- தமிழ்நாடு அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட’த்தை அமல்படுத்தி இருக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களின் இல்லத்தரசிகள், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம், 10ஏக்கர் மானாவாரி நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
பாலினச் சமத்துவம்
- நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த, பெண்களின் ஊதியம் அற்ற வீட்டு வேலைகளை இத்திட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆணாதிக்கச் சமூக விதிமுறைகளால் கிராமம், நகரம் என எங்கிருந்தாலும், கல்வித் தரம் எதுவாக இருந்தாலும், ஊதியம் அற்ற வீட்டு வேலைகளின் சுமை ஆண்களைவிடப் பெண்களின் மீது சமமற்ற முறையில் விழுகிறது என்பதை இத்திட்டம் அங்கீகரித்துள்ளது. இது பெண்களுக்கான அதிகாரமளித்தலுக்கும் பாலினச் சமத்துவத்துக்குமான முதல் படியாகும்.
- இத்திட்டத்தின் நோக்கம் நல்லதாகவே இருந்தாலும், பெண்களுக்கு அவர்களின் வீட்டு வேலைகளுக்கு மாதாந்திர ஊதியம் என்பது பல முனைகளில் இருந்து பார்க்கும்போது, ஒரு பிரச்சினைக்குரிய கருத்து. முதலாவதாக, பெண்களின் ஊதியம் அற்ற வீட்டு வேலைகள் ‘பொருளாதார’ வேலையாக அங்கீகரிக்கப் படுவதில்லை, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கணக்கிடப்படுவதில்லை என்பதில் முரண்பாடு உள்ளது.
- இதன் பொருள் என்னவென்றால், பெண்கள் விறகு சேகரிப்பது, சுயதொழில் போன்ற பலவிதமான செயல்பாடுகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு, சமையல், சலவை, சுத்தம் செய்தல் போன்ற பராமரிப்பு வேலைகள் ‘உற்பத்தியற்றவை’யாகக் கருதப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கில் கொள்ளப்படவில்லை.
சமத்துவம் சாத்தியமா?
- இந்தச் சூழலில், பெண்களின் ஊதியம் அற்ற வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் ரூ.1,000 என்கிற பண ஊதியமானது, அவர்களது வேலை உற்பத்தியற்றதாகவும் பொருளாதார மற்றதாகவும் பார்க்கப்படும் நிலையை மாற்றிவிடாது.
- இரண்டாவதாக, இன்னும் அடிப்படையில், அத்தகைய ஊதியமானது ஆணாதிக்கப் பாலின விதிமுறைகளால் வரையறுக்கப்பட்ட வீட்டு வேலைகளைத் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும், ஊதியம் அற்ற வேலையின் சுமையைப் பகிர்ந்துகொள்வது, சமையலறையின் உள்ளேயும் வெளியேயும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான இடங்களை உருவாக்குவது போன்ற முக்கியமான முற்போக்குச் செயல்பாடுகளை மேற் கொள்ளாமல், ஊதியம் கொடுப்பதன் மூலமாக ஆண்-பெண் சமத்துவத்தை உருவாக்கிவிட முடியாது.
- இறுதியாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்ய சென்னின் ‘திறன்கள் அணுகுமுறை’யானது (Capability Approach), வேலைவாய்ப்புக்கு அதன் பொருளாதார மதிப்பைவிட ஒரு உள்ளார்ந்த மதிப்பு உள்ளது என்று கூறுகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, சுதந்திரம், மரியாதை, ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுதல், முடிவெடுக்கும் ஆற்றல் ஆகியவற்றைப் பற்றியது.
- மேலும், வேலைவாய்ப்பு என்பது அத்தகைய திறன்களை உணரும் ஆற்றலை வழங்குகிறது. இந்த ஊதியத் திட்டம் வேலைவாய்ப்புடன் வரும் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தாது. மாறாக, பெண்களைக் குடும்பப் பராமரிப்பாளர்களாக வரையறுக்கும் ஆணாதிக்க நெறிமுறைகளை வேரூன்றச் செய்து, பாலினச் சமத்துவத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தடுக்கும் சாத்தியம் உள்ளது.
மாற்று அணுகுமுறை
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் உள்ள அடிப்படை முரண்பாடுகளில் ஒன்று, தொழிலாளர் படையில் பெண்களின் (15-59 வயதுக்கு உட்பட்ட) குறைந்த அளவிலான பங்கேற்பு ஆகும். வரலாற்றுரீதியாகக் குறைந்த அளவிலான பெண்களின் பங்கேற்பானது, ஆழமான ஆணாதிக்கச் சமூகத்தின் தீய சுழற்சியில் சிக்கியுள்ள பெண்களின் நிலையைப் பிரதிபலிக்கிறது - சிறுவயதுப் பெண்களிலிருந்தே, ஆண் குழந்தைகளைவிட, குடும்பப் பராமரிப்பாளரின் பாத்திரத்துக்கு இணங்குவதற்கான ஆணாதிக்கச் சமூக அழுத்தத்தை எதிர் கொள்கிறார்கள்; அவர்களின் திறன்களை எதிர்மறையாகப் பாதிக்கும் சமமற்ற வாய்ப்புகளை எதிர்கொள்கிறார்கள். இது சமூகத்தில் அவர்களின் கீழ்நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
- பெண் தொழிலாளர்களின் குறைந்த அளவிலான பங்கேற்புக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, வீட்டு வேலைகளின் சமமற்ற சுமையாகும். சமீபத்திய அகில இந்திய நேர-பயன்பாடு புள்ளிவிவரங்கள் (TUS-2019), பெண்களுக்கான ஊதியம் அற்ற வீட்டு வேலைகளின் சுமை ஆண்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
- குறிப்பாக, அனைத்து மாநிலங்களிலும் குழந்தைப் பராமரிப்பு என்பது மொத்த ஊதியம் பெறாத பராமரிப்பு நடவடிக்கைகளில் முதன்மையான வேலைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள், ஊதியம் பெறாத மொத்தப் பராமரிப்பு நேரத்தில் 95% குழந்தைப் பராமரிப்புக்குச் செலவிடுகிறார்கள்.
- இது பொதுவாகக் கிராமப்புறப் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிராகரிக்கப்படுகிறது. ஆனால், TUS-19 நேர-பயன்பாடு புள்ளிவிவரங்கள், படித்த மற்றும் சம்பளம் வாங்கும் நகர்ப்புறப் பெண்கள் அவர்கள் சம்பளம் பெறும் வேலையுடன் கூடுதலாக ஊதியம் அற்ற வீட்டு வேலைகளின் இரட்டைச் சுமையை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
- மேலும் குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் வழக்கமான சம்பள வேலையைவிடக் கூடுதலாக, ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் சம்பளம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்கள். ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண்கள் வீட்டு வேலைகளில் மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே ஈடுபடுகிறார்கள். இந்தப் புள்ளி விவரங்கள் நமக்குச் சொல்வது இதுதான்: வீட்டு வேலைகள், குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகள் போன்றவை தொழிலாளர் படையில் பெண்களின் உழைப்புப் படை பங்கேற்பதற்குக் கடுமையான தடையாக இருக்கின்றன; அவர்களின் திறன்களை உணர விடாமலும் தடுக்கின்றன.
மறுபரிசீலனை அவசியம்
- ஏன் இந்தப் பிரச்சினை பொருளாதாரம், வளர்ச்சிப் பேச்சுக்களில் கவனம் பெறவில்லை என்று கேட்கலாம். பொருளாதாரக் கொள்கைகளை வழிநடத்தும் மேலாதிக்கப் பொருளாதாரக் கோட்பாடு அதன் பகுப்பாய்வில் பாலின ஏற்றத்தாழ்வுகளை ஒருபோதும் சேர்க்கவில்லை என்பதே காரணம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், ஆதிக்கப் பொருளாதாரக் கோட்பாடு, பகுப்பாய்வு ஆகியவை ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிபலிப்பாகும்.
- உள்ளடங்கிய வளர்ச்சி, மேம்பாட்டை ஊக்கு விப்பதில் பராமரிப்பு சார்ந்த உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பது அவசியமான ஒரு படியாகும். ஏனெனில், பொருளாதார வளர்ச்சியானது அடிப்படையில் தொழிலாளர் உற்பத்தித் திறனையும் மனித மூலதனத்தையும் சார்ந்துள்ளது.
- இவை இரண்டும் ஊதியம் அற்ற கவனிப்பு, உழைப்பால் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, ஊட்டம் அளிக்கப்பட்டு, வலுப்படுத்தப் படுகின்றன. வளர்ச்சிக் கொள்கைப் பகுப்பாய்வில் இந்த அடிப்படை அம்சம் ஒருங்கிணைக்கப்பட்டாக வேண்டும். அரசு அதன் வளர்ச்சிக் கொள்கைகளைப் பாலினம் சார்ந்த கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்து, மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
- நடைமுறைக் கண்ணோட்டத்தில், கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘குசினா மனே’ திட்டம் ஓர் உதாரணம். இத்திட்டம் கர்நாடகத்தில் உள்ள நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்காக 4,000 கிராமப் பஞ்சாயத்துகளில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசும் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
- மேலும், மாநிலத்தில் பரந்த பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் அங்கன்வாடி, நூறு நாள் வேலைத் திட்டம், பிற திட்டங்கள் மூலம் குழந்தைப் பராமரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும்.
- அடிப்படையில், இவை அனைத்துக்குமே வளர்ச்சிக் கொள்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பாலினச் சமத்துவத்தை ஒருங்கிணைக்கும் முன்னோக்குப் பார்வை தேவைப்படுகிறது. வளர்ச்சியின் பார்வை அனைவரையும் உள்ளடக்கியதாகவும் அதிகாரம் அளிப்பதாகவும் இருக்க வேண்டுமானால், அது பாலினச் சமத்துவம், சமூக நீதி ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு மாற்றுப் பாதையாக இருக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 09 – 2023)