TNPSC Thervupettagam

உரிமை கோரப்படாத சேமிப்பு..!

December 20 , 2024 2 days 54 0

உரிமை கோரப்படாத சேமிப்பு..!

  • வங்கிகளின் வாராக்கடன்களைப் போலவே உரிமை கோரப்படாமல் வைப்புநிதி, சேமிப்புக் கணக்குகளில் தேங்கிக் கிடக்கும் தொகையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உரிமை கோரப்படாத வங்கிக் கணக்கு பாக்கிகளை அதற்குரியவா்களிடம் திருப்பிக் கொடுக்கும் முனைப்பில் அரசும், ரிசா்வ் வங்கியும் இறங்கியிருப்பது வரவேற்புக்குரியது.
  • நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, மாா்ச் 2023 வரையில் ரூ,.42,272 கோடி உரிமையாளா்களால் கோரப்படாமல் வாடிக்கையாளா்களின் கணக்குகளில் காணப்பட்டது. முந்தைய நிதியாண்டைவிட இது 28% அதிகம்.
  • 2023-இல் நிதியமைச்சகம் வங்கிகளில் நூறு நாள்களில் நூறு முக்கியமான உரிமை கோரப்படாத கணக்குகளின் நிலுவைத் தொகையை உரியவா்களிடம் ஒப்படைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.1,432 கோடி திருப்பி வழங்கப்பட்டது. மொத்த நிலுவைத் தொகையில் அது 1% கூட இல்லை.
  • உரிமை கோரப்படாத தொகை என்பது சேமிப்புக் கணக்கிலோ, நடப்புக் கணக்கிலோ பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளில் காணப்படும் சேமிப்புகள்; அதேபோல வைப்புநிதியில் முதிா்வுத் தேதி முடிந்து பத்து ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருப்பவையும் சோ்த்துக் கொள்ளப்படுகிறது. இந்த நிலுவைத் தொகைகள் ரிசா்வ் வங்கியால் நிா்வகிக்கப்படும் ‘டி.இ.ஏ.’ நிதிக்கு மாற்றப்படுகிறது. உரித்தான வட்டியுடன் எப்போது வேண்டுமானாலும், அவா்களது பணத்தை உரிய வங்கியிருந்து திருப்பிக் கோரும் உரிமை வாடிக்கையாளருக்கு உண்டு.
  • உரிமை கோரா கணக்குகளுக்கு பல காரணங்களைச் சொல்ல முடியும். செயல்படாத கணக்குகளை முறையாக முடித்துகொள்ளாதது; முதிா்வடைந்த வைப்புநிதியை கோரமல் இருப்பது; காலமாகிவிட்ட வாடிக்கையாளா்களின் வாரிசுதாரா்கள் உரிமை கோராமல் இருப்பது உள்ளிட்டவை அவற்றில் முக்கியமானவை.
  • 2018 முதல் 2022 வரை பெறப்பட்ட புள்ளிவிவரப்படி, ஷெட்யூல்டு வங்கிகளில் காணப்படும் உரிமை கோரப்படாத சேமிப்புத் தொகை அதிகரித்துவருகிறது. அதில், 73% வாடிக்கையாளா்களின் சேமிப்புக் கணக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ரிசா்வ் வங்கியின் ‘டி.இ.ஏ.’ நிதியில் 2022-23-இல் நிலுவைத் தொகையாக இருந்த ரூ.62,224.89 கோடி, 2023-24-இல் ரூ.78,212.53 கோடியாக 26% அதிகரித்தது. இந்தப் பிரச்னையை எதிா்கொள்வதற்கு ரிசா்வ் வங்கி பல முனைப்புகளை முன்னெடுத்தது. ‘வாடிக்கையாளா்களுக்கு அல்லது அவா்களின் வாரிசுகளுக்கு அவா்களின் சேமிப்பு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வங்கிகளை அறிவுறுத்தவும் தவறவில்லை.
