TNPSC Thervupettagam

உலகக் கோப்பை சொல்லும் வாழ்வியல் பாடங்கள்

November 21 , 2023 371 days 265 0
  • இந்தியாவில் ஒன்றரை மாத காலமாக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்துவிட்டது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து, ஆஸ்திரேலியா ஆறாவது முறையாகக் கோப்பையை வென்று அசத்திவிட்டது. அணி ஆட்டமான கிரிக்கெட்டின் மூலம் நம் வாழ்க்கையில் பின்பற்ற சில விஷயங்கள் உள்ளன. அதுவும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் கிடைக்கும். அதுபோன்ற அம்சங்களை அலசுவோம்.

நிதானம் பிரதானம்

  • இந்திய அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டனான விராட் கோலி இந்த உலகக் கோப்பைத் தொடரில் 765 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கிரிக்கெட்டில் விராட் கோலி என்றாலே ஆக்ரோஷம்தான். களத்தில் விரைவாகவும் துடிப்பாகவும் ரன்களைக் குவிப்பதில்தான் அவருடைய கவனம் இருக்கும். ஆனால், இந்த உலகக் கோப்பையில் பக்குவப்பட்ட வீரராக அவர் விளையாடியது கவனிக்கத்தக்க அம்சமாக இருந்தது. மூன்றாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய அவர், அணியின் தேவைக்கு ஏற்ப தொடக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடி தன்னை நிலைநிறுத்திக்கொண்டு ஆடியதைப் பல ஆட்டங்களில் பார்க்க முடிந்தது.
  • இதன்மூலம் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடிந்தது. நிலைத்து நின்ற பிறகு வேகமாக ரன்களைக் குவிக்கும் உத்தியைப் பின்பற்றினார். இது வாழ்க்கையில் வெற்றி பெற ஓர் அழகான உத்தி. ஏனெனில், சிலர் எப்போதும் அதிரடியாக முடிவுகளை எடுத்து செயல்படுத்துவர். ஆனால், அது எப்போதும் வெற்றியைத் தராது. தேவைப்படும் வேளையில் நிதானமாக செயல்பட்டு, விவேகத்துடன் ஆலோசித்து பிறகு முடிவு எடுக்கவும் வேண்டியிருக்கும். அதுவே வாழ்க்கைக்கோ அல்லது தொழிலுக்கோ வெற்றியைத் தரும். இந்த உலகக் கோப்பையில் விராட் கோலியின் அணுகுமுறை அதைத்தான் உணர்த்தியது. இது அனைவரும் பின்பற்ற வேண்டிய ஓர் அம்சம் ஆகும்.

திறமையே துணை

  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தியாவின் தோல்விக்கு மோசமாகப் பந்துவீசிய ஷமிதான் காரணமென அவர்மீது ரசிகர்கள் அப்போது இணையத்தில் வெறுப்புப் பிரச்சாரம் செய்தனர். ஆனால், சொந்த நாட்டு ரசிகர்களின் தனிப்பட்ட தாக்குதல்களைக் கடந்து சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார் ஷமி. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை போன்றதொரு முக்கியமான தொடரில் இந்திய அணியின் வெற்றிக்காக முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.
  • ஆரம்பத்தில் நான்கு போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 7 போட்டிகளில் மொத்தம் 24 விக்கெட்டுகளுடன் தொடரின் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகச் சாதனை படைத்தார். இதில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தித் தன் திறமையால் முந்தைய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துவிட்டார். ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இது போன்று எதிர்மறையான விமர்சனங்களை அவ்வப்போது எதிர்கொள்ள நேரிடும். அவற்றால் நம்பிக்கை இழக்காமல், உத்வேகம் குறையாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். திறமையைப் பட்டைத் தீட்டுவதிலும், அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற்றம் அடைவதிலும் மட்டும் கவனம் செலுத்தினால் வெற்றி ஒருநாள் உங்கள் வசப்படும். இதற்கு ஷமியின் இந்த உலகக் கோப்பை ஆட்டம் ஓர் எடுத்துக்காட்டு.

