்கள் மற்றும் கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அச்சாலைகளைப் பாதுகாப்பாகவும் பயமின்றியும் கடந்து மறுபுறம் சென்றுவருவதற்கு வழிவகைகளை அரசு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- இதன் மூலம், தேவையற்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.
- மத்திய மாநில அரசுகள் இவ்விஷயம் குறித்து விரைந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில், நெடுஞ்சாலைகளில் விரைந்து செல்பவா்கள் மட்டுமின்றி அவற்றைக் கடந்து செல்பவா்களும் நமது நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் முக்கியமானவா்கள்தான்.
நன்றி: தினமணி (06-03-2021)