TNPSC Thervupettagam

உரிமைத்தொகை உதவித்தொகை ஆகிவிடக் கூடாது

July 16 , 2023 498 days 304 0
  • அரசியல் புரிவோருக்குத் தேர்தல் நேரத்தில் மட்டும் பெண்கள் நாட்டின் கண்களாகிவிடுவார்கள். பெண்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே உத்தேசித்துப் பல்வேறு திட்டங்களை அறிவிப்பதும் பிறகு அவை கிடப்பில் போடப் படுவதும் வாடிக்கை. பெண்களுக்கும் அரசியலுக்குமான தொடர்பு இந்த அளவுக்கு மட்டும் இருந்தால்போதும் எனப் பெரும்பான்மையானோர் கருதும் சூழலில் விதிவிலக்குகள் உண்டு.
  • 2021 தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற ஒரு வாக்குறுதி அப்படியானதுதான். பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த வாக்குறுதி, ‘சமூகநீதி’ என்கிற தலைப்பின் கீழ் வெளி யிடப்பட்டிருந்ததும் பொருத்தமாக இருந்தது.
  • தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ‘உரிமைத்தொகை’ வழங்கப்படும் என்பதுதான் மகளிரைக் கௌரவிக்கும் அந்த வாக்குறுதி. காலம் காலமாகக் கருத்தில்கொள்ளப்படாத பெண்களின் குடும்ப உழைப்புக்கும் அவர்களின் இருப்புக்கும் அங்கீகாரம் தரும் வாக்குறுதியாகவே மகளிர் உரிமைத் தொகையைப் பெண்கள் கருதுகின்றனர்.

ஊதியமில்லா உழைப்பு

  • சமையல், வீட்டைப் பராமரித்தல், துணி துவைத்தல், குழந்தை வளர்ப்பு, பெரியோர் நலன் என நம் வீடுகளுக்குள் தினமும் ஏராளமான பணிகளைப் பெண்கள் செய்கிற போதும் பொருளாதார மதிப்பு இல்லை என்பதாலேயே அவர்களின் உழைப்பு கவனத்தில்கொள்ளப்படுவதே இல்லை. சந்தை மதிப்பில்லாத வேலையைப் பெண்கள் செய்ய நிர்பந்திக்கப்படுவதாலேயே அவை வேலைகள் அல்ல, பெண்களின் கடமை என்று மிகத் தந்திரமாக மடைமாற்றம் செய்யப்பட்டுவிடுகிறது.
  • ஆண்டாண்டுக் கால அழுத்தத்தாலும் கற்பிதங்களாலும் பெண்களும் வீட்டு வேலைகளைத் தங்கள் கடமை என நினைப்பதோடு அவை அனைத்தும் பெண்களின் வேலை என்று ஆண்களை அவற்றிலிருந்து ‘பெருந்தன்மையோடு’ விடுவித்துவிடுகிறார்கள். ஆணாதிக்க முதலாளித்துவ சமூகத்தின் எதிர்பார்ப்பும் இதுதான். பெண்கள் வீட்டில் எந்தவிதப் பொருளாதாரப் பலனும் அங்கீகாரமும் இல்லாமல் செய்கிற வேலையை வீட்டுக்கு வெளியே நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பில் ஆண்கள் செய்கிற போது பொருளாதாரப் பலனு டன் சமூக அங்கீகாரமும் கிடைக்கிறது. ஒரே வேலை அது செய்யப்படுகிற இடத்தைப் பொறுத்து கடமையாகவும் தொழிலாகவும் சித்தரிக்கப்படுகிறது. பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் இந்த அநீதியைக் களையும் முயற்சிகளில் ஒன்றாகத்தான் திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகையைப் பார்க்க வேண்டும்.

