TNPSC Thervupettagam

உறுப்பறுத்தல் என்னும் தண்டனை

September 9 , 2024 131 days 120 0

உறுப்பறுத்தல் என்னும் தண்டனை

  • சில ஆண்டு​களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. அலுவலக நண்பர் ஒருவர், “நீங்க சொன்ன வேலையைத் தலையை அடமானம் வைத்தாவது முடித்து​விடு​கிறேன். இல்லை​யெனில், என் இரண்டு காதுகளையும் அறுத்​துக்​கொள்​கிறேன் சார்” என்று இயக்குநரிடம் சொன்னார். அவருக்கே உதவாத அவர் தலையை யார் அடமானத்​துக்கு வாங்குவர் என்று நினைத்துச் சிரித்துக்​கொண்டேன் (உள்ளுக்​குள்​தான்). காதை அறுத்​துக்​கொள்​வ​தாகச் சொன்னதன் காரணம் தேடியது மனம்.
  • பிறகொருநாள் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்​துக் ​கொண்​டிருந்​தேன். அந்த வரலாற்றில் இருந்தது ஒரு விளக்கம். ‘வீடு​களில் தொடர்ந்து திருடிவந்த கும்பல் ஒன்றின் தலைவனைக் கடைத்​தெருவில் தூக்கில் தொங்க​விட்​டனர். ஏனைய இருவருக்கும் காதுகளை அறுத்து 50 கசையடிகளும் தரப்பட்டன’.
  • காதுகள் இல்லாமல் அதாவது, புற மடல்கள் இல்லாமல் தெருவில் நடமாடினால் அவர் தண்டிக்​கப்பட்ட குற்றவாளி என்று தெரிந்​து​விடும். அது அவமானம் அல்லவா? அத்தகைய அவமானத்தைத் தேடிக்​கொள்ளவும் தயார் என்றுதான் அலுவலக நண்பர் சூளுரைத்​துள்ளார். அக்காரி​யத்தை அவர் முடிக்க​வில்லை. சமீபத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. காதுகள் அறுபடாமல் அப்படியே இருந்தன.
  • ‘நான் இல்லாமல் கச்சேரி நடத்தவா? நான் இல்லாமல் நீ நூறு வெள்ளி வசூல் பண்ணி​விடு! என் காதை அறுத்துக் கீழே வைத்து​விடு​கிறேன்’ - இது எழுத்​தாளர் கு.அழகிரி​சாமி, மலாயாவில் 1954இல் எதன் பொருட்டோ டைரியில் எழுதி வைத்துள்ள ஒரு வெஞ்சினம். மீசையின் ஒரு பக்கத்தை மழித்துக்​கொள்​ளுதல், மொட்டை அடித்​துக்​கொள்​ளுதல்போல காதை அறுத்​துக்​கொள்​ளுதலும் பந்தயத்தில் ஓர் அம்சம்​போலும். ஒரு காலத்தில் அது நிறைவேற்​றவும் பட்டிருக்​கலாம். இப்போது யாரும் காதை அறுத்​துக்​கொள்வது இல்லை.

மூக்கறுத்தல்:

  • காதைப் போல மூக்கை அறுத்​தலும் அவமானப்​படுத்​தலுக்குத் தரப்படும் இன்னொரு பரிசு. போரில் தோல்வியடைந்த வீரர்​களின் மூக்கு​களையும் மேல் உதட்டையும் அறுத்து மூட்டை கட்டிக்​கொண்டு, வெற்றியடைந்த வீரர்கள் நாட்டுக்குத் திரும்​புவார்​களாம். மூக்கு மூட்டை! அது மூக்கறுப்புப் போர் எனப்பட்டது. மதுரையில் இது நடைபெற்றதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு.
  • சேலம் மாவட்ட பேளூர் கல்வெட்​டில், ‘மீசை​யுடன் மூக்கறுப்​பிச்சே’ என்ற வரி காணப்​படு​கிற​தாம். சூர்ப்​பணகையின் மூக்கை இலக்குவன் அறுத்​தான், அவளை மானபங்​கப்​படுத்​தினான். மூக்கை மட்டும் அல்ல, மார்பகத்​தையும் துண்டித்ததாக ஒரு பிரதியில் காணப்​படு​கிறது.
  • கண்ணகி மார்பைத் திருகி எறிந்து மதுரையை எரித்தது காப்பியம். வழமையாய் ஆண்களின் மூக்குகள் தாம் அறுக்​கப்​பட்​ட​தாகத் தெரிகிறது. இலக்கு​வன்தான் முதலில் பெண்ணின் மூக்கை அறுத்தவனோ என்னவோ? அதுவரை நிகழாததாக அது இருந்​திருக்​கலாம். அதனால்தான் ஆச்சரியமாக தேசம் முழுவதும் பேசப்​பட்டு, இதிகாசத்தில் ஏறிவிட்​டிருக்​கலாம்.

மூக்கறையன்:

  • மூக்கறு​பட்டவர் மூக்கறையன் என்று காரணப் பெயர் பெற்றார். ‘மூக்​கறைக்கு முகுரம் காட்டினால் கோபம் வரும்’ என்பது ஒரு பழமொழி (முகுரம் என்றால் கண்ணாடி). யார் தான் தன் முகம் விகாரமாய் இருப்பதை மனதார ஏற்பர்? ‘மூக்​கறையனுக்கு வாழ்க்கைப்​பட்டால் முன்னும் போகவிடான்; பின்னும் போகவிடான்’ என்பது மூக்கி​லியின் குணதோஷ விளக்கம். ‘மூக்​கறுபட்ட மூளி காதறுபட்ட காளியைப் பழித்​தாளாம்’. இருவரும் ஒரே தகுதி​யினர் என்பதைச் சுட்டு​கிறது இந்தப் பழமொழி.

நடுங்​க வைக்கும் தண்டனைகள்:

  • மெழுகுடன் ஈயத்தைக் காய்ச்சிக் காதில் ஊற்றுவது போன்றவை ஒரு காலத்தில் தண்டனைகளாக இருந்தன. இவற்றைக் கேட்கவே உடல் நடுங்​கு​கிறது. ‘காது அறுத்த கூலி கை மேலே’ என்று ஒரு பழமொழியும் நிலவு​கிறது. காதை அறுக்க மக்கள் தயங்கியது உணரப்படுகிறது.
  • மூக்கை இழந்தவன் மூக்கறையன் என்பது​போலக் காதறையன் என்று பெயர் வழங்கிய​தாகத் தெரிய​வில்லை. காதறை என்றால் காதுக் குழி என்றே பொருள். ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது என்பது விவிலிய வாக்கியம். பயனற்​றதைச் சுட்ட ‘காதறுந்த ஊசி’ என்றொரு பயன்பாடு உண்டு. ‘காது’ ஊசியில் நூல் கோக்கும் பகுதிக்குப் பெயர்.
  • ‘காதம்’ என்பதற்குக் கொலை என்பது முதல் பொருள். இரண்டாம் பொருள்தான் தூரத்தின் அலகு. நீண்ட, பெரிய, கிளிபோல மூக்குடையவனை, ‘மூக்கன்’ என்பதுபோல நீண்ட, பெரிய காதுடைய​வனைக் காதன் என்று சொல்வ​தில்லை. ஏனெனில், காதன் என்றால் கொலைகாரன். (தோடுடைய) செவியன் என்று வேண்டு​மானால் சொல்லிக்​கொள்​ளலாம்.
  • செவி இல்லாதவன் செவிடு; கண் இல்லாதவன் குருடு. குரு என்றால் ஒளி என்று பொருள் (ஒளி தருபவர் குருவானார்). குரு என்பதற்குக் கண் என்று தெலுங்கில் பொருள். எனினும் கேட்கும் திறன் இல்லாதவரையே செவிடு என்றும், பார்வைத் திறன் குறைந்​தவரையே குருடு என்றும் அழைப்பது மரபாக உள்ளது. ‘டு’ இன்மைப் பொருள் தருவது. மூக்கிலி என்பதுபோல, காதில்லாத வரை காதிலி என்றும் சொல்லலாம். ஆனால், காதிலிக்குச் செவிடன் என்று பொருள் (செவியிலி என்று பாம்புக்கு ஒரு பெயர் உண்டு).

தொண்டை:

  • தொண்டையை அறுத்துக் கொலை செய்வதைக் கேள்விப்​படு​கிறோம். அது தண்டனை முறையாகத் தெரிய​வில்லை. கொலை முறையில் ஒரு வழி. நஞ்சை உண்ட சிவனின் கழுத்தைப் பிடித்து, தொண்டை வழியாக மேலும் உள்ளே போய்விடாமல் அவரைத் தடுத்தது புராணம். அதனால் நீலகண்டன் ஆனார். பெரும் காவியத்தையே தன் கண்டத்திலே வைத்திருந்​த​தாகப் புகழப்பட்ட ஒருவர் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்​தார். அவருக்குக் காவிய ‘கண்ட’ கணபதி சாஸ்திரி என்று பெயர். இங்கு கண்டம் என்றால் தொண்டை. பல கண்டங்​களிலும் தப்பித்தவர்கள் உண்டு. அவை உயிரை மாய்க்கும் திறமுள்ள தருணங்கள்.
  • தண்டனையை அனுபவிக்க உடலைப் பயன்படுத்​தினர் முன்னோர். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற நிலையி​லிருந்து தூக்குத் தண்டனை வரை உடல் சென்றது. சமூகமாகப் போராடிப் போராடி உடலை ஒருவாறு மீட்டு​விட்​டோம். ஆனால், ‘துஷ்ட நிக்கிரஹம்’ செய்ய அதிகாரம் படைத்தோர் இப்போது வேறு வழியைக் கண்டு​பிடித்து​விட்​டனர். அது விசாரணையும் இல்லாமல், வழக்கையும் நடத்தாமல் சிறையில் வைத்துச் செய்யப்​படும் மனித வதை. உண்மையில் அது மனவதை.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்