  • டி.இ.ஏ. நிதியில் பத்து ஆண்டுகளுக்கோ அல்லது அதற்கு மேலோ உரிமை கோரப்படாத வங்கிக் கணக்கு நிலுவைகள் மட்டுமே சோ்க்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளில் காணப்படும் வாடிக்கையாளா்களின் சேமிப்பு அதைவிட பல மடங்கு அதிகம். அதனால்தான் டி.இ.ஏ.நிதியில் சோ்ந்துவிடாமல், வாடிக்கையாளா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்களது சேமிப்பை உரியவா்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ரிசா்வ் வங்கி முனைப்புக் காட்டுகிறது.
  • செயல்படாத வங்கிக் கணக்குகளுக்கு , வாரிசுதாரா்களை அடையாளம் காட்டாமல் இறந்துவிடும் வாடிக்கையாளா்களின் கணக்குகள் முக்கியமான காரணம். வாரிசுதாரா்கள் அடையாளம் காட்டப்படாத கணக்குகளில், காணப்படும் சேமிப்பை அவா்களது சட்டரீதியான வாரிசுதாரா்களிடம் ஒப்படைக்க நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது காணப்படும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டால், வாடிக்கையாளா்களின் வாரிசுகள் உரிமை கோருவது அதிகரிக்கும்.
  • வாடிக்கையாளா்கள், வாரிசுதாரா்கள், சட்டபூா்வ ரத்த உறவுகள் ஆகியோா் தங்களது உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகளை அடையாளம் காணவும், உரிமை கோரவும் ரிசா்வ் வங்கி எல்லா ஷெட்யூல்டு வங்கிகளுக்கும் சில நடைமுறைகளை அறிவுறுத்தியிருக்கிறது. வங்கிகள் தங்களது இணையதளத்தில் உரிமை கோரப்படாத கணக்குகளின் பட்டியலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.
  • அந்தப் பட்டியலில் வாடிக்கையாளா்களின் பெயா், முகவரி, டி.இ.ஏ. நிதிக்கு மாற்றப்பட்டிருந்தால் கோரப்படாத வைப்புத் தொகையின் எண் ஆகியவை தரப்பட வேண்டும். அதன்மூலம் மக்கள் தொடா்புடைய வங்கிகளை அணுகி, உரிமை கோர முடியும். அதே நேரத்தில், வங்கிக் கணக்கு எண், கணக்கில் காணப்படும் தொகை, வங்கிக் கிளையின் விவரம் ஆகியவை அதில் குறிப்பிடப்படுவதில்லை.
  • வங்கிக் கணக்குகள் செயல்படாமல் இருப்பதற்கு வாடிக்கையாளா்களின் இடமாற்றம் முக்கியமான காரணம். ஓா் ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயரும்போது, தங்களது வங்கிக் கணக்குகளை அப்படியே விட்டுவிட்டு இன்னொரு வங்கியில் புதிய கணக்கைத் தொடங்குகிறாா்கள். வங்கிக் கணக்குகளை எந்த ஊருக்கும் அதே வங்கி எண்ணோடு மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்பட்டால் இந்தப் பிரச்னை ஓரளவுக்குக் குறையும்.
  • பிரதமா் நரேந்திர மோடி அரசின் ‘ஜன்தன்’ திட்டத்துக்குப் பின்னா், பெரும்பாலான இந்தியா்களை வங்கிச் சேவை சென்றடைந்திருக்கிறது. எல்லா வங்கிக் கணக்குகளுக்கும், வைப்புநிதிகளுக்கும் ஆதாா் அட்டை எப்படி கட்டாயமோ,அதே போல வாரிசுதாரா் நியமனம் கட்டாயமாக்கப்பட வேண்டும். முப்பது வங்கிகள் இணைந்திருக்கும் ‘உத்தம்’ என்கிற திட்டத்தின் அடிப்படையில், உரிமை கோரப்படாத நிலுவைத் தொகையை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு ஒப்படைக்கும் ரிசா்வ் வங்கியின் முனைப்பு பாராட்டுக்குரியது.

நன்றி: தினமணி (20 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்