TNPSC Thervupettagam

உரிமைத் தொகைப் பயனாளிகள்: தேவை மறுபரிசீலனை

July 14 , 2023 593 days 348 0
  • தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதியாகத் திமுக அறிவித்திருந்தது. 2023–24 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பும் அதற்கான நிதி ஒதுக்கீடும் இடம்பெற்றிருந்தன. இத்திட்டத்துக்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திட்டத்துக்கு, அரசு விதிக்கும் சில நிபந்தனைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • இது உரிமைத் தொகை மட்டுமல்ல, உயிர்த் தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எவ்வித அங்கீகாரமும் பொருளாதாரப் பலனும் இல்லாத வீட்டு வேலைகளில் மூழ்கிக் கிடக்கும் குடும்பத் தலைவிகளுக்கான திட்டமாக அறிவிக்கப்பட்டது இந்தத் திட்டம்.
  • அதனால்தான், ‘குடும்பத் தலைவிகள்’ அனைவரும் இந்தத் திட்டத்தால் பலனடைவார்கள் என்று சொல்லப் பட்டது. அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று இத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி குறித்துத் தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது.
  • இந்தத் திட்டப் பயனாளிகளின் தகுதி குறித்து அரசு வெளியிட்டிருக்கும் நிபந்தனைகளில் சில கவனிக்கத் தகுந்தவை. தனிப்பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் ஆகியோரை இந்தத் திட்டத்தில் உள்ளடக்கியிருப்பது வரவேற்கத்தகுந்தது. அதேபோல் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கான நில வரையறையை அதிகரித்திருப்பதும் பாராட்டுக்குரியது.
  • நன்செய் நிலமாக இருந்தால் ஐந்து ஏக்கருக்குக் குறைவாகவும் புன்செய் நிலமாக இருந்தால் பத்து ஏக்கருக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும் என்பது பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் யாரேனும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்தால் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தவிர) அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைய முடியாது என்பதையும், மத்திய/ மாநில அரசுப் பணிகளில் இருப்போருக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது என்பதையும் பொருளாதார அடிப்படையிலான அளவுகோல் என்று கொள்ளலாம்.
  • ஆனால், ஆண்டு வருமானம், மின் கட்டண நுகர்வு ஆகியவை சார்ந்த வரையறைகள், இந்தத் திட்டத்தால் பலனடைவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஏற்பாடாகவே தோன்றுகிறது. கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து,ஏனைய சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை பெறுவோரும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது என்று வரையறுத்திருப்பது, குடும்பத் தலைவிகளுக்கான திட்டம் இது என்கிற நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
  • ஒரு திட்டத்தின் பயனாளிகளுக்கான வரையறை என்பது, தகுதியுடையோரை எக்காரணம் கொண்டும் விலக்கிவைப்பதாக இருக்கக் கூடாது. அத்துடன் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருப்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும். நிதிநிலையைக் கருத்தில் கொண்டு பயனாளிகளின் எண்ணிக்கையைச் சுருக்குவது ஒரு திட்டத்தைப் பெயரளவுக்கான திட்டமாக மாற்றிவிடும்.
  • இதைக் கருத்தில்கொண்டு, மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் பயனாளிகளுக்கான தகுதி வரையறையைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், உரிமைத் தொகை என்னும் பதம் தனது உள்ளார்ந்த அர்த்தத்தை இழந்துவிடும்!

நன்றி: இந்து தமிழ் திசை (14  – 07 – 2023)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
232425262728 
Top