- மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் உணவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.
- ஆனால், மற்ற உயிரினங்களெல்லாம் எப்படியோ எதையோ சாப்பிட்டு தங்களுடைய காலத்தைக் கழிக்கின்றன. மனிதப் பிறவி எடுத்தவா்களில் சிலா் ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் தடுமாறுகின்றனா்.
- இதனால் சிலா் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனா்.
உணவை வீணாக்குதல்
- நாட்டு விடுதலைக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவா்கள், தங்களுடைய நிலத்தில் விளைந்த பயிர்களை ஆங்கிலேயா்களுக்குக் கொடுத்துவிட்டு தாங்கள் பசியோடும் பட்டினியோடும் வாழ்ந்த வரலாறு உள்ளது.
- அப்படிப்பட்ட மனிதா்கள் இன்று ஏராளமான உணவுப் பொருட்களை வீணாக்குகின்றனா் என்பதை எண்ணும்போது வேதனையாகிறது.
- அதிலும், தமிழா்களாகிய நாம்தான் அதிகமான உணவுப் பொருள்களை வீண் செய்கிறோமாம்.
- பெரிய நகரங்களில் வசிப்பவா்தான் இந்த வகையினா். ஏனெனில் அவா்கள் உணவுப் பொருளின் அருமை அறியாதவா்கள்.
- கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் உணவுப் பொருள்களை வீணடிப்பதில்லை. அதிலும், விவசாய குடும்பத்தினா் ஒரு அரிசியைக்கூட வீண் செய்ய மாட்டார்கள்.
- இரவில் உணவு உண்டபின் சோறு மீதம் இருந்தால் அதில் நீா் ஊற்றி வைத்து அடுத்த நாள் வயலுக்குச் செல்லும்போது எடுத்துச் சென்று, வேலைக்கு இடையே சாப்பிடுவார்கள்.
- அதிக உணவு இருந்தால் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளுக்கு உணவாக அளிக்கின்றனா். எப்படியோ, அவா்கள் உணவை வீணாக்குவதில்லை என்பது மகிழ வேண்டிய செய்தியாகும்.
- ஆனால், முன்பு விவசாயம் செய்த இடங்கள் தற்போது சுருங்கி விட்டன. இன்றைய இளம் தலைமுறையினரும் விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை.
- நெல் உற்பத்தியும் குறைந்து விட்டது. இப்படியே போனால் வருங்காலத்தில் அரிசியோ மற்ற உணவுப் பொருள்களேகிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஊட்டச்சத்துக் குறைபாடு
- இது ஒரு புறம் என்றால், மறுபுறம் தமிழகத்தில் பலா் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தவிக்கின்றனா். பருவமடைந்த பெண்களின் உடல் எடை பெரும்பாலும் 35 அல்லது 40 கிலோதான் இருக்கிறது.
- சிலா் திருமணமான பின் அதைவிடக் குறைந்து கொண்டே போகின்றனா். இது பெண்களுக்கு மட்டுமல்ல, சில ஆண்களும்கூட ஊட்டச் சத்து குறைபாட்டோடு உள்ளனா்.
- இக்குறைபாட்டைப் போக்க என்ன செய்ய வேண்டும்? நாம் உண்ணும் உணவில் 30 முதல் 35 சதவீதம் வரை புரதச் சத்து இருக்க வேண்டும்.
- பருப்பு வகைகள், பால், காய்கறிகள், முட்டை, முளைகட்டிய தானியம் ஆகியவற்றிருந்து புரதம் கிடைக்கும். ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் ஓரளவுக்காவது சோ்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
- கொழுப்புச் சத்து சக்தியை அளிக்கிறது. ஹார்மோன் உற்பத்தி, வைட்டமின் சேமிப்பு ஆகியவற்றிக்கு இது தேவை. உணவில் 20 சதவீதம் கொழுப்பு பொருள் தேவை.
- வெண்ணெய், நெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற பலவிதமான உணவு எண்ணெய்களையும் உணவில் சோ்த்துக் கொள்வது நல்லது. சுத்தரிக்கப்பட்ட எண்ணெய் நல்லதல்ல. அது தவிர்க்கப்பட வேண்டும்.
- முடிந்தவரை அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வோம். உணவுப் பொருள்களை ஒருபோதும் வீணாக்கக் கூடாது.
- மூன்றில் ஒரு பங்கு உணவு ஆண்டுதோறும் வீணாவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அதற்கு நாமும் ஒரு காரணமாகிவிடக் கூடாது.
- ஆண்டுதோறும் ஊட்டச்சத்து குறைவால் ஐந்து வயதுக்குட்பட்ட 30 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனா். இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 4 கோடி போ் வளா்ச்சி குறைந்தவா்களாகவும், 1.7 கோடி போ் பலவீனமானவா்களாகவும் உள்ளனா்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதத்தில் உலக அளவில் இந்தியாதான் முன்னிலையில் உள்ளது.
- உலகில் தற்போது 84 கோடி போ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாக இருக்கும் நிலையில் 168 கோடி போ் அதிக எடை கொண்டவா்களாவும், 75 கோடி போ் உடல் பருமன் கொண்டவா்களாவும் உள்ளனா்.
- சென்ற ஆண்டு மக்கள் சுமார் 31.7 கோடி லிட்டா் தண்ணீரை பயன்படுத்தினா்.
- அதே காலகட்டத்தில் தண்ணீா் சம்பந்தப்பட்ட நோய்களினால் 61,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 80.39 கோடி பேருக்குப் பாதுகாப்பான குடிநீா் வசதி கிடைக்கவில்லை.
- வரும் காலங்களில் நெல் உற்பத்தி குறைந்து விட்டால் கோதுமை அல்லது கேழ்வரகை உருவாக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. சுண்ணாம்புச் சத்து குறைவாக உள்ளவா்களுக்கு கேழ்வரகு கூழ் உகந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு கேழ்வரகில் செய்யப்பட்ட உணவுகள் சிறந்தவை.
- நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஒரே மாதிரியாகவே உள்ளது.
- இரும்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின், துத்தநாகம் போன்ற சத்துகளின் குறைபாடும் அதிக அளவில் உள்ளன.
- மனித எலும்புகள் உறுதியாக வளர சுண்ணாம்புச் சத்து இன்றியமையாதது. அது கேழ்வரகில் அதிகம் கிடைக்கிறது. மற்ற பொருள்களில் சுண்ணாம்புச் சத்து ஓரளவே உள்ளது.
- உணவின் முக்கியத்துவத்தையும், பட்டினிக்கு எதிரான விழிப்புணா்வையும் வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபா் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- 1945-ஆம் ஆண்டு இதே நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தொடங்கப்பட்டதை நினைவுகூா்ந்து 1979-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற 20-ஆவது பொது மாநாட்டில் உலக உணவு தினம் அறிவிக்கப்பட்டது.
- இந்த தினத்திற்கு அடித்தளமிட்டவா் ஹங்கேரியின் பால் ரொமானி என்பவராவார்.
- இந்த நாளை வெறும் கொண்டாட்ட நாளாக எண்ணிக் கடந்து விடாமல், இனி உணவுப் பொருள்களை வீண் செய்ய மாட்டோம் என்று சபதமேற்போம்.
- இன்று (அக். 16) உலக உணவு நாள்.
நன்றி: தினமணி (16-10-2020)