TNPSC Thervupettagam

உலகச் சமூக மாமன்றம் 2024 - உயர்ந்து நிற்கும் நம்பிக்கை

March 5 , 2024 140 days 262 0
  • நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில், உலகச் சமூக மாமன்றத்தின் (World Social Forum 2024) மாநாடு பிப்ரவரி (15-19) நடந்து முடிந்துள்ளது. ‘இன்னொரு உலகம் சாத்தியம்’, ‘மாற்று உலகம் சாத்தியமே!’ என்கின்ற முழக்கங்களோடு ஆரம்பித்த இந்த மாநாடு, ஏறக்குறைய 60 தீர்மானங்களை முன்னிறுத்தியுள்ளது. தொடக்க நாளில் நடந்த பேரணியில் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர் எனப் பல்வேறு பிரிவினர் கலந்துகொண்டது இன்னொரு சிறப்பம்சம்.

மாநாட்டின் பின்னணி:

  • உலகச் சமூக மாமன்றம், உலகமயமாக்கலுக்கு எதிராகவும் எதேச்சதிகாரங்களுக்கு எதிராகவும் 2001இல் பிரேசிலில் ஆரம்பிக்கப்பட்டது. 15 முறை இதன் மாநாடு பல்வேறு நாடுகளில் நடந்திருக்கின்றது. ஆசியாவில் மும்பையிலும் (2004), தற்போது நேபாளத்திலும் நடத்தப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 98 நாடுகளிலிருந்து ஐம்பதாயிரம் பேர் பங்கேற்றனர்.
  • 1,400 அமைப்புகள் இதில் பிரதிநிதித்துவம் பெற்றன. 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த சர்வதேச இளைஞரணிக் குழுக்கள் கலந்துகொண்டன. பதிமூன்று வகையான மையத் தலைப்புகளில் கருத்தரங்கங்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் நடைபெற்றன.
  • குறிப்பாகப் பொருளாதாரம், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை,சாதி வேற்றுமை, பாலின ஏற்றத்தாழ்வு, பண்பாட்டுத் தளத்தில் நடக்கின்ற போராட்டம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல்வேறு தலைப்புகளில் உரையாடல்கள் நடந்தன. வேற்றுமையில் ஒற்றுமையையும் பன்மைத்துவத்தையும் கொண்டாடுகின்ற பண்பையும் இம்மாநாட்டில் பார்க்க முடிந்தது. நாட்டை ஆளும் அரசுக்கும் மதத்துக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்ற முழக்கம் விண்ணை முட்டியது.

போர்களும் புலம்பெயர்ந்தோரும்:

  • சமகாலப் போர்களைப் பற்றி இம்மாநாட்டில் அதிகம்விவாதிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யாவும், காசா மீது இஸ்ரேலும் நிகழ்த்திவரும் போர்கள், மணிப்பூரில் வெடித்த வன்முறைபோன்றவற்றால் பலர் உயிரிழந்ததையும்,லட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டிருப்பதையும் பற்றிக் கவலை தெரிவிக்கப்பட்டது.
  • போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்புகள் வேண்டும்; மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்னும் குரல் ஓங்கி ஒலித்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

  • சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற அநீதியானது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றே பெண் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர். இயற்கைப் பேரிடர், போர்கள், இனக் கலவரம், வறுமை, பட்டினி, கரோனா பொதுமுடக்கம் என்று எந்தச் சூழலை எடுத்துக்கொண்டாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் திருநர்களும்தான்.
  • இவர்கள் ஒன்றுகூடித் தங்களுக்கான அடையாளத்தை நிலைநாட்டவும், உரிமைகளைப் பெறவும் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற உலகளாவிய மனிதர்களின் தோழமையைப் பெறுவதற்கும் உலகச் சமூக மாமன்றம் ஒரு பெரிய இடத்தை உருவாக்கியிருந்தது.
  • சர்வதேச இளைஞர்களின் சங்கமம்: சர்வதேச அளவில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைக்கும் தளமாக உலகச் சமூக மன்றம் இருக்கிறது. நவீன டிஜிட்டல் ஊடக உலகத்தில் இளைஞர்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், சமூக மாற்றத்தின் கருவிகளாக டிஜிட்டல் கருவிகளை எப்படி மாற்றவேண்டும் என்றெல்லாம் அறிவுபூர்வமாக விவாதிப்பதற்கும் கலந்துரையாடுவதற்குமான அரங்கத்தை உருவாக்கியிருந்தார்கள். இளைஞர்கள் தங்கள் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினர்.
  • பிரச்சினைகளுக்குத் தீர்வு காண டிஜிட்டல் யுகத்தில் நாம் புதிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எப்படிப் பரிமாறிக்கொள்ள முடியும், அவற்றை மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்த முடியும் என்பதைப் பகிர்ந்துகொண்டனர்.

ஜனநாயக பூமி:

  • உலகச் சமூக மாமன்றம் சமத்துவம், சமூக நீதி, சம வாய்ப்பு ஆகிய உயரிய மதிப்பீடுகளின் அடிப்படையில் பணிசெய்கின்ற மக்களையெல்லாம் ஒருங்கிணைக்கின்ற தளமாக அமைந்தது. மனித நேயத்துக்காகவும் மனித மாண்புகளுக்காகவும் உலகம் எங்கும் போராடிக்கொண்டிருக்கின்ற குரல்களின் சங்கமம் இது.
  • தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ், “பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு, கடைநிலையில் துன்பப்படும் மக்களுக்கு நம்பிக்கை தருகின்ற வகையிலும் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்குப் பொதுவான தீர்வுகள் தேடுகின்ற தளமாகவும் இந்த மாமன்றம் அமைந்திருக்கிறது.
  • எனவே, நாம் இந்தப் பூமியை அமைதியான சமத்துவமிக்க, ஜனநாயகப் பூமியாக மாற்ற வேண்டும்” என வலியுறுத்தினார். அவநம்பிக்கை மேகங்களை அகற்றுகின்ற வகையில், உலகச் சமூக மாமன்றம் நம்பிக்கையை விதைக்கும் நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்தியுள்ளது. அந்த நம்பிக்கை எவரெஸ்ட் சிகரம்போல உயர்ந்து நிற்கிறது!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்