- சார்லஸ் புகாவ்ஸ்கி ஓர் அமெரிக்கத் தெருக் கவிஞன் என்கிற லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸின் வர்ணனை என்னை அதிர்ச்சியடைய வைக்கவேயில்லை. புகாவ்ஸ்கி ஒரே இரவில் 10 கவிதைகளும், ஒரே வாரத்தில் 5 சிறுகதைகளும் எழுதிய வேகமான கவிஞன். மளிகைச் சாமான்கள் கொண்டு வரும் பைகளின் மீதுகூட பென்சிலால் அவர் ஏதேனும் கவிதைகளை எழுதியபடி இருப்பார் என்று புகாவ்ஸ்கியின் மகள் மரீனா புகாவ்ஸ்கி குறிப்பிடுகிறார். இவரது 1,000க்கு மேற்பட்ட கவிதைகள் வெளியிடப்பட்டிருந்தாலும் வெளியிடப்படாத புகாவ்ஸ்கியின் கவிதைகள் இன்னமும் இருக்கும் என்றே நினைக்கப்படுகிறது.
- சார்லஸ் புகாவ்ஸ்கி தலைமறைவுப் பத்திரிகைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் அமெரிக்கக் கவிஞர்; சிறுகதையாசிரியர்; நாவலாசிரியர். எழுதுவதற்காகப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்தபடி வாழ்ந்தவர். தட்டு கழுவுபவர், தபால்காரர், லிஃப்ட் இயக்குபவர், பெட்ரோல் போடுபவர், இரவுக் காவல்காரர், நாய் பிஸ்கட் செய்யும் தொழிற்சாலைத் தொழிலாளி, மாடு வெட்டுபவர், சுவரொட்டி ஒட்டுபவர் எனப் பல வேலைகள் செய்தபடி இருந்த இவர், எழுதுவதைச் சலிக்காது செய்துவந்தார். 1959இல் முதல் கவிதைத் தொகுதியுடன் எழுதத் தொடங்கிய சார்லஸ் புகாவ்ஸ்கி 45க்கு மேற்பட்ட கவிதைத் தொகுதிகள், உரைநடை, நாவல்கள், கடிதங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.
- ஒரு அமெரிக்கச் சிப்பாய்க்கும் ஜெர்மானியத் தாய்க்கும் ஜெர்மனியில் பிறந்த இவர், மூன்று வயதில் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டு, லாஸ் ஏஞ்சலஸில் வளர்ந்தார். கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு, ஓர் எழுத்தாளராவதற்காக நியூயார்க் சென்றார். தன் புத்தகங்களை வெளியிட முடியாத சோகத்தில் 10 ஆண்டுகள் எழுதுவதை நிறுத்திவிட்டுக் குடிகாரராக மாறினார். அல்சர் நோயால் ரத்தம் சொட்டத் தொடங்கிய பின், மீண்டும் எழுத்தாளரானார்.
- இவர் கவிதைகள் பெரும்பாலும் அமெரிக்கக் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வையும், நேரடி வார்த்தைப் பிரயோகத்தையும், வன்முறை, பாலுறவு கற்பனைகளையும் கொண்டவை. பெரும்பாலும் ஹென்றி சினாஸ்கி எனும் கற்பனையான கதாபாத்திரம் பற்றியதாகச் சுயசரிதைத் தன்மை கொண்ட கவிதைகள் இவருடையவை. அமெரிக்காவில் 60களில் தோன்றி வளர்ந்த சிற்றிதழ்களின் ஒரு விளைச்சல்தான் புகாவ்ஸ்கி. அமெரிக்கப் பண்டித இலக்கிய உலகத்தால் உதாசீனப்படுத்தப்பட்டவர். கவிதை எழுதத் தெரியாத மோசமான குடிகாரனாக வர்ணிக்கப்பட்ட இவர், எழுத்தின் மீதிருந்த தனது தணியாத தாகத்தால் வாசகர்களைச் சென்றடைந்தவர். அதுதான், இதுதான் என்றில்லாமல் எல்லா வகை அமெரிக்க இதழ்களுக்கும் நிறைய எழுதி அனுப்பிக்கொண்டே இருந்த சார்லஸ் புகாவ்ஸ்கியின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், அறிக்கைகள், மதிப்புரைகள், சித்திரங்கள் என்று அனைத்தையும் தலைமறைவு அச்சகங்களும், ‘பீட்ஸ்’, ‘கருப்பு மலையேறிகள்’, ‘நியூயார்க் சிந்தனைப் பள்ளி’ இதழ்கள் வெகுவாகப் பாராட்டி வளர்த்தன. ‘மிமியோகிராஃப் புரட்சி’ என்று வர்ணிக்கப்பட்ட ஸ்டென்சில் செய்யப்பட்டு வெளிவந்த சிறுபத்திரிகைகளின் நாயகனாக மாறினார் சார்லஸ் புகாவ்ஸ்கி. ‘அமெரிக்காவின் மிகச் சிறந்த கவி’ என்று பிரெஞ்சு இலக்கியவாதி ழான் பால் சார்த்தர், ழான் ஜெனே போன்றவர்களால் பாராட்டப்பட்டவர்.
- இவரது பரிசோதனை முயற்சிகளை ‘ஆக்சன்ட்’ (Accent) போன்ற இதழ்கள் வெகுவாகப் புறக்கணித்தன. 1944 ஏப்ரலில்இருந்து ஆகஸ்ட் 1960 வரை - மொத்தம் 28 முறை - 44 கவிதைகள், 33 சிறுகதைகளை இவ்விதழுக்கு அனுப்பினார். இவை கவிதைகளோ, கதைகளோ அல்லவென்று இவற்றை நிராகரித்த இந்த ‘ஆக்சன்ட்’ இதழ், ஒரு பெரும் பத்திரிகை அல்ல. அதுவும் சிறுபத்திரிகைதான். ஆனாலும் இவர்கள் புகாவ்ஸ்கியின் பரிசோதனை எழுத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. புகாவ்ஸ்கி தனது நேர்காணல் ஒன்றில் சொல்கிறார்: “அந்த இதழின் ஆசிரியர்கள் நான் செய்ய முடியாத, செய்ய விரும்பாத பழைய கவிதை விஷயங்களையே விரும்பினர். அந்த பழையவற்றையே நான் திரும்ப எழுதாதது, எனது துணிச்சல் சம்பந்தப்பட்டது என்று சொல்வதைவிட, அது எனது பிடிவாதக் குணத்தோடு சம்பந்தப்பட்டது”. இந்தப் பிடிவாதமே புகாவ்ஸ்கியின் முத்திரை என்று புரிந்துகொள்ள வேண்டும்.
- “உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். அங்கே ஒரு போர் நடந்து கொண்டிருக்கலாம். காடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கலாம். தெருவில் ஒருவர் உங்களைச் சுட முயலலாம். ஒரு சந்தில் நீங்கள் கத்தியால் வசமாகக் குத்தப்பட்டிருக்கலாம். வீட்டுக்கு வாருங்கள். உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்கிற எஸ்ரா பவுண்டின் இந்த வார்த்தைகளையே தனது பைபிளாக ஏற்றுக்கொண்டிருந்தார் புகாவ்ஸ்கி. வேறு விதமாகச் சொல்வதென்றால், எழுதியே தீர வேண்டும் என்கிற குணப்படுத்த முடியாத ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் புகாவ்ஸ்கி.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 07 – 2024)