- விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவிய கரோனா உலக அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் உயிர்ப்பன்மைக்கான ஐநாவின் உச்சி மாநாடு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- உயிர்ப்பன்மை இழப்புக்கும் விலங்குகளிடமிருந்து நோய்க் கிருமிகள் பரவுவதற்கும் இடையே உள்ள தொடர்பை நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் உயிரியல் பன்மைத்துவத்துக்கான அமைப்பின் (சிபிடி) உறுப்பு நாடுகள் கவனத்தில் எடுத்துக்கொண்டன.
- இயற்கையைச் சீரழிக்கும் விதத்தில் தொழில் துறையும் வணிக நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று இந்த மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
- 2020-க்குள் அடைய வேண்டியவை என்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் நடந்த மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இயற்கைப் பாதுகாப்பு சார்ந்த இலக்குகளை அடைவதில் மிக மோசமான தோல்வியை அடைந்திருக்கிறோம் என்று ஒருமனதாக எல்லா நாடுகளும் தற்போதைய மாநாட்டில் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
- நல்வாழ்வுக்கும் உயிர்ப்பன்மைக்கும் இடையிலான தொடர்பைப் பல நாடுகள் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டிருக்கின்றன.
- உயிர்ப்பன்மையை அரித்தழிக்கும் தொழிற்செயல்பாடுகளுக்கான மானியங்களைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளுதல், பாதுகாப்பான சுற்றுச்சூழல் வரம்புகளுக்கு உட்பட்டு இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள், அழிவின் விளிம்பில் உள்ள மீன் இனங்களையும் ஆபத்தான நிலையில் இருக்கும் சுற்றுச்சூழல் மண்டலங்களையும் அழிக்கக் கூடிய வகையில் நடைபெறும் மீன்பிடித் தொழில்களுக்குக் கட்டுப்பாடு விதித்தல், பிளாஸ்டிக் கழிவு உட்பட்ட மாசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவைதான் பத்து ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள்.
- இவற்றில் நாம் மிக மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால், ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ வெளியிட்ட ‘வாழும் புவிக்கோள் குறியீட்டெண்’ணின் படி இழப்புகள் மிக மோசமானவையாகத் தெரிகின்றன.
- மிகப் பெரிய உயிர்ப்பன்மையைக் கொண்ட நாடுகளில் ஒன்று என்றும், இயற்கையின் மதிப்பை உணர்ந்த இந்த மாநாட்டில், கட்டுப்படுத்தப்படாத அளவில் இயற்கையைச் சுரண்டுவதால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்த நாடாகவும் இந்தியா தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.
- 1970, 1980-களில் இயற்றப்பட்ட தேசிய அளவிலான சட்டங்கள் உயிர்ப்பன்மை முக்கியத்துவம் வாய்ந்த பரப்புகளை உண்மையில் பாதுகாத்தன.
- நாட்டின் பரப்பளவில் 5%-ஐப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வரையறுத்தன. ஆனால், அந்தச் சட்டங்களெல்லாம் இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்களால் முட்டுக்கட்டைகளாகப் பார்க்கப்பட்டன.
- இயற்கையைச் சுரண்டும் அவசரத்தில் உரிய நடைமுறைகள், விதிமுறைகளெல்லாம் ஒழித்துக்கட்டப்பட்டிருக்கின்றன.
- தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்திருக்கும் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் நெறிமுறைகள் செய்வதும் இதுதான்.
- உயிர்ப்பன்மையைப் பேணிக் காப்பதில் காலங்காலமாகப் பெரும் பங்களிப்பு செய்திருக்கும் வனப் பழங்குடியினர் புறக்கணிப்புக்குள்ளாகிவருகின்றனர்.
- காடுகளின் வளத்தை மேம்படுத்துவதில் அவர்களைப் பங்கெடுக்க வைப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.
- கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பசுமை சார்ந்த பாதையில் இந்தியா நடைபோட வேண்டியது அவசியம்.
- தூய்மையான எரிபொருள், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வேளாண்மை, சுரங்கச் செயற்பாடுகளையும் அணைக் கட்டுமானங்களையும் நிறுத்திவைத்தல், கழிவுப் பொருட்களிலிருந்து வளங்களைப் பெறுதல், தரிசு நிலங்களுக்குப் புத்துயிர் ஊட்டுதல் என்று அந்தப் பாதை அமைய வேண்டும்.
- அப்போதுதான் இதுவரையில் நாம் இழந்த இயற்கைக்குச் சிறிதளவாவது ஈடுசெய்ய முடியும்.
நன்றி: தி இந்து (05-10-2020)