TNPSC Thervupettagam

உலகப் புத்தக நாள்: ஏப்ரல் 23

April 22 , 2023 583 days 548 0
  • வாசிப்புப் பழக்கம் அருகிவருவதாக அவ்வப்போது ஆதங்கக் குரல்கள் எழுகின்றன. இன்னொரு புறம் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குபவர்களில் எத்தனை பேர் அவற்றை முழுமையாக வாசிக்கின்றனர் எனும் கேள்வியும் எழுகிறது. வாசிப்பைப் பரவலாக்கத் தனிப்பட்ட முறையிலான முயற்சிகள் அவசியம். அவற்றுடன் அந்தந்தப் பகுதி நூலகங்களும் ஆக்கபூர்வமாகச் செயலாற்றினால் இன்னும் நிறைய சாதிக்க முடியும்.
  • தமிழ்நாட்டில் மாநில மைய நூலகங்கள் 2, மாவட்ட மைய நூலகங்கள் 32, கிளை நூலகங்கள் 1,612, முழு நேரக் கிளை நூலகங்கள் 314, கிராமப்புற நூலகங்கள் 1,915, பகுதி நேர நூலகங்கள் 751, நடமாடும் நூலகங்கள் 14 என மொத்தம் 4,640 நூலகங்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்தி அவற்றின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

நூலகர்களின் பங்கு

  • ஓர் ஆசிரியர் தனது மாணவர்களுக்குக் கல்வியறிவு தந்து, நெறிப்படுத்துகிறார். ஆனால், ஒரு நூலகர் நினைத்தால், அப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் என அனைத்துத்தரப்பினரையும் பண்படுத்தி, சிறந்த சமூகத்தையே உருவாக்க முடியும். எனினும், நூலகர்களில் பலர் தங்களது நூலகத்தை மேம்படுத்த மேசை, நாற்காலி, ஒலிபெருக்கி என்று பொருள்சார்ந்த தேவைகளையே முன்வைக்கிறார்கள். மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதில் மிகச் சில நூலகர்கள்தான் ஈடுபாடு காட்டுகிறார்கள்.
  • நம் நாட்டில் நகரங்களில் மட்டுமல்லாமல், பெரும்பாலான கிராமங்களிலும் நூலகங்கள் உள்ளன. ஆனால், கிராமப் பஞ்சாயத்துகளின் கீழ் உள்ள பெரும்பாலான நூலகங்கள் முழுமையாகச் செயல்படுவதில்லை. செயல்படும் நூலகங்களை மக்களும் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. பல ஊராட்சித் தலைவர்களும் செயலர்களும் இதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களில் பலர் கல்வி, புத்தக வாசிப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். வாசிப்பை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளபோதிலும், அவை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. புத்தக வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவும் வாழ்க்கைக்கான வழிகாட்டுதலும் கிராமங்களில் எட்டும் தொலைவில் இருந்தும், அவற்றைக் கைக்கொள்ளாமல் கடந்துபோகும் நிலையே நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.

நம்பிக்கைக் கீற்றுகள்

  • தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நூலக நண்பர்கள்’, ‘மெய்நிகர் நூலகம்’ (Virtual library) உள்ளிட்ட திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட நூலகர்களின் அர்ப்பணிப்பு அவசியம். மாணவர்களும் அப்பகுதியில் வசிப்பவர்களை நூலகத்தில் இணைக்க முயற்சி எடுக்கலாம். ஒவ்வொரு நூலகத்திலும் வாரம் ஒருமுறையாவது புத்தகக் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். மாணவர்களின் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதனால் விடுமுறை நாள்களில் மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும்.
  • கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களின் நோக்கம் முழுமையாக நிறைவேற கிராமப் பஞ்சாயத்துகளின் கீழுள்ள அனைத்து நூலகங்களையும் பொது நூலகத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் எழுத்தாற்றலையும் படைப்பாற்றலையும் வெளிக் கொண்டுவரும் வகையில் மாணவர்கள் எழுதிய புத்தகங்களுக்கென்று தனித்துவமான புத்தகக் காட்சிகளை நடத்தலாம்.

செய்ய வேண்டியவை

  • ‘ஒவ்வொரு குழந்தையும் நூலக உறுப்பினர்’ என்ற திட்டத்தை அரசே கொண்டுவரலாம். இதை மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தலாம். முதலில் பெற்றோர்கள் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்களிடம் அவர்களது குழந்தையின் நூலக உறுப்பினர் அட்டை வழங்கலாம். இரண்டாம் கட்டமாக, அரசு மருத்துவமனை செவிலியர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள, ஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் உடல்நலனைப் பரிசோதிக்கவும் வீடு தேடிச் செல்லும்போது அவர்களின் மூலம், உறுப்பினர் அல்லாத பிள்ளைகளையும் நூலக உறுப்பினர்களாக இணைக்கலாம். மூன்றாம் கட்டமாக, பிள்ளைகளின் ஐந்தாம் வயதில் பள்ளிகள் மூலம் அப்பகுதி நூலகத்தைத் தொடர்புகொண்டு, அவர்களை நூலக உறுப்பினர்களாகச் சேர்க்கலாம். குழந்தைகள் விரும்பிப் படிக்கும் புத்தகங்கள் அடங்கிய ஒரு புத்தகத் தொகுப்பையும் வழங்கலாம். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் சிறு வயது முதலே புத்தகம் - நூலகம் என்று பிணைக்கப்பட்டு, புத்தக வாசிப்போடு இணைக்கப்படும்.
  • தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்குப் புத்தக வாசிப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், மாணவர்களுடைய வாசிப்புப் பழக்கம் முறையாக உருவாகவும் இத்திட்டம் முழு அளவில் வெற்றி பெறவும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நூலகரை அரசு நியமிக்க வேண்டும் அல்லது பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஒருவரை நூலகராக அந்தந்தப் பள்ளிகள் உடனடியாக நியமிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடையே மாபெரும் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்த முடியும்.

நன்றி: தி இந்து (22 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்