TNPSC Thervupettagam

உறவை நிர்ணயிக்கும் சீனா

February 16 , 2021 1426 days 628 0
  • இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையுடன் மத்திய அரசு நல்லுறவைப் பேணி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவானது, தமிழர்களையும் தமிழக அரசியலையும் மையமாகக் கொண்டே பயணித்து வருகிறது. விரைவில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
  • இத்தகைய சூழலில், இந்திய-இலங்கை இடையேயான உறவை நிர்ணயிக்கும் மற்றொரு சக்தியாக சீனா மெல்ல மெல்ல உருவெடுத்து வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை எத்திசையில் எடுத்துச் செல்லும் என்பதே புரியாத புதிராக உள்ளது.
  •  நடுத்தர வருமானம் கொண்ட இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடனுதவி அளித்து வருகிறது. அந்நாட்டில் உள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை சீன நிறுவனங்களோ அல்லது சீனாவின் உதவியுடன் இலங்கை அரசோ மேம்படுத்தி வருகின்றன.
  • கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையத்தை இந்தியா, ஜப்பான் நாடுகளின் உதவியுடன் மேம்படுத்துவதற்கு இலங்கையின் முந்தைய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அண்மையில் பொறுப்பேற்ற அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு, அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா, ஜப்பான் நாடுகளிடம் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக இந்த முடிவை இலங்கை மேற்கொண்டுள்ளது.
  • இது ஒருபுறமிருக்க, இந்திய நிலப்பரப்புக்கு அருகில் அமைந்துள்ள இலங்கைக்குச் சொந்தமான யாழ்ப்பாணத் தீவுகளில் மின்சார வசதியை ஏற்படுத்தித் தரும் பொறுப்பை சீன நிறுவனத்திடம் இலங்கை அரசு ஒப்படைத்துள்ளது. அத்தீவுகள் தமிழகத்துக்கு வெகு அருகில் அமைந்துள்ளன.
  • இலங்கை அரசின் சிலோன் மின்சார வாரியத்துடன் இணைந்து இப்பணியை சீன நிறுவனம் மேற்கொள்கிறது. நெடுந்தீவு என்று அறியப்படும் டெல்ஃப்ட் தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய பகுதிகளில் மின்சார வசதியை சீன நிறுவனம் ஏற்படுத்தித் தரவுள்ளது.
  • ராமேசுவரத்துக்கு அருகில் அமைந்துள்ள நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சீன நிறுவனத்தைப் பணிக்கு அமர்த்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  • சுமார் ரூ.87 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை சீன நிறுவனத்திடம் இலங்கை அரசு ஒப்படைத்ததற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
  • எனினும், இத்திட்டத்துக்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும் அதில் சீன நிறுவனமே வெற்றியடைந்ததாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதில் இந்திய நிறுவனம் ஒன்று பங்கேற்று தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.
  • இலங்கையின் திரிகோணமலையில் கடந்த 1980-களில் கோபுரம் ஒன்றை எழுப்ப அமெரிக்கா முயன்றது. அதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி அளித்தது. ஆனால், அதுபோன்ற ஒரு நெருக்கடியை தற்போது எழுப்ப முடியாத சூழலில் இந்தியா உள்ளது.
  • மின்சார வசதி அளிக்கப்படவுள்ள 4 தீவுகள் மட்டும் இலங்கையின் முதன்மையான நிலப்பரப்புடன் தொடர்பில் இல்லாமல் உள்ளன. அத்தீவுகளில் மின்சாரத்துக்காக டீசல் ஜெனரேட்டர்களே தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் எழுவிதீவு சிறியது. நெடுந்தீவு பெரியது. அத்தீவில் இலங்கையின் கடற்படைத் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
  • விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்டம் தீவிரமடைந்தபோது, இத்தீவிலிருந்தே இலங்கை கடற்படை அவர்களை எதிர்கொண்டது.
  • இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில்தான் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இந்தியா - இலங்கை இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
  • இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதையும், அவர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13-ஆவது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படுவதையும் இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார். அவற்றை இலங்கை அரசு கடைப்பிடிக்க முயல்வதாகத் தெரியவில்லை.
  • ஆனால், அவர் வந்து சென்ற ஒரு மாதத்துக்குள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.
  • அதே வேளையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்குப்பகுதி முனையத்தை மேம்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இலங்கை அரசு வாய்ப்பளித்துள்ளது.
  • அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான முந்தைய அரசு தேர்தலில் தோல்வியடைந்ததற்கு இந்தியாவே காரணம் என்று ராஜபட்ச சகோதரர்கள் நம்புகின்றனர். எனவே, இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது என்பதில் அதிபர் கோத்தபய ராஜபட்சவும், பிரதமர் மகிந்த ராஜபட்சவும் உறுதியாக உள்ளனர். அதன் காரணமாகவே சீனாவின் தலையீடு இலங்கையில் அதிகரித்து வருகிறது.
  • தங்கள் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இந்தியா கருத்து தெரிவிக்கக் கூடாது என்று இலங்கை மக்கள் எண்ணுகின்றனர். இந்தியா - இலங்கை இடையேயான உறவை நிர்ணயிக்கும் சக்தியாக சீனா படிப்படியாக வளர்ந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. அதை இந்தியா எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

நன்றி: தினமணி  (16-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்