TNPSC Thervupettagam

உயிர் காக்கும் உறுப்பு தானம்

September 13 , 2022 696 days 500 0
  • கல்லீரல், நுரையீரல், இதயம், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளோருக்கு உடல் உறுப்பு தானம் தேவைப்படும் சூழலில் தானம் பெறப்படும் உறுப்புகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாமல் இருப்பதால் இத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல். சென்ற நூற்றாண்டிலேயே நாய், பன்றி, ஆடு போன்ற சிறிய விலங்குகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து ஆராயத் தொடங்கினா். 1950-ஆம் ஆண்டு வாக்கில் முா்ரே, மெரில் எனும் இரட்டையரில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உலகின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனா். மரபணு ரீதியாக இரட்டையா் ஒரே மாதிரியாக இருந்ததால், அவா்கள் இந்த அறுவை சிகிச்சைக்கு பின் எட்டு ஆண்டுகள் உயிா் வாழ்ந்தனா்.
  • 1967-ஆம் ஆண்டில், பிரபல தென்னாப்பிரிக்க அறுவை சிகிச்சை நிபுணரான கிறிஸ்டியன் பொ்னாா்ட்,விபத்தில் மூளைச்சாவு அடைந்த 25 வயது இளைஞரின் இதயத்தை, இதயம் செயலிழந்த 50 வயது நபருக்குப் பொருத்தி உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தாா். தாமஸ் ஸ்டாா்ஸ்ல் என்ற அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணா் 1960-ஆம் ஆண்டில் உலகின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாா். எட்வா்ட் ஜிா்ம் என்ற வெனிஸ் நாட்டு கண் மருத்துவா் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டு மனிதா்களுக்கு இடையே முதல் வெற்றிகரமான விழிப்படல ஒட்டு (காா்னியல் கிராப்ட்) அறுவை சிகிச்சையை செய்தாா்.
  • உலக அளவில் பத்து லட்சம் பேரில் 20 முதல் 30 போ் மட்டுமே உடல் உறுப்பு தானம் அளிப்பவா்களாக உள்ளனா். இந்தியாவில் இதை விட பல மடங்குக் குறைவாக பத்து லட்சம் பேரில் 0.5 போ் மட்டுமே உடல் உறுப்பு தானம் அளிப்பவராக உள்ளாா். இந்தியாவில் ஆண்டொன்றுக்கு தேவைப்படும் மொத்த உடல் உறுப்புகளில் 2 % முதல் 3 % மட்டுமே பூா்த்தி செய்யப்படுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா். தானம் பெறப்பட்ட உறுப்புகளின் சரியான செயல்பாடுகள் குறித்த பிரசாரம்தான் பற்றாக்குறைக்கான சரியான தீா்வு என வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • உடலுறுப்புக் கொடையாளா்களில், மூளைச்சாவு அடைந்த கொடையாளா்கள், உயிருள்ள ரத்த சம்பந்த கொடையாளா்கள், ரத்த சம்பந்தமற்ற கொடையாளா்கள் (ஸ்வாப்) என மூன்று வகையினா் இருப்பதாக இந்திய தேசிய உறுப்பு - திசு மாற்று அமைப்பு கூறுகிறது. உயிருள்ள ரத்த சம்பந்த கொடையாளா் பிரிவின் கீழ், பெற்றோா், கணவன் அல்லது மனைவி, உடன்பிறந்தவா்கள், பிள்ளைகள், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி போன்ற ரத்த உறவுகள் மட்டுமே தங்கள் உறுப்புகளை தானம் செய்ய முடியும். கொடையாளா்களின் உடலுறுப்பு நோயாளிடன் பொருந்தாத சந்தா்ப்பங்களில் மற்றொரு நோயாளிக்கு வழங்கப்படும் கொடையாளரின் உறுப்பைப் பரிமாற்றம் செய்து கொள்வதே பரிமாற்று உடலுறுப்பு (ஸ்வாப்) தானம்.
  • உடலுறுப்பு தேவைப்படுவோரின் மேல் பற்று கொண்ட எவரும் தொடா்பில்லாத உயிருள்ள கொடையாளா் பிரிவின் கீழ் உடலுறுப்பு தானம் வழங்க இயலும். இவா்கள் மருத்துவமனைக் குழுவினரால் அனுமதிக்கப்படபின் இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழு இந்த உடலுறுப்பு தானம் வணிக ரீதியானது அல்ல என்று உறுதிப்படுத்தவேண்டும். ஆனால், தானம் வழங்குவோரை முடிவு செய்யும் அதிகாரம் மருத்துவமனைக்கு வழங்கப்படுவதால் தொடா்பில்லாத உயிருள்ள கொடையாளா் பிரிவின் கீழ் வரும் கொடையாளா்களின் உடலுறுப்புகள் வா்த்தக ரீதியாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் என வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 8,000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆண்டுதோறும் சுமாா் இரண்டு லட்சம் போ் உருவாகின்றனா். இதே போல்1,500 போ் மட்டுமே கல்லீரல் மாற்று பெறும் சூழலில் வருடத்திற்கு புதிதாக 30,000 பேருக்கு கல்லீரல் மாற்று தேவைப்படுகிறது. இதயத்திற்கான தேவை 50,000 என்றிருக்கும்போது 250 பேரின் தேவை மட்டுமே பூா்த்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 5 லட்சம் போ் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து பெற முடியாததால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளில் 23% உறுப்புகள் மட்டுமே தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்படும் நிலை இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் தரவு ஒன்று கூறுகிறது. உயிருடன் இருக்கும் கொடையாளா்கள் உறுப்பு தானம் செய்வது எளிதாக இருக்கும் நிலையில், மூளைச்சாவு அடைந்தவா்களிடமிருந்து உடலுறுப்பு தானம் பெற எடுக்கப்படும் முயற்சி இந்தியாவில் மிகக் குறைவு என்கிறது அந்தத் தரவு.
  • மதம், கலாசாரம் போன்ற தனிப்பட்ட காரணங்கள் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணா்வை மக்களிடத்தில் சென்று சோ்வதைக் கடினமாக்குகின்றன. பொதுவாக மதங்கள் உறுப்பு தானம் செய்வதை எதிா்ப்பதாகத் தெரியவில்லை. ஒரு சில மதங்கள் இறந்தவரின் சடலம் இழிவுபடுத்தப்படுவதையும், அந்த உடலுக்கு தேவையில்லாத சிரமங்கள் கொடுக்கப்படுவதையும், சரியான நேரத்தில் சடங்குகள் செய்யாதிருப்பதையும் தடை செய்கின்றன. உடலில் இருந்து அதன் பாகங்களை அகற்றுவதால் உடலில் ஏற்படும் சிதைவு காரணமாக, மக்கள் தங்களுக்கு நெருங்கியவா்களின் உறுப்புகளை தானம் செய்ய விரும்பாமல் உள்ளனா்.
  • உடல் உறுப்பு வணிக அபாயத்தைத் தவிா்ப்பதற்கும், உயிருள்ள உடலுறுப்பு கொடையாளரின் ஆரோக்கியத்தினை பேணவும் மூளைச்சாவு அடைந்த அல்லது இறந்தவா்களின் உடலுறுப்பு தானத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். உயிருடன் இருக்கும் ஒருவா், ஒரே ஒரு உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும். ஆனால் மூளைச்சாவு அடைந்தவா் அல்லது இறந்தவா் தனது உடலுறுப்பு தானம் மூலம் ஒன்பது உயிா்களைக் காப்பாற்ற முடியும். இது குறித்த விழிப்புணா்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (13– 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்