முன்னோடித் திட்டம்

  • பெண்களின் ஊதியமில்லாத வீட்டு வேலைகளை அங்கீகரிக்க உச்ச நீதிமன்றம் அவ்வப்போது தீர்ப்பும் கருத்தும் சொல்கிற போதும் மக்கள் மனங்களில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. ஆனால், அரசு அதை முன்னெடுக்கிறபோது வேறு வழியின்றி சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும். அப்படியான மாற்றத்தை மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் நிகழ்த்துவதற்கான சாத்தியம் அதிகம். இதுவரை மத்திய, மாநில அரசுகள் எல்லாம் பெண்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளனவே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பங்களிக்கும் பெண்களின் வீட்டு உழைப்பைக் கணக்கில்கொள்ளவில்லை.
  • அந்த வகையில் சமூகநீதியைத் தங்கள் கொள்கைகளில் ஒன்றாக முன்வைக்கும் திமுக, குடும்பத்தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கும்விதமாக மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை அறிவித்தது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது. திமுகவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் இப்படியொரு திட்டம் செயல்படுத்தப்படவிருப்பது பாராட்டுக்குரியது.
  • இந்தத் திட்டத்தை மற்ற நலத் திட்டங்களைப் போல ‘பணப்பயன்’ திட்டமாகப் பார்க்கக் கூடது. இதில் வழங்கப்படும் தொகை முக்கியமல்ல. அது வழங்கப்படும் நோக்கமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் வீட்டில் ‘சும்மா’ இருக்கிறார்கள் என்கிற உண்மைக்குப் புறம்பான வறட்டுக் கற்பிதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டமாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். குடும்பத்தலைவிகளின் ஊதியமில்லாப் பணிகளையும் அவற்றின் அவசியத்தையும் அரசு அங்கீகரிக்கிறது என்பதாகத்தான் பொருள்கொள்ள வேண்டும்.
  • அரசு அளிக்கிற ஆயிரம் ரூபாயில் பெண்கள் அனைவரும் பொருளாதாரத் தன்னிறைவை அடைந்துவிட முடியாது. ஆனால், அவர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் தருகிற சிறுதொகை, ஆண்கள் மத்தியில் அவர்களின் இருப்பையும் மதிப்பையும் சிறுகச் சிறுக உயர்த்தும். ஒவ்வோர் அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டியதும் இதைத்தான்.

அனைவரும் தகுதியானவர்களே

  • கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடை யேயும் இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டுமா என்கிற எதிர்க்குரல்களும் எழத்தான் செய்கின்றன. பெண்களின் அளப்பரிய உழைப்பை அங்கீகரிக்க எவ்வளவு நெருக்கடிகளை வேண்டுமானாலும் அரசு சமாளிக்கத்தான் வேண்டும். அதை வழிமொழியும் விதமாகத்தான், தான் பதவியேற்றபோது வரலாறு காணாத வகையில் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழ்நாடு தத்தளித்தபோதும் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம்’ உள்ளிட்ட பெண்கள் நலத் திட்டங்கள் பலவற்றை அறிவித்த தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாதியின் பெயரால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்தில் தனிப் பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் ஆகியோரை உள்ளடக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது.
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் பிற திட்டங்களைப் போல் மற்றுமோர் உதவித் தொகைத் திட்டமாக இருக்கும்பட்சத்தில் அரசு அறிவித்திருக்கிற தகுதிகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. ஆனால், இது பெண்களின் உரிமைத்தொகை மட்டுமல்ல, உயிர்த்தொகை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அப்படியெனில் ஊதியமற்ற வீட்டுவேலைகளில் ஈடுபடும் பெண்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவர்களே.
  • வேலைக்குச் செல்லும் பெண்களும் வருமான வரி செலுத்துகிறவர்களும் பொருளாதாரத் தற்சார்புடன்தானே இருக்கிறார்கள், அவர்களுக்கு எதற்கு இந்தத் தொகை என்கிற கேள்வி எழலாம். இது உதவித் தொகை அல்லது பணப்பயன் திட்டமாக இருந்தால் இந்தக் கேள்வி சரியே. ஆனால், இது குடும்பத்தலைவிகளின் குடும்பப் பணி களுக்காக அரசு தரும் ஊதியமாகவும் அங்கீகாரமாகவும் இருப்பதால் இதில் விடுபடல்கள் இருக்கக் கூடாது. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு வீட்டு வேலைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படாத நிலையில் அவர்களுக்கு இரட்டைச் சுமையாகிவிடுகிறதுதானே.
  • பிறகு எப்படி அவர்களைப் புறக்கணிக்க முடியும்? தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ள நிலையில் அடுத்த கட்டமாகப் பயனாளிகளின் பட்டியலை விரிவுபடுத்துவது இந்தத் திட்டத்துக்கான நோக்கத்தை நேர்செய்யும்.
  • நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மானுட விடுதலை சாத்தியமில்லை’ என்றார் லெனின். பெண்களை வீட்டு வேலைகளில் இருந்து விடுவிப்பதோடு பெண்களின் ‘குடும்பக் கடமை’களுக்கு அங்கீகாரத்துடன் பொருளாதர மதிப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை. ‘அங்கன்வாடித் திட்டம்’, ‘அம்மா உணவகம்’ போன்ற சிறந்த திட்டங்கள் குழந்தைப் பராமரிப்பு, சமையல் போன்றவற்றிலிருந்து பெண்களை ஓரளவுக்காவது விடுவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அப்படித்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் நாம் அணுக வேண்டும்.

நன்றி: தி இந்து (16 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்