தலைமைப் பண்பு

  • ஓர் அணியின் வெற்றி என்பது வீரர்களின் கூட்டு முயற்சியால் கிடைப்பதுதான். என்றாலும் அவர்களை வழிநடத்திச் செல்லும் கேப்டனுக்கு அதில் பெரும் பங்குண்டு. இந்த உலகக்கோப்பையில் அப்படி சிறப்பாக அணிக்கு தலைமை வகித்ததில் ரோஹித் சர்மாவுக்கு தனி இடம் உண்டு. உலகக் கோப்பையை வென்ற வகையில் பேட் கம்மின்ஸ் இன்னும் ஒரு படி மேலே நிற்கிறார். தொடக்கச் சுற்றுப்போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வியைத் தழுவியது. பிறகு எழுச்சி கண்டு நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதிப் பெற்றது. எந்த அணிகளிடம் தோல்வியுற்றதோ அதே அணிகளை நாக்-அவுட்டில் வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றிவிட்டது.
  • ஆஸ்திரேலியாவின் இந்த எழுச்சிக்கு பேட் கம்மின்ஸின் தலைமை ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனத்தை அறிவது, அதற்கேற்ப வீரர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தி கோப்பையை வசப்படுத்தினார். குழு பணியைச் செம்மையாக செய்து முடிக்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபரின் பங்கு மிக முக்கியமானது. சரியான திட்டமிடலும், சாதக பாதகங்களை அலசுவது, எந்தப் பணியை யாருக்கு வழங்குவது என்பன போன்றவற்றைக் கச்சிதமாக செய்து குழுவினரின் ஒத்துழைப்பைப் பெறுவதும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தேவை. இந்தப் தலைமை பண்புகளை வளர்த்துக் கொண்டால் எந்தக் குழு பணி அல்லது தொழிலில் திறம்பட ஜொலிக்கலாம்.

நம்பிக்கைக் கொள்

  • சுற்றுப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது ஆப்கானிஸ்தான். துரத்தலில் களமிறங்கிய மஞ்சள் படையை விக்கெட்டுளை வீழ்த்தி திணறடித்தனர் ஆப்கன் பந்துவீச்சாளர்கள். 91/7 என திணறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை தனி ஆளாய் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் கிளென் மேக்ஸ்வெல். அதிரடியாக விளையாடி 201* ரன்கள் எடுத்த அவர், கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசி வரை களத்தில் நின்று சாதித்தார். அதுவும் காலில் காயம் ஏற்பட்டபோதும் அசராத அவர், தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்ற கடைசி வரை போராடினார். கடும் முயற்சியால் எட்டாதிருந்த வெற்றியைத் தன் அணிக்குப் பரிசளித்தார்.
  • இந்தப் போட்டியில் ’எந்தத் தருணத்திலும் விட்டுக் கொடுக்காதே’ என்பதைத்தான் செய்து காட்டினார் மேக்ஸ்வெல். வாய்ப்புகள் வரும்போது நழுவவிடக் கூடாது. வெற்றி பெறவே முடியாது என்ற நிலை இருந்தபோதும் முடிந்தவரைக்கும் மோதி விளையாடும் உத்தியை மேக்ஸ்வெல் திறம்பட செயல்படுத்தினார். அந்த நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசுதான் அணிக்கு அவர் பெற்று தந்த மலைக்க வைத்த வெற்றி. ஆக, எந்தத் தருணத்திலும் தன்னம்பிக்கையை இழக்காமல் போராட வேண்டும். ஏனென்றால், நம்பிக்கை தரும் உத்வேகம் அலாதியானது!

முயன்றால் வெற்றி

  • இனியும் ஆப்கானிஸ்தான் அணியைக் ‘கத்துக்குட்டி’ அணி எனச் சொல்ல முடியாத அளவுக்கு இந்த உலகக் கோப்பையில் சிறப்பான, தரமான சில வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது அந்த அணி. முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் ஆப்கன் அணியிடம் மண்டியிட்டன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மரண பயத்தைக் காட்டியது. இந்த வெற்றிகளின் மூலம் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
  • போட்டி சூழ்ந்த உலகில் எதிரே நிற்பவர் யாராக இருந்தாலும் துச்சமாக நினைக்கக் கூடாது. ‘அவ்வளவுதானா’ என்கிற தலைக்கனம் வந்துவிட்டால் வீழ்ச்சிதான் பரிசாகக் கிடைக்கும். ஒருவரின் பலம், பலவீனம் சூழலைப் பொறுத்துக் களத்தில் வெற்றி தோல்வி மாறுபடும். யார் வேண்டு மானாலும் வெற்றியை எட்டலாம், தோல்வியையும் சந்திக்கலாம். எனினும் உண்மை யான பயிற்சியும் முயற்சியும் இருப்பவருக்கு நிச்சயம் ஒரு நாள் பெரு வெற்றி கிட்டும். அதற்கு பலம், பலவீனம் என்கிற பேதங்கள் கிடையாது.

நன்றி: இந்து தமிழ் திசை (21